» உலகமயமும் தமிழ்த் தேசியமும்

ஆழிப் பேரலையை விட அதிவேகத்தோடு உலகமயப் பொருளியல் உலகமக்களைத் தாக்கி வருகிறது. உழைப்பு, இயற்கை, பணம் ஆகியவைமட்டுமின்றி, புன்னகை, அழுகை, பெண்ணின் நளினம் ஆணின் உடற்கட்டு..... அனைத்தும் சந்தை சரக்காகி வருகின்றன. முதலாளியம் என்றாலே சுரண்டல்தான். உலகமயம் என்பது தீவிரச் சுரண்டல். உலகச் சந்தையையும், உள்நாட்டுச் சந்தையையும் தடை ஏதுமின்றி தாராமயமாக்குவதன் வழி, வர்த்தகம் மற்றும் நிதிமூலதனம் ஆகியவை நாட்டு எல்லைகளைக் கடந்து தங்குதடையற்றுப் பரவுவதற்கான ஏற்பாடுதான் உலகமயம் (Globalization) எனப்படும், இதற்கான பொருளியல் கொள்கையைப் புதிய தாராளமயம்(Neoliberalism) என்றும் கூறுவர்.இக் கொள்கை 1980களில் வட அமெரிக்க ஆட்சியாளர் ரீகன்(Reagan), பிரிட்டனின் தாட்சர்(Thatcher) ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. ஆயினும் மூலதனம் உலகம் முழுவதும் பரவி ஆதிக்கம் செய்வது புதிய போக்கல்ல.போட்டி முதலாளியத்தின் வளர்ச்சிப் போக்கில் முற்றுரிமை (ஏகபோகம்) தோன்றியது. அதன் வழி ஏகாதிபத்தியம் உருவாயிற்று.
"ஏகாதிபத்தியம் முதாலாளியத்தின் உச்சகட்டம்" என்று வரையறுத்த மாமேதே லெனின், அதன் முக்கியக் கூறுகளாக கீழ் வருவனவற்றைச் சுட்டிக் காட்டினார்.1. முற்றுறிமை நிறுவனங்கள் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் நிலை.
2. வட்டி மூலதனமும், தொழில் மூலதனமும் ஒன்றினைந்த நிதிமூலதன முற்றுரிமை மேலாதிக்கம்.
3. சரக்கு ஏற்றுமதியைவிட நிதிமூலதனமும் ஏற்றுமதி முதன்மை பெறுதல்.
4. உலகச் சந்தையை சில முற்றுரிமைக் கூட்டணிக்கு இடையே பங்கீடு செய்து கொள்வது.
5. நாடுகள் இம் முற்றுரிமை கூட்டணிகளுக்கிடையே பங்கு போடப்படுதல்.நாடுகளைப் பங்கு போடுவதில் ஏற்பட்ட மோதல்கள் தான் உலகப்போர்களுக்கு அடிப்படைக் காரணங்களாயின. இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி நாடுகள் விடுதலை அடைவது தீவிரம் பெற்றது. சோசலிச முகாம் ஒன்றும் அமைந்தது "கம்யூனிச அபாயம்" பரவாமல் தடுக்க ஏகாதிபத்திய நாட்டு அரசுகள் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு போன்றத் துறைகளில் மக்கள் நல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆயினும் சில பத்தாண்டுகளிலேயே புதிதாக விடுதலை பெற்ற நாட்டு ஆளும் வர்க்கங்களிடையே ஏகாதிபத்தியத்தோடு கைகோர்க்கும் போக்கு வலுப்படத்தொடங்கியது. 1980-களின் இறுதியில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், சோவியத் ஒன்றியமும் சோசலிசப் பாதையிலிருந்து வீழ்ந்த பிறது, இப்போக்குத் தீவிரம் பெற்றது. இக்காலக் கட்டத்தில் ஏற்பட்டத் தகவல் தொழில் நுட்பப் புரட்சி நிதி மூலதனப் பரவலுக்குப் பெருந்துணை புரிந்தது.
தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட புதிய உயர் தொழில் நுட்பங்கள் அறிவுசார் முற்றுரிமை முதலாளிகளையும் உருவாக்கியது. மூலதனத்தை வைத்து உலகைச் சுரண்டுவது போல "அறிவைக்" கொண்டு சுரண்டுவது என்ற வாய்ப்பு பெருமளவில் திறந்து விடப்பட்டது. குறுகிய காலத்திலேயே உலகின் முதல் இட முதலாளியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் வர முடிந்தது. இன்போசிஸ் மூர்த்தி, விப்ரோ பிரேம்ஜி போன்ற புதிய தகவல் முதலாளிகள் உருவானார்கள், இரண்டாவது உலகப்போரில் தரைமட்டமான ஜப்பான் விரைவிலேயே தொழில் நுட்பஏகாதியபத்தியமாக நிலைபெற்றது. மூலதனத்துக்கு நிகராக அறிவு என்பதும் சுரண்டல் ஆயுதமாக வளர்ந்து புதிய போக்காகும். உலக வர்த்தக அமைப்பு காப்புரிமை ஒப்பந்தம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவை வலுப்பெற வழிகோலியது.கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெறுவது, அதன் மூலம் முதலாளிகள் உருவாவது ஆசான் காரல் மார்க்ஸ்(Karl Marx) காலத்திலேயே முளைவிட்ட ஒன்றுதான். ஆயினும், இன்று இப்போக்கு தனித்தன்மை பெற்ற ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இது பற்றி விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. நிதிமூலதனத்தின் மேலாதிக்கமும், அறிவு முதலாளியத்தின் ஆதிக்கமும் கோலோச்சும் இக்காலத்திற்கு மார்க்சின் உபரிமதிப்புக் கோட்பாடு (Theory of Surplus Value) பொருந்தாது என்று கூறுவோர் உளர்.உண்மையில் உபரிமதிப்புக் கோட்பாடு இன்றுதான் கூடுதல் பொருத்தமுடையதாகவும், சுரண்டலை அறிவியல் வழியில் துல்லியமாக விளக்குவதாகவும் உள்ளது. ஆயினும் 'பறக்கும் மூலதனம்'(Hot Money) கோலோச்சுவது, அறிவே மூலதனமாகச் செயல்படுவது ஆகியவற்றோடு இணைத்து புதிதாக இக்கோட்பாட்டை விளக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இதுகுறித்து வேறு ஒரு வாய்ப்பில் பார்க்கலாம்.ஏகாதிபத்தியத்தின் இன்றைய சுரண்டல் வடிவமே உலகமயம். அதற்கான கொள்கையே புதிய தாராளமயம். இன்று உலகின் பெரும்பாலான நாடுகளின் ஆட்சியாளாகள் பின்பற்றும் கொள்கையாக புதிய தாராளமயம் உள்ளது. முன்பு போல் காலனி நாடுகளைக் கைப்பற்ற வேண்டிய தேவையோ, அதற்காக தங்களுக்குள் போர் புரிய வேண்டிய நிலைமையோ இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இல்லை. ஏகாதிபத்தியங்களுக்கும், புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்குமான முரண்பாடும் முன்னுக்கு வரவில்லை. மாறாக வளர்ந்து வரும் "மூன்றாம் உலக" நாடுகளின் ஆட்சியாளர்கள் ஒப்புதலோடு அந்நாடுகள் உலகமயக் காலனிகளாக மாறி வருகின்றன. இவ்வகை முதலாளிகள் உலகமயச் சுரண்டலில் ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக மாறிவிட்டார்கள். ஒரு சில நாடுகளில் தரகு முதலாளிகளாகவும், வேறுபல நாடுகளில் இளைய பங்காளிகளாகவும் இவ்வகை முதலாளிகள் இருக்கிறார்கள்.இந்தியப் பெருமுதலாளிகள்-குறிப்பாக முற்றுரிமை முதலாளிகள் உலகமயத்தின் பங்காளிகளாக வல்லரசுகளோடு கைகோர்த்திருக்கின்றனர். அம்பானி(Ambani), டாட்டா(Tata), பிர்லா(Birla), மூர்த்தி, டால்மியா(Dalmiya) போன்றவர்கள் ஐரோப்பா உள்ளிட்டு உலகநாடுகள் அனைத்திலும் வேட்டையாடுகின்றனர். எனவே உலகமயத்தை நிலைகாட்டுவதில் ஏகாதிபத்திய முதலாளிகளைப் போலவே, இந்தியப் பெருமுதலாளிகளும் அக்கறை காட்டுகின்றனர். உலகம் முழுவதும் இவ்வாறான ஆதிக்கக் கூட்டணிக்கும் மகக்ளுக்குமான முரண்பாடே முதன்மை பெற்றுள்ளது. பெரும்பாலான நாடுகளில் இது தேசிய முரண்‘பாடுகளின் ஊடாக வெளியிடப்படுகிறது. ஏனெனில் தேசியச் சந்தைகளையும், தேசிய வாழ்வையும் அழித்துதான் உலகமயம் நிலைபெறுகிறது. 'தடையற்ற போட்டி' என்ற பெயரால் தாராளமயம் நியாயப்படுத்தப்பட்டாலும், உண்மையில் சில்லோர் முற்றுரிமையை (Oligoply)நிலைநாட்டவே பயன்படுகிறது. இந்தியாவில் நுழையும் பன்னாட்டு நிறுவன மூலதனம் புதிய தொழில்களைத் தொடங்குவதைவிட, தொழில்களைக் கைப்பற்றவே இறக்கிவிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்துஸ்தான் லீவர் கம்பெனி(Hindustan Lever Limited) பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் ஐஸ்கிரீம்(Ice cream) தொழிலில் இல்லை. ஆனால் இன்று 85% ஐஸ்கிரீம் சந்தையைக் கைப்பற்றி இருக்கிறது. ஆனால் இந்நிறுவனம் புதிதாக ஐஸ்கிரீம் தொழில்சாலைகள் நிறுவிவிடவில்லை. ஏற்கெனவே சந்தையில் இருந்த குவாலிட்டி ஐஸ்கிரீம், டோலப் ஐஸ்கிரீம், மில்க்ஃபுட் ஆகியவற்றை விழுங்கி, இப்போது தன்னை முற்றுரிமையாக நிலப்படுத்தியிருக்கிறது. அருண் ஐஸ்கிரீம் போன்றவைத் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. கோக் மென்பான நிறுவனம் இந்தியாவில் முதலில் நுழைய முயன்ற போது, தனியாகத் தொழில் நடத்தி தடையில்லாப் போட்டியில் வென்றுவரவில்லை. முதலில் வடநாட்டு பார்லே கம்பெனியைக் கைப்பற்றியது. அன்று மென்பானச் சந்தையில் வடநாட்டில் கொடிகட்டிப் பறந்த தம்ஸ்-அப்(Thumbs Up), லிம்கா(Limca) ஆகியவற்றை பார்லேவினுடையவை. இதன்பிறகு கோக் விரைவில் பரவியது. தமிழ்நாட்டில் நீண்டகாலம் புழக்கத்திலிருந்த வின்சென்ட், காளிமார்க், மாப்பிள்ளை வினாயகர் போன்ற உள்ளூர் நிறுவனங்களை அழித்தது. இன்று இந்திய மென்பானச் சந்தையில் 60 விழுக்காடு கோக்கினுடையது. அதே நேரம் இந்தியப் பெருமுதலாளிகளில் பெரும்பாலோருக்கு உலகமயத்தால் பாதிப்பில்லை; ஆதாயமே. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய எஃகு இரும்பு நிறுவனமான கோரஸ் குழுமத்தை அண்மையில் டாடா கைப்பற்றியது. அடுத்து அமெரிக்காவில் உள்ள குமின் என்ஜின் கம்பெனி, ரிட்ஜ் பாஸ்டன் ஓட்டல், எனர்ஜி பிராண்ட் இன்கார்ப்பரேசன் போன்று அடுத்தடுத்து பலதுறைகளில் பெருநிறுவனங்களைக் கைப்பற்ற இருக்கிறது. எங்களது ஆண்டு வருமானத்தில் 30% வெளிநாடுகளிலிருந்து வருகிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் இது 50 விழுக்காடாக உயரும். என்று டாட்டா குழுமம் அறிவிக்கிறது. (இந்து-29-12-2006). புதிய தாராளமயம் புதிய தொழில்களை உருவாக்கும் என்று கூறுவது பெரும்பாலும் உண்மை இல்லை. மாறாக உள்ளூர் தொழில்களை அழிப்பதே பொதுப்போக்காக உள்ளது.தாராள இறக்குமதி அந்தந்த தேசிய இனத்தொழில் முனைவோரை விரட்டியடிக்கிறது. இதில் அதிக பாதிப்படைந்திருப்பது தமிழ்நாடு. இங்கு சிறுதொழில் உற்பத்திதான் முக்கியமானது. ஆனால் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 3.09 இலட்சம் ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. கணிசமானவை நொடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. பல இலட்சம் தொழிலாளர்கள் வீதியில் நிறுத்தப்பட்டது தான் கண்டபலன். உருவாகிற பன்னாட்டு நிறுவனத் தொழில்களும் தானியங்கிமயமானவை. அங்கு வேலைவாய்ப்பு உருவாவது மிகமிகக் குறைவு.பறக்கும் பணம் என்பது உலகமயத்தில் விளைந்த பெரும் சிக்கலில் ஒன்றாகும். நிதி மூலதனத்தின் பேயாட்சி இதன் மூலமே முதன்மையாகச் செயல்படுகிறது. பங்குச் சந்தையில் மட்டுமே உலவிடும் பணம் இது. சில நிறுவனங்களின் பங்குளை ஒரேடியாக வாங்கிக் குவித்துவைத்துக் கொண்டு, பங்குச்சந்தையில் அவற்றுக்கு கிராக்கி எற்படுத்தி, பன்மடங்காக்கி விலையேற்றி அதே பங்குகளை விற்றுவிட்டு பறந்து விடுவது. இந்த ஊக வணிகச் சூதாட்டம் அந்தந்த நாட்டுப் பொருளியலையே நிலைகுலையச் செய்துவிடும். இவ்வாறு ஊக வணிகத்தில் பங்குச்சந்தை நிதி மூலதனம் உலகின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு பறப்பதற்கு தகவல் தொழில் நுட்பப் புரட்சி துணை செய்கிறது. இன்டர்நெட் மூலம் பணம் நாடுவிட்டு நாடு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து விடுகிறது. இவ்வாறான ஊகவணிகமும், வெளிப்பணிவாய்ப்பும் (BPO) உலகமயத்திற்கு ஆதரவாக பெரும் மயக்கத்தையே மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான பணிமையங்கள் சென்னையில் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசன்ட், ஆல்செக்... என்று நிறுவப்பட்டுள்ளன. நவீன உலகில் அடையாளங்களாக, அறிவுப்பொருளாதாரத்தின் (Knowledge Economy) அடிப்படைகளாக இவை காட்டப்படுகின்றன. இவ்வாறான நிறுவனங்களை ஈர்ப்பதில் மாநில அரசுகளிடையே கடும் போட்டியே நிலவுகிறது. இதனால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி, 1998க்கும் 2005க்கும் இடையே ஆண்டுக்கு 30% என்ற அளவில் பாய்ந்து செல்கிறது. (சி.பி. சந்திரசேகர் சோசியல் சயின்டிஸ்ட் ஜன-பிப், 2006) இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 40% தகவல் தொழில் நுட்பத்துறையிலிருந்து வருகிறதாம். ஆனால் இத்துறையில் உருவாகியிருக்கிற பணிவாய்ப்பு வேளாண்மை தவிர்த்த பிறதுறை வேலைவாய்ப்பில் 0.21% தான் என்று தகவல் தொழில்நுட்ப முதலாளிகள் சங்கக் குறிப்பே கூறுகிறது. ஆயினும், ஒப்பீட்டளவில் அதிக சம்பளம் பெறும் வாய்ப்பு இத்துறையில் உள்ளது. 25வயதுக்குள் இருபதாயிரம், முப்பதாயிரம் மாதச் சம்பளத்தை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகம். இத்தொழிலுக்கு ஆள்சேர்ப்பு மையங்களில் முதன்மையானதாக சென்னையே உள்ளது. இங்குப் பணியில் சேருவோரில் மிகப்பெரும்பாலோர் ஏற்கனவே நல்ல வேலையில் அமர்ந்திருப்போர் வீட்டுப்பிள்ளைகளே, நகர்ப்புறங்களைச் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினரே. குறிப்பாக பார்ப்பனர்களும், பிற உயர் சாதியினருமே என்று சிஜேஃபுல்லர் மற்றும் அரிபிரியா நரசிம்மன் ஆகியோர் கூறுவது கவனிக்கத் தக்கது. (காண்க: Economic and Political weekly, ஜனவரி 21, 2006) டாடா கன்சல்டன்ட் சர்வீஸ், இன்போசிஸ், விப்ரோ, காக்னிசென்ட் டெக்னாலஜிஸ், சத்யம் கம்யூட்டர்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே இம் முடிவை இவர்கள் கூறுகின்றனர். இத்துறை பணியாளர்கள் உலகமயத்தின் பயனாளிகளாக இருக்கிறார்கள். இன்னொரு புறம் உலகமயத்தோடு சேர்ந்து ஆங்கில ஆதிக்கமும் வருகிறது. குறிப்பாக வெளிப்பணிமையங்களில் (Outsourcing centres) ஆங்கிலத்தில் உரையாடுவது, அதுவும் இந்திய உச்சரிப்பின் சாயல் இல்லாமல் உரையாடுவது முக்கிய தேவையாக முன் வைக்கப்படுகிறது. இம் மையங்களில் பணியாற்றுவோருக்கு ஜெரால்ட், ராபர்ட், எலிசபத், ரோசினா என்பன போன்று பொய்ப் பெயர்களே கூட கொடுக்கப்படுகின்றன. வெளிநாட்டு வெள்ளைக்கார வாடிக்கையாளர்கள் தாம் தம் நாட்டுக்காரரோடே உரையாடுவதாக மயக்கம் ஏற்படுத்தும் உத்தி இது.இந்தத் தகுதி பல தலைமுறையாக கல்விவாய்ப்பைப் பெற்ற பார்ப்பனர்களுக்கே இருப்பதால், அவர்களே அதில் அதிகம் வாய்ப்பு பெறுவதாகவும் மேற்குறித்த ஆய்வு கூறுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதில் இச்சமூகத்தவர்களே அதிகம் இருப்பதற்கும் இது முக்கிய காரணமாக அமைகிறது.இவ்வாறு பன்னாட்டு முதலாளிகள் இந்தியப் பெருமுதலாளிகள் பார்ப்பனர்கள் ஆங்கில ஆதிக்கம் என்ற கூட்டணி உலகமயத்தில் நிலைபெறுகிறது. இந்தக் கூட்டணிக்கு அனைத்திந்தியச் சந்தை அவசியமானது. வலுவான இந்திய மையம், அதில் அனைத்து அதிகாரங்களும் குவிவது என்பது தேவையான ஒன்று. உலகமயத்தால் அரசுகள் வலுவிழந்துவிடும் என்பது உலகமயக் கூட்டாளிகளுக்குப் பொருந்தாது.
கல்வி தருவது, மருத்துவம் அளிப்பது போன்ற சேமநலப் பணிகளிலிருந்து அரசு விலகிக் கொள்ளுமே தவிர, அரசு எந்திரம் உலகமயத்தால் பலவீனமடையாது. அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவி என்பது முன்னைவிட புதிய தாராளமயக் காலத்தில் தான் தெளிவாகத் தெரியும். தில்லிக்கு அருகில் குர்குவானில் ஹோண்டா நிறுவனத்திற்கு அடியாளாக காவல்துறை ஏவிவிடப்பட்டதும் ஒரிசாவின் கலிங்கா நகரில் பாஸ்கோ என்ற கொரியாவின் பன்னாட்டு கம்பெனிக்காக மண்ணின் மக்கள் வேட்டையாடப்பட்டதும் அண்மை நிகழ்வுகள். இந்தியாவின் வரவு செலவில் இராணுவத்திற்கு அளிக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பதும், மேலும் மேலும் அமெரிக்க வல்லரசின் இராணுவக் கூட்டணியில் இந்திய அரசு நெருங்குவதும் இப்போக்கிற்கு சான்று. வாட் என்ற மதிப்புக் கூட்டுவரி விதிப்பு, மாநிலத்தின் நிதி அதிகாரத்தைக் கடுமையாகத் தாக்கி, இந்தியா முழுவதையும் வழவழப்பான ஒரே சந்தையாக மாற்றும் நடவடிக்கை ஆகும். நதிகள் தேசியமயம், வேளாண்மையை பொது அதிகாரப்பட்டியலுக்குக் கொண்டு போவது, மத்திய சிறப்புப் படைகள் வலுவாக்கப்பட வேண்டும் என்பது போன்றவை தில்லியில் அதிகாரக்குவிப்பை முன்மொழிபவை ஆகும்.சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் தேசிய இனத் தாயகத்தையே கூறுபோட்டு அதற்குள் தில்லி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உலகமய சமஸ்தானங்களை நிறுவக் கூடியவை. தேசிய இன ஆட்சிப் பகுதிக்குள் உலகமயத்திற்கு வசதி செய்து தரும் தனித்தனி நகர அரசுகளை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.இதற்கு ஏற்ப வலுவான இந்தியா வல்லரசு இந்தியா ஐநாவில் நிரந்தர உறுப்பு நாடு என்ற அந்தஸ்தில் இந்தியா என்ற முழக்கங்கள் வாயிலாக இந்திய தேசிய வெறி கட்டமைக்கப்படுகிறது.தேசிய இன அடையாளங்களே வளர்ச்சிக்கு இடையூரானது என்ற கருத்து பரப்பப்படுகிறது.ஆயினும் உலகம் முழுவதும் உலகமயத்திற்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு அடித்தளமாக தேசிய இன உணர்ச்சிகளே அமைந்துள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக உலகமயத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு தேசிய இன உணர்ச்சியே அடித்தளமாக அமைச்திருக்கிறது என்பதற்கு வெனிசுவேலா, பொலிவியா, நிகரகுவா போன்றவையே சான்று பகர்கின்றன. ஸ்பானிய மொழி உணர்ச்சி, ஆப்ரோ-அமெரிக்க இன உணர்ச்சி ஆகியவற்றின் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆற்றலை பிடல்காஸ்ட்ரோ(Fidel Castro) வெளிக் கொணர்ந்திருப்பதும், மாயன் பழங்குடித் தொன்மங்கள் சபடிஸ்டாக்களின் வல்லாதிக்க எதிர்ப்புக்கு அடித்தளமிட்டுருப்பதை அதன் தலைவர் மார்க்கோஸ் விளக்குவதும் கவனங்ககொள்ளத் தக்கவை. இங்கம் உலகமய எதிர்ப்பு என்பது புனைவான இந்திய தேசியத்தோடு முரண்படவேண்டியது தவிர்க்க முடியாதது. ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டிய உலகமயக் கூட்டணி இந்தியத் தேசியம் வழியாகத்தான் செயல்படுகிறது.உலகமயத்தால் நசுக்கப்படும், உழவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்குண்ட சாதியினர், ஒதுக்கப்படும் சிறுபான்மையினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முதலிய புரட்சிகர சக்திகளை உலகமய எதிர்ப்பில் ஒன்றிணைக்கிற மகத்தான புரட்சிகர ஆற்றல் தமிழ்த் தேசியம் தான். சூழல் பாதுகாப்பு, மரபான தொழில் நுட்பப் பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகிய தளங்களில் உலகமயத்திற்கு எதிராகக் களம் அமைப்போர் ஒன்றிணைய வேண்டிய தளமும் தமிழ்த் தேசியம் தான்.தமிழ்த் தேசியப் புரட்சிதான் உலகமயத்தை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது.

Advertisement