» கம்பன் காப்பியக் கட்டமைப்பு

முன்னுரை: தமிழிலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத் தான் காப்பியகாலம் தொடங்குகிறது. இக்காப்பிய வளர்ச்சிக்கு வித்திட்டவர் இளங்கோவடிகள். காப்பியம் என்ற சொல் காவ்யம் என்ற வடசொல்லின் திரிபு என்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. காவியம் என்ற வடசொல்லின் பொருள் 'பாட்டு' அல்லது செய்யுள் என்பதாகும். ஒவ்வொரு இலக்கியத்திற்கும் ஒரு கட்டமைப்பு உண்டு. கவிஞன் ஒலிகள், சொற்கள், தொடர்கள் முதலியவற்றைப் பயன்படுத்திக் கவிதை புனைகின்றான். எனினும் இவற்றிற்கு அப்பால் இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கின்ற ஒருமைப்பாடு ஒன்றுள்ளது. அவ்வொருமைப்பாடு தான் அக்கவிதைக்கு ஓர் உள்ளுறைப் பொருளைத் தருகின்றது. காப்பிய இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் அதன் பல்வேறு கூறுகளையும் ஒருங்கிணைக்கும் ஒருமைப்பண்பு ஒன்றுள்ளது. அதனையே கட்டமைப்பு என்று கருதலாம். அக்கட்டமைப்பு கம்பராமாயணத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.கட்டமைப்பு பற்றிய கொள்கைகள்: காப்பியக் கட்டமைப்பு குறித்து அரிஸ்டாட்டில் முதல், இடை, கடை என்றும் முத்திறம் பெற்று முழுமையாக அமைதல் வேண்டும் என்று கூறுகின்றார். மேலும் அவர் பல்வேறு உறுப்புகளைக் கொண்டிருப்பினும் உறுப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து உயிர்ப் பொருளின் இயல்பைப் புலப்படுத்துவதைப் போன்று நாடகம், காப்பியம் முதலியன அமைதல் வேண்டும் என்றும் கூறுகின்றார். ஒரு தலைவனைக் குறித்து வருவன அனைத்தும் ஒருமை உணர்ச்சியைத் தோற்றுவிக்க முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்ச்சிகள் மட்டும் கட்டமைப்புக்குத் துணை செய்யும் என்று அரிஸ்டாட்டில் விளக்குகின்றார். தமிழ்க் காப்பிய மரபுகளில் கட்டமப்பு குறித்து விளக்கமாக கொள்கை ஒன்றும் இல்லை. ஒரு தலைவனைப் பற்றிய வரலாறு காப்பியமாகப் பாடப்படும் மரபு தமிழில் உள்ளது என்று உ.வே.சா. அவர்கள் குறிப்பிடுகின்றார். தன்னிகரில்லாதத் தலைவனுடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை இல்லறம், அரசியல் பற்றிய செய்திகளைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.பாடுபொருள்: காப்பியம் முழுவதையும் ஒருங்கிணைக்கின்ற பாவிகத்தை உள்ளுறைப் பொருள் என்று குறிப்படுகின்றோம். காப்பிய நிகழ்ச்சிகள் முழுவதிலும் உட்பொருளாக நின்று அனைத்தையும் இணைப்பது உள்ளுறைப் பொருள் என்னும் கருத்தில் இங்கு ஆளப்படுகின்றது. பாவிகம் என்பது காப்பியப் பண்பு என்கிறது தண்டியலங்காரம். இது கூறுகின்ற பாவிகம் காப்பியக் கட்டமைப்பைக் குறிக்கும் என்பார் எஸ்.இராமகிருஷ்ணன். காப்பியத்தில் இடம் பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஊடுருவி நிற்கும் ஒருமைப்பாடு உணர்ச்சியைத் தான் பாவிகம் என்று குறிப்பிட்டுள்ளார் என்று கருதலாம். கதையின் நடுநாயகமான பொருள் பாடுபொருள் எனப்படுகிறது. கதை நிகழ்ச்சிகள் அனைத்தும் எதனை மையமாகக் கொண்டு பின்னப்படுகின்றனவோ, அது இங்கே பாடு பொருள் எனக் குறிக்கப்படுகின்றது. பாடு பொருளும் பாவிகமும் தொடர்புடையன. பாடு பொருள் வெளிப்படையான கதையின் மையப் பகுதியைக் குறிப்பது. பாவிகம் அல்லது உள்ளுறை அக்கதையின் குறியீட்டுப் பொருளைக் குறிப்பது ஆகும். கம்பராமாயணக் கதையை எடுத்துக் கொண்டால் இராவண வதம் அதன் பாடுபொருள். காப்பிய நிகழ்ச்சிகள் அமைத்தும் இத்தலைமை பொருளை மையமாகக் கொண்டு பின்னப்படுகின்றன. இராவணவதத்தின் உள்ளுறைப் பொருள் அறத்தின் வெற்றியாகும். இராவணன் அறத்திற்கு எதிராக நிற்கின்றான். அவனுடைய வீழ்ச்சி அறத்தின் வெற்றியாகின்றது. இதனை வேறொரு வகையில் சொல்வதாக இருந்தால் சீதையின் கற்புத் திறத்திற்குக் கிடைத்த வெற்றி எனலாம். கற்பின் வெற்றி, அறத்தின் வெற்றி. எனவே அது பாவிகப் பொருளாகின்றது. எனவே எடுத்த எடுப்பிலேயே'ஆசலம்புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண்எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோச வம்புனை ஆற்றுஅணி கூறுவோம்'என்று சீதையின் கற்புத் திறத்தைப் பாராட்டுகின்றார் கம்பர்.கட்டமைப்புத் திறன்: காப்பிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மையக் கதையோடு ஒருங்கு இணைக்கப்படுகின்ற திறத்தைக் கட்டமைப்புத் திறன் என்று வ.வெ.சு குறிப்பிடுகின்றார். பாடுபொருளின் முதன்மையை வலியுறுத்தும் வகையில், முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாம் காப்பியப் பாடுபொருளுக்கு உறுதுணையாகின்றன. இராவணன் வீழ்ச்சி கம்பராமாயணத்தின் பாடுபொருளாதலால் காப்பிய நிகழ்ச்சகள் அதனை நோக்கி உருவாவதைக் கம்பர் ஆங்காங்கு குறிப்பிட்டுச் செல்லுகின்றார். கம்பராமாயணத்தின் பாடுபொருள் இராவணன் வீழ்ச்சி இராவணனை அழிப்பதற்காகப் பரம்பொருளான திருமால் அயோத்தியில் தசரதன் மகனாக அவதரிக்கின்றான். மனிதனாக நடிக்கின்றான். இதனைக் கம்பர் காப்பியம் முழுவதிலும் மறவாது நினைவுறுத்திக் கொண்டு செல்லுவார். எல்லா நிகழ்ச்சிகளிலும் இப்பாடு பொருள் ஊடுருவி நிற்பதைக் காட்டுவார். பாலகாண்டத்தில், முனிவனின் வேள்வியைச் சிதைக்க முனைந்த தாடகையை இராமன் கொல்லுகின்றான். இராமன் ஏவிய பகழி அவள் மார்பில் ஊடுருவிச் செல்ல, அவள் தரையில் வீழ்கின்றாள். அவளுடைய வீழ்ச்சி இராவணன் வீழ்ச்சிக்கு முன்னறிவிப்பாக இருப்பதாகக் கம்பர் பாடுகின்றார். இராவணன் இறுதியை முன்னரே அறிவிப்பது அவனுடைய வெற்றிக் கொடி அறுந்து வீழ்ந்ததைப் போன்று தாடகை வீழ்ந்தாள் எனக் கம்பன் உவமிக்கும் பொழுது காப்பியப் பாடு பொருள் நினைவூட்டப்படுகின்றது.இராமன் கைகேயின் சூழ்வினையால் முடிதுறந்து காடேகுகின்றான். காட்டிலே இருந்த தன் மனைவியை எடுத்துச் சென்ற இராவணனைக் கொன்று தன் மனைவியைச் சிறை மீட்கின்றான். எனவே இவ்விரண்டும் தொடர்பில்லாத தனிக் கதைகள் என்றும், இவ்விரண்டையும் ஒன்றாக இணைத்து, ஒருவனைத் தலைவனாக்கி வால்மீகர் அதனை ஒரு காப்பியமாக்கினார் என்று ஜெர்மானிய திறனாய்வாளர் கூறுகின்றார். மேற்போக்காகக் காண்போமாயின், தயரன் அரண்மனைச் சூழ்ச்சிக்கும் இராவணன் அழிவிற்கும் தொடர்பு எதுவும் இல்லை - ஆழ்ந்து சிந்தித்தால் இக்கருத்து உண்மையன்று என்பது புலப்படும். தயரதன் எவ்வளவோ மன்றாடியும் கைகேயின் மனம் மாறவில்லை. தேவர்களின் சூழ்ச்சியால் கைகேயின் மனமாற்றம் நிகழ்கின்றது. இராவணன் வீழ்ச்சிக்குரிய வித்து அயோத்தியா காண்டத்தில் விதைக்கப்படுகின்றது. காப்பியப் பாடுபொருளான இராவணன் வீழ்ச்சிக்கு இடையூறு செய்வது போலமைகின்றது பரதன் செயல். இராமனைத் திரும்பவும் அயோத்தி நகருக்கு அழைத்துச் செல்லப் பரதன் முயல்கிறான். இராமனுக்கும் பரதனுக்கும் நடக்கும் அன்புப் போட்டியில் இராமன் உரையிழந்து நிற்கிறான். இவ்வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல், செவ்வழித்து அன்று நம் செயல் என்று தேவர்கள் சிந்தையழிந்து கூறுகின்றனர். தேவர் கட்டளையை மறுக்காது குறித்த காலம் முழுவதும் அரசாள வேண்டும் என்று இராமன் பரதனை வேண்ட, அவன் திருவடி நிலைகளைப் பெற்றுக் கொண்டு திரும்புகின்றான். இராவண வதமே காப்பியப் பாடுபொருள் என்னும் கட்டுக்கோப்புத் திறனை உணர்ந்த கம்பர் கதையில் எழும் சிக்கலைத் தேவர் குறுக்கீட்டால் நீக்கி, இராமனைப் பஞ்சவடிக்குக் கொண்டு செல்கிறார். காப்பியத்தின் முழுப் பொருளில் கவனம் செலுத்துகின்ற கம்பர் இராவணன் தலையறுப்புண்டு தரையில் சாயப் போவதிற்குக் கடைக்கால் இட்ட நிகழ்ச்சியாகச் சூர்ப்பனகையின் மானபங்கத்தைச் சித்தரிக்கின்றார்.இறுதியில் இராமன் கணைகளால் இராவணன் வீழ்கின்றான். முக்கோடி வானாளும் முயன்றுடைய பொருந்தவமும் உடைய வீரன் மண்ணிலே வீழ்ந்து கிடக்கின்றான். அப்பொழுது அவன் மனைவி மண்டோதரி அவன் மேல் விழுந்து அழுது புலம்பும் பொழுது, கதை முழுவதையும் ஒன்றாக இணைத்து அவள் வாயிலாகப் பேச வைக்கின்றார் கம்பர்.'காந்தையருக்கு அணி அனைய சானகியார்
பேரழகும், அவர்தம் கற்பும்,
ஏந்துபுயத்து இராவணனனார் காதலும், அச்
சூர்ப்பனகை இழந்த மூக்கும்
வேந்தர்பிரான், தயரதனார் பணிதன்னால்
வெங்கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார்
பெருந்தவமாய்ப் போயிற்று அம்மா'கைகேயின் சூழ்ச்சியால் இராமன் காடுபுக்கதும், சூர்ப்பனகையின் தோற்றமும், இராவணன் சீதை மேற்கொண்ட காதலும், இராவணன் அழிவுக்கும், அரக்கர்களின் அழிவிற்கும் காரணமாகித் தேவர்களின் வாழ்வுக்குத் துணையாகின்றன என்று புலம்புகின்றாள் மண்டோதரி. காப்பியத்தின் பாடுபொருளான இராவணன் வீழ்ச்சி கம்பரின் புலமைத் திறத்தால் முன்னும் பின்னும் செவ்விதாக இணைக்கப்பட்டு முழுமை அடைகின்றது. கம்பருடைய கட்டுக்கோப்புத் திறத்தை வியந்து பாராட்டும் வ.வே.சு அச்சம்பவங்கள் அனைத்தும் பளிங்குக் கற்கள் போல நின்று இராவண வதமாகிய மண்டபத்தைக் கட்டவே கருவியாக நிற்கின்றன என்பது கவியின் அபிப்ராயம் எனக் குறிப்பிடுகின்றார்.முழுமைக் காட்சி: அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி கதையமைப்பு முதலும், இடையும், கடையும் அழகுற அமையப் பெற்று உறுப்புக்கள் ஒன்றோடென்று ஒன்றி இயங்கும் ஓர் உயிர்பொருளை ஒத்திருக்கின்றது கம்பராமாயணக் கதையமைப்பு. இராமாயணக் கதையின் முதற்பகுதியாக விளங்குவது மந்தரை சூழ்ச்சியாகும். அதற்குமுன் நிகழும் நிகழ்ச்சிகள் அம்முதல் பகுதிக்குத் துணையாகின்றன. இராமன் அரசு துறந்து காடுபுகுதலும், முனிவர்களைச் சந்தித்தலும் இம்முதற் பகுதியின் விளைவுகளாகும். இடைப்பகுதி, சூர்ப்பனகை சூழ்ச்சியில் தொடங்குகின்றது. கரதூடணர் வதையும், இராமன் சுக்கீரிவன் நட்பும் இவ்விடைப் பகுதியின் விளைவுகளாகின்றன. இலங்கைப் படையெடுப்பின் மூலமாக இராவணன் கொல்லப்படும் நிகழ்ச்சி கதையின் இறுதிப் பகுதியாகும். பரம்பொருள் இராமனாக அவதரித்ததன் நோக்கம் இங்கு நிறைவேறுகின்றது. அரக்கர்களின் அழிவு, நல்லவர்களின் வாழ்வாக அறத்தின் வெற்றியாக அமைகின்றது. இவ்வாறு முதல், இடை, கடை என்னும் முப்பகுதிகளும் ஒன்றோடொன்று இணைந்து முழுக்கல்லில் செதுக்கிய சிற்பத்தைப் போன்று முழுமைக்காட்சி அளிக்கின்றது.காப்பியத்தின் தொடர்பழகு: காப்பியத்தில் முன்னும் பின்னும் நிகழ்கின்ற செயல்கள், பேசும் பேச்சுக்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு, ஒன்றின் விளக்கமாகவோ, வளர்ச்சியாகவோ நினைவூட்டலாகவோ அமைந்து காப்பியத்தின் ஒருமைப்பாட்டு நயத்தை உயர்த்துகின்றன. 'இராமாயணத்தை முழுமையாக, ஒவ்வொரு பாடலையும் முழுமையின் பாகமாக, ஒவ்வொரு சொல்லையும் பாகத்துட் பாகமாக உறவு முறையோடு காண வேண்டும்' இதுவே காப்பியத் தொடர்பழகு என்று வ.சு.ப.மாணிக்கம் கூறுகிறார். தொடர்பழகினால் காப்பியம் ஒருமைக் கோலம் பெறுகின்றது. விசுவாமித்ர முனிவனின் பின்னே தயரதன் இராமனை அனுப்பியதை உவமிக்கப் புகுந்த கம்பர் 'மன்னன் இன்னுயிர் வழிக்கொண்டாலென' என்று உயிர் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உவமையைக் கூறினார். இராமன் தாடகையை அழித்து முனிவன் வேள்வியைக் காத்து, வில்லையிறுத்துச் சானகியைக் கரம்பற்றவிருக்கும் வேளையில், மிதிலைக்கு வந்த தயரதன் இராமனைச் சந்திப்பதை உவமிக்கின்ற புலவர் முன்னர்க் கூறிய உவமையை மறவாது,'தேவரும் தொழுகழல் சிறுவன் முன்பிரிவது ஓர்
ஆவிவந் தென்னவந்து, அரசன் மாடு அணுகினான்'என்று அமைப்பார். முன்னர்க் கூறிய உவமைக்குப் பொருத்தமாக நூற்றுக்கணக்கான பாடல்களுக்குப் பின்னர் 'பிரிந்த உயிர் உடலைமேவியதென்று' உரைத்து உவமையை முழுமையாக்கும் தொடர்பழகு சிறப்புடையதாகும்.காண்டங்களின் அமைப்பு: காப்பியப் பெரும்பிரிவுகளாகச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பெயர்களைத் தண்டியலங்காரம் கூறுகின்றது. கம்பருடைய காப்பியம் வால்மிகி காப்பியத்தைப் போலன்றி ஆறு காண்டங்களுடன் நிறைவு பெறுகின்றது. கம்பராமாயணத்தின் பெரும்பிரிவுகளான காண்டப் பெயர்கள் வால்மீகத்தை ஒட்டியே பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனப் பெயர் பெறுகின்றன. இராமனுடைய இளமைப் பருவ நிகழ்ச்சிகளை விளக்குவது பால காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் தவிர ஏனைய அயோத்தியா, ஆரணிய, கிட்கிந்தா காண்டங்கள் அவ்வவ்விடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தலைமை கருதிப் பெயர் பெறுகின்றன. யுத்த காண்டம் இராம இராவணப் போரைக் குறிக்கின்றது. சுந்தரகாண்டம் இலங்கையில் நிகழினும் அப்பெயர் பெறவில்லை. இராமன் நேரடியாகப் பங்கேற்காத காண்டம் இக்காண்டம். காப்பியத் தலைவன், தலைவியரின் ஞான சௌந்தரியத்தை, அழகைப் புலப்படுத்துவதால் சுந்தரகாண்டம் என்னும் பெயர் பெற்றது என்பர். யுத்த காண்டம் என்னும் பெயர் தமிழ் இலக்கண மரபுக்குப் பொருந்தவில்லை என்று கூறி, அது இலங்கை காண்டம் என்று பெயரிடப்பட்டிருக்க வேண்டும் என்று முருகப்பா என்பவர் கூறுவார். எனவே கம்பர் முதல் நூலை பின்பற்றியிருப்பது தெளிவாகின்றது.