» பாரதியின் படைப்பாக்கத் திறன்

மகாகவி என்று போற்றப்படும் பெருமைக்குரியவர் பாரதியார். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தில் வெறும் பார்வையாளனாக மட்டும் நின்றிராமல், அந்தப் போராட்டக்களத்தில் தானும் குதித்து பங்கு தாரனாகவும் விளங்கியவர். தேசிய வாதியாகவும், அதே சமயம் சர்வதேசிய வாதியாகவும், இந்திய மக்களின் விடுதலைக்காக மட்டுமல்லாது, மனித குலம் அனைத்தின் விடுதலைக்கும் பாடியவர். போர்க்குணம் மிக்க மனிதாபிமானியாகவும், ஜனநாயகவாதியாகவும், மலர்ந்த ஒரு கவிஞனைத் தமிழ் இலக்கியம் பாரதிக்கு முன்னாள் என்றுமே கண்டதில்லை எனலாம். இத்தகு சிறப்பு மிக்க பாரதியாரின் படைப்பாக்கத்திறனைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.'புவி அனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்து தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும் வசை என்னால் கழிந்த தன்றே'இவ்வாறு 1919 இல் எட்டயபுரத்து மன்னனுக்குத் தாம் எழுதிய பாட்டில் தன்னைப் பற்றியே பாரதி பாடியுள்ளார்.பாரதியின் பெண் விடுதலை:'பெண்ணின் பெருந்தக்க யாவுள' என பெண்மையை வியந்து போற்றியது தமிழ்நாடு. ஆனால் பிறசமயங்கள் வந்து புகுந்ததால், 'பெண் பாவப் பிறவி' என்றும், 'பெண்ணாகி வந்ததொரு மாய பிசாசாம்' என்றும், பெண்ணைப் பழிக்கும் இழிநிலை ஏற்பட்டது. மனித வாழ்வின் உயிரோட்டமான பெண்களை இழித்தும், பழித்தும் ஒதுக்கி வைத்த சிறுமையை பாரதியாரால் பொறுக்க முடியவில்லை. 'தையல் சொல் கேளேல்' என்ற ஒளவையின் ஆத்திசூடி பாரதிக்குப் பொருளற்றதாகப்பட்டது. அதனால் 'தையலை உயர்வு செய்' என்று புதிய ஆத்திசூடி பாடினார் பாரதி.'கண்கள் இரண்டினிலே ஒன்றைக் குத்தி காட்சி கெடுத்திடலாமோ பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமை அற்றிடும் கார்' என்று கூறியதோடு 'மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம்' என்றால், மனையாளும் தெய்வமன்றோ? என்று வினவி பெண்மையைப் போற்றி, பெண் விடுதலைக்காகப் போராடினார்.சமுதாய விடுதலை:சாதிப்பாகுபாடு இல்லாத சமதர்ம சமுதாயத்தைப் படைக்க விரும்பினார் பாரதி. 'சமத்துவம்', 'சகோதரத்துவம்' என்பது தான் பாரதியின் தலையாய கொள்கை. இக்கொள்கைகளின் அடிப்படையிலேயே புதிய சமுதாயத்தைக் காண விரும்பிய பாரதி சமுதாயத்தில் நடக்கும் பல கொடுமைகளைச் சாடி பல பாடல்களை எழுதியுள்ளார். மனித நேயம் இருந்தால் சாதிக்கொடுமை இருக்காது. இந்த உண்மையை உணர்ந்த பாரதி,'சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு தன்னில் செழித்திடும் வையம் ஆதரவுற்று இங்கு வாழ்வோம் - தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.'என்கின்றார். எந்தத் தொழிலையும் இழிவாகக் கருதக்கூடாது என்பது பாரதியின் கொள்கை. இவ்வுலகில் சாதி ஒன்றே, அது மனித சாதி என்பது, பாரதியின் அசைக்க முடியாதக் கருத்து.'மனிதரில் ஆயிரம் சாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை'என்றும் கூறுகிறார். இறை இன்பம் பெறுவதற்கு சாதித்தடை இல்லை என்றும் கூறுகின்றார்.பொருளாதார விடுதலை:பொருளாதார விடுதலைப் பற்றியும் பாரதியார் ஆழ்ந்து சிந்தித்துள்ளார். பொருளாதார விடுதலை எனில் தனிமனிதன் ஒருவன் உண்ணும் உணவிற்கும், உடுக்கும், தங்கும் வீட்டிற்கும், பிறர்க்கு அடிமைப்பட்டு வாழும் இழிநிலை கூடாது என்ற எண்ணம் தான் பொதுவாகத் தோன்றும்.'மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ?'என்று பொருளாதார விடுதலையோடு பாடி, சுதந்திர இந்தியாவைக் கண்டு மகிழ்ந்தவர் பாரதியார். பொது உடமைச் சமுதாயமே ஒப்பில்லாத சமுதாயம் என்பதைப் பாரதியார் தெளிவுபடுத்தியுள்ளார்.தேசிய ஒருமைப்பாடு:செந்தமிழ் நாட்டின் மீதும், அதனை உள்ளடக்கிய பாரதநாட்டின் மீதும் பற்றுடையவர் பாரதி. அதனால், 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என உரிமை கொண்டு பாடியுள்ளார். இந்த நாட்டில் உள்ள இமயத்தையும், கங்கையையும் முறையே, எங்கள் மலை, எங்கள் ஆறு, என உரிமையுடன் மகிழ்ந்து பாடினார் பாரதி. இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும், உணவின்றித் தனி ஒருவன் வாடுகின்ற நிலை இருந்தால், அந்தச் சமுதாயம் அழிக்கப்பட வேண்டிய சமுதாயம் என எச்சரிக்கின்றனர்.'இனி ஒரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்'என்று சமத்துவ சமுதாயத்தை நெறிபடுத்துகின்றார் பாரதியார்.பாரதியின் மொழிப்பற்று:பாரதியின் பாடல்கள் வாயிலாகத் தமிழ் மொழியின் இனிமை, பெருமை, சிறப்பு இவைகளை அறிவதோடு, தமிழ் இலக்கியங்களின் சிறப்பினையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்' என்று 'பிங்கல நிகண்டு' கூறுகிறது. இவ்வுண்மையை நன்கு உணர்ந்த பாரதியார் தமிழின் சுவை எத்தகையது என்பதைத் தம் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து, உணர்ந்தவாறே கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார்.'தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் அமரர் சிறப்பு கண்டார்'என்று தமிழ் சுவை அமுதத்திற்கு நிகரானது என்கின்றார்.பாரதியார் தமிழ், தெலுங்கு, ஹ’ந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு முதலான பல மொழிகளை நன்கறிந்த புலவன், பல்வகை மொழிகளிலே இனிமையான மொழி தமிழ் மொழி என்பதை,'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம்'என்று கூறுகின்றார். மேலும் தமிழைத் 'தேமதுரத் தமிழ்' என்றும் கூறுகின்றார்.'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவரைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை'என்று பாடி தமிழ்க்கவிஞர்களின் தனித்தன்மையை எடுத்துக் கூறும் பாரதியார், தமிழ் மொழிப் பற்றின் காரணமாக மட்டுமல்லாது, தம் கூற்று முற்றிலும் உண்மை எனவும் ஆணித்தனமாகக் கூறியுள்ளார்.இறைநோக்கு:பாரதியின் தெய்வ பக்திப் பாடல்கள் மிகப்பழமையானவை. ஆழ்வார்களும், நாயன்மார்களும் முன்னரே கூறிச் சென்றாலும், அவற்றுள்ளும் புதுமையைப் புகட்டி, இலக்கியச் சுவையுடன் பாடி உள்ளார். பாரதியின் பக்திப் பாடல்களில், 'தோத்திரப் பாடல்கள்', 'ஞானப்பாடல்கள்', என இருவகை தன்மையில் அமைந்துள்ளன. 'உண்மையே தெய்வம்' என்கிறார். அதனால் தான்,'உண்மையின் பேர்தெய்வம் என்போம் - அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் காண்போம்'என்று கூறுகின்றார். பாரதியார் கணபதி, முருகன், சக்தி, சங்கரன், காளி, முத்துமாரி மட்டுமல்லாது இயேசு, அல்லா என அனைத்துச் சமயக் கடவுள்களையும் புகழ்ந்துள்ளார். எனவே பாரதியாரைச் 'சர்வ சமய சமரச சன்மார்க்க ஞானி' என்று தெளிவாக உணர்ந்து போற்றுவோம்.இசைப்புலமை:மனிதன் உடம்பால் பறக்காவிடினும், உள்ளத்தால் பறக்கின்றான். அப்போது இயற்கையிலே பாட்டு தோன்றுகிறது என்று இசையின் தோற்றத்தைப் பற்றிப் பாரதியார் கூறுகின்றார். எண்வகை மெய்ப்பாட்டுடன், நடுநிலைமையையும் கூறி இவற்றில் ஒன்றோ, பலவோ கலந்தால் உண்மையான இசைப்பாடல் தோன்றும் என்கின்றார்.குயில் பாட்டில் பண்ணின் சிறப்பையும், நாதத்தின் மேன்மையையும் சுட்டிக்காட்டினார்.நாட்டுப்புறப்பாடலில் பாரதியின் ஈடுபாடு:நாட்டுப்புறப் பாடல்களில் உண்மையையும், உயிர் துடிப்பையும் உணர்ந்தவர் பாரதி, எனவே அப்பாடல்களைப் போற்ற வேண்டும் என்று கூறியதோடு மட்டுமின்றி, தன்னுடைய கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் பல்வகையான நாட்டுப்புறப் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளார்.பாரதியாரின் கவிதைகளில் காணப்படும் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தை வடிவம், நடை, பொருள் என்னும் மூன்று வகையாகத் திறனாய்வாளர்களின் பாகுபடுத்தியவர். பாரதி இயற்றிய அம்மாகண்ணுபாட்டு, வண்டிக்காரன் பாட்டு, புதிய கோணங்கி, பண்டாரப்பாட்டு, கும்மிப்பாட்டு, மறவன் பாட்டு என்பன சிறப்பு மிக்க நாட்டுப்பாடல் வடிவில் அமைந்துள்ளன. ஒளவையின் ஆத்திசூடி பாரதியின் ஆத்திசூடி
1. ஆறுவது சினம் ரௌத்திரம் பழகு
2. ஙப்போல் வளை கிளைபல தாங்கேள்
3. தையல் சொல் கேளேல் தையல் உயர்வு செய்
4. தொன்மை மறவேல் தொன்மைக்கு அஞ்சேல்
5. பொருள்தனைப் போற்றிவாழ் திருவினை வென்று வாழ்
6. போர்த் தொழில் புரியேல் போர் தொழில் பழகுஇது போன்ற பல இடங்களில் ஒளவையின் கருத்துக்கள் பாரதியின் புதிய ஆத்திசூடியில் எதிர்மறைப் பொருளுடன் இடம் பெற்றுள்ளன.குழந்தை இலக்கியம்:எளிய நடை, சந்தம், பதங்கள், பொது சனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினை உடைய காவியம், தற்காலத்தில் செய்து தருவோன், நமது தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோன் என்று கூறிய பாரதியின் புரட்சி மனப்பான்மை, அவருடைய பாடலில் தெளிவாகிறது. பாப்பா பாட்டில், சாதி வேறுபாடு கூடாது என்பதை உணர்த்தும் நோக்கில் குழந்தைகளுக்காக,'சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்கின்றார்.

Advertisement