» பெண்ணியத்திறனாய்வு இனி

மேலைநாடுகளில்:தமிழுக்கு அறிமுகமாகியுள்ள திறனாய்வு முறைகளுள் 'பெண்ணியத் திறனாய்வு' இன்று ஆய்வாளர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. மேலை நாட்டுத் திறனாய்வாளர்கள் தங்கள் நாட்டுப் படைப்பிலக்கியங்களைப் பார்த்து வகுத்த பெண்ணியத் திறனாய்வு முறைகளை நம்நாட்டுப் பெண்ணியத் திறனாய்வாளர்களும் அப்படியே பின்பற்ற முயன்று வருகின்றனர். மேலை நாட்டில் பேசப்படும் பெண்ணியம் ஒரே பெண்ணியம் அன்று. அது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. எனவே தான், அது 'அமெரிக்கப் பெண்ணியம்' என்றும், 'பிரெஞ்சுப் பெண்ணியம் என்றும், 'இங்கிலாந்துப் பெண்ணியம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணியத்திறனாய்வாளர்கள் ஒரே குழுவாக - ஒத்தக் கருத்துடையவர்களாக - இயங்கி வருகிறார்கள் என்று சொல்லவியலாது. அவர்கள் பல குழுக்களாக இயங்கி வருகிறார்கள்.கீழை ஐரோப்பிய நாடுகளில்?:இந்நாடுகள் போன்று பிற ஐரோப்பிய நாடுகளில் (ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், ஹாலந்து போன்றவை) பெண்ணியத் திறனாய்வு முறைகள் வீறு பெற்றுள்ளனவா என அறிய இயலவில்லை. நவீன மொழி - இலக்கியத் திறனாய்வுகளுக்குத் தாயகமான கீழை ஐரோப்பிய நாடுகளிலும் (போலந்து, செக்கோஸ்லோவேகியா, ருமேனியா போன்றவை) பெண்ணியத்திறனாய்வு முறைகள் வரவேற்பைப் பெற்றுள்ளனவா என்று தெரியவில்லை. இந்நிலையில் உலக அளவில் நவீன மொழி - இலக்கியத் திறனாய்வுகளில் துறை போகியவர்கள் பெண்ணியத்திறனாய்வுகளில் நாட்டம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் அங்கு உள்ளது. இதுதான் மேலைநாட்டுப் பெண்ணியத்திறனாய்வின் இன்றைய நிலை. இனி தமிழ்நாட்டுப் பெண்ணியத்திறனாய்வின் நிலைப்பாட்டைப் பார்ப்போம்.தமிழ்நாட்டில்:மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ள பெண்ணியத்திறனாய்வு முறைகளைப் பின்பற்றுவதில் தமிழ்நாட்டிலும் பல்வேறு நிலைகள் காணப்படுகின்றன. தொல்காப்பியத்திலிருந்து நேற்றைய படைப்பாளிவரை எல்லா ஆண்களுமே தங்கள் எழுத்துக்களை ஆணின் அதிகார மொழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் பெண்ணுக்கான மொழி இன்னும் உருவாகவில்லை என்று கவலை கொள்கிறார்கள். பெண்ணியத்திறனாய்வைப் 'பெண்ணியல் திறனாய்வாக (Gyno Criticism) அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதாகக் கூறுகின்றனர். இதனுடைய ஒட்டு மொத்தக் கருத்துருவம் என்னவென்றால், பெண்களின் படைப்புக்களைப் பெண்களின் மொழி கொண்டு, பெண்கள் இலக்கியக் கொள்கையின் துணையோடு பெண்களே திறனாய்வு செய்ய வேண்டும் என்பது தான்.தமிழ்க் கல்வியாளர்கள்:இத்தகையச் சூழலில் தமிழ்க் கல்வியாளர்கள் பெண்ணியம் பேசினால், 'இதன் வீரியத்தைச் செயலிழக்கச் செய்து விடுகின்றனர்' என்று குற்றம் சாட்டப்படுகின்றனர். இதுவும் கூட அமெரிக்கப் பெண்ணியத்தைப் பின்பற்றுவதால் வந்ததன் விளைவோ என்று கூடக் கருத இடமுண்டு. ஏனென்றால் இப்படிப்பட்ட குற்றச் சாட்டினை அமெரிக்கக் கல்வியாளர்கள் மீதும் அங்குள்ள பெண்ணியத் திறனாய்வாளர் சுமத்துகின்றனர். கல்வித்துறை சார்ந்த முன்னணி இலக்கியத் திறனாய்வாளர்களான மா. இராமலிங்கம், தி.சு. நடராசன், துரை, சீனிச்சாமி ஆகியோரின் பெண்ணிய விமர்சனங்கள் 'ஆதிக்கப் பார்வை கொண்டவை', 'ஆழமில்லாதவை', 'நுட்பமில்லாதவை', 'பழைய அறிவுப் பற்றாக்குறையைப் புதிய துறையில் சொல்கிறார்கள்' என்றெல்லாம் குறைபட்டு ஒதுக்கப்படுகின்றன. பெண்(ணியத்) திறனாய்வாளர்களும் இதற்கு விதி விலக்கல்லர். தி. லீலாவதி, மீனாட்சி முருகரத்தினம், சேதுமணி மணியன், செண்பகம் ராமசாமி ஆகியோரும் இத்தகுக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர்.புதிருக்கு மேல் புதிர்:படைப்பிலக்கியம் பற்றிய விமர்சனத்தில் தமிழில் குழு மனப்பான்மை உருவானது போலவே (க.நா.சு. குழு - கைலாசபதி குழு) பெண்ணியத்திறனாய்வை மேற்கொள்வதிலும் பல குழு மனப்பான்மை இங்கு மட்டுமல்ல, நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு மேலை நாடுகளிலும் உள்ளது. அதனால்தான் கிட்டத்தட்ட பத்தொன்பது வகையான பெண்ணியக் குழுக்கள் உள்ளன என்று ஓர் ஆய்வாளர் புள்ளி விவரம் தருகிறார். ஏற்கனவே மேலை இலக்கியத்திறனாய்வு முறைகள் நம் மாணவர்கட்குப் புரியாத புதிர்களாகவே இருக்க, புதிருக்கு மேல் இன்னொரு புதிராக இப்போது மேலை நாட்டுப் பெண்ணியத்திறனாய்வு முறை வந்து சேர்ந்துள்ளது.இந்திய மரபு?:இந்தியாவைப் போன்று இலக்கியத் தொன்மையும் பண்பாடல் பழமையும் மிக்க சீனா, ஜப்பான் போன்ற கீழ்த்திசை நாடுகளில் பெண்ணியத்திறனாய்வின் நிலை என்ன என்று பார்ப்போம். இந்நாடுகள் இலக்கியத்திறனாய்வு முறைகளுக்காக மேற்கத்திய நாடுகளை ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்பதே உண்மை. சீன இலக்கியங்கள் அவர்களது பின்னணியிலேயே ஆராயப்படுகின்றன. மேலை நாட்டில் சில இலக்கிய வகைகளும் திறனாய்வு முறைகளை உருவாவதற்கு ஜப்பானிய இலக்கியங்கள் வழிகாட்டியுள்ளன. ஜப்பானில் நாவல் வகை பத்தாம் நூற்றாண்டிலேயே தோன்றி விட்டது. மேலைநாட்டு படிமக் கவிதைகளுக்கும், குறியீட்டியல் நெறிகளுக்கும் ஜப்பானிய ஹைகூ கவிதைகளே அடிப்படையாய் அமைந்தன. ஆனால் பன்னெடுங்கால இலக்கியச் செழுமையும், கொள்ளை வளமையும் உடைய நாம் செய்வதென்ன? அயல்மரபுகளுக்கான அற்பத்தனமான வரவேற்பும், சொந்த மரபுகளுக்கான கண்மூடித்தனமான புறக்கணிப்பும்!பழைய வழி, புதிய வழி:இந்திய மரபில் பெண் என்பவளே சமுதாயத்தின் ஆணிவேராகக் கருதப்படுகிறார். தொல்காப்பியத்திலும் சங்க அக இலக்கியத்திலும் குடும்பம் என்ற அமைப்பு காப்பாற்றப்படுவதற்காகப் பெண்களே தலைமை மாந்தர்களாக அமைகின்றனர். காலப்போக்கில் பெண்கள் நிலை தாழ்ந்தனர் என்பது உண்மையே. ஆயினும் இந்திய மரபில் பெண்களுக்கிருந்த தலைமையிடத்தை மீண்டும் நிலைநிறுத்த அருளாளர்களும் சமுதாயத் தலைவர்களும் முயன்றுள்ளனர் என்பதை நாம் ஏன் ஏற்க மறுக்கிறோம்? இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ராஜாராம் மோகன்ராய், காந்தியடிகள், வள்ளலார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, திரு.வி.க., பெரியார், பாரதியார், பாரதிதாசன் என்று இப்பட்டியல் நீள்கிறதே!பரமஹம்சர் தன்னையே பெண்ணாகப் பாவனை செய்து கொண்டது மட்டுமல்லாமல் 'பெண் தன்னிலும் தாழ்ந்தவள்' என்ற இழிவான எண்ணம் தன்னை விட்டு முற்றிலுமாக விலக வேண்டும் என்று தன்னையே பெண்ணாக அலங்கரித்துக் கொண்டவர். தன்னுடைய மனைவி சாரதாதேவியையே காளிதேவியாகக் கருதி வழிபாடு செய்து வந்தவர். அவருடைய சிடர் விவேகானந்தர், பெண்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்தப் பாடுபட்டவர்; மானிட சக்திக்கு மீறிய சக்தியாகப் பெண் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு பேசியவர். இந்திய சுதந்திரத்தையும் பெண்களின் சுதந்திரத்தையும் இணைத்துப் பார்த்தவர் காந்தியடிகள். பெண்கள் அனுபவிக்கின்ற எல்லாத் துன்பங்களையும் ஆண்களும் அனுபவிக்க வேண்டும் என்று கருத்துரைத்தவர் வள்ளலார். ஆண்களும் பெண்களும் இயற்கையில் சமமானவர்களே என்றும், அதனால் ஆண்கள் கற்பது போல பெண்களுக்கும் கல்வியளிக்க வேண்டும் என்று தமக்கேயுரியமுறையில் நயமாகவும் பதமாகவும் பேசியவர் வேதநாயகர், பெண்ணினத்தை உயர்நிலையில் வைத்துப் பேசியவர் வேதநாயகர். பெண்ணினத்தை உயர்நிலையில் வைத்துப் போற்ற வேண்டும் என்ற கருத்தில் திரு.வி.க., 'பெண் உயராத வரை ஆண் உயராது' என்று அடித்துப் பேசியவர் பாரதியார். நடை, உடை, பாவனைகளில் ஆண் பிள்ளைகளைப் போலவே பெண் பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் பெரியார்; 'பெண்ணடிமை தீர்ந்தால்தான் மண்ணடிமை தீரும்' என்று பாட்டில் நாட்டியவர் பாவேந்தர்.இருவகைக் குடும்பம்:பத்தாம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டுவரை கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாகப் பெண்கள் நிலை தாழ்ந்திருந்த அவலத்தைப் போக்குவதற்காக 20 ஆம் நூற்றாண்டில் தொடக்கம் முதல் நடைபெற்று வருகின்ற இந்திய இயக்கங்கள் குறித்து நாம் அக்கறை கொள்வதில்லை; இந்திய அருளாளர்களின் அறிவுரைகளை நாம் கவனத்தில் ஏற்பதில்லை; சமுதாயத் தலைவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதில்லை. 'முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே' என்பது போல அயல்நாட்டுச் சரக்கு நமக்கு மயக்கம் தருகிறது. அந்த மண் வேறு மண். அதை நாம் உணர்தல் வேண்டும். அங்கு உருவாகும் குடும்பம் கலையும்; புரியும்; சிதறும் காணாமற் போகும். அங்குக் குடும்ப அமைப்பைக் காப்பாற்றுவதற்குக் குடும்ப உறுப்பினர்கள் யாரும் முயற்சிகள் எடுப்பதில்லை. மாறாக தம்முடைய தனி மனித சுதந்திரத்திற்குக் குடும்ப அமைப்புத் தடையாக இருப்பதால், அதைத் தகர்க்கவே முயல்கின்றனர். எனவே அந்தக் குடும்பம் மைய விலகு விசைக் குடும்ப'மாக விலகிச் செல்கிறது.ஆனால் இந்தியக் குடும்பத்தில் தனிமனித அக்கறையையும் ஆர்வத்தையும் விட குடும்ப உறுப்பினர்கள் மீது கொள்ளும் அக்கறையும் ஆர்வமும் மிகுதி. இதனால் பொது நலப்பண்பையும் மனித நேயத்தையும் வளர்க்கக் கற்றுக் கொடுக்கும் ஆரம்பப் பாடசாலையாக இந்தியக் குடும்பம் உள்ளது. இக்குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அது போன்ற சமயங்களில் இந்தியக் குடும்பம் கலகலப்பது போன்றும், கலைவது போன்றும் தோன்றும். ஆனால் அது மீண்டும் கூடும்; அன்பைப் பொழியும். இதனால் இந்தியக் குடும்பம் 'மைய நோக்கு விசைக்குடும்ப'மாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அது குடும்ப உறுப்பினர்கள் யாரையும் எளிதில் வெளியே செல்ல விடுவதில்லை!இந்தியப் பெண்ணியம்:'தாய்மை', 'குடும்பம்', 'பெண்' என்பதெல்லாம் கீழ்த்திசை நாடுகளுக்குரிய குறிப்பாக இந்தியாவுக்குரிய - கருத்துருவங்கள். இந்தக் கருத்துருவங்களை விளக்குவதற்கும் புரிந்து கொள்வதற்கும் இந்தியச் சிந்தனை மரபினால் தான் முடியும். மேலை நாட்டு அமெரிக்க - இங்கிலாந்து - பிரெஞ்சுப் பெண்ணியத்திறனாய்வுக் கோட்பாடுகளால் இந்தியப் பெண்ணியத்தின் கருத்துருவத்தை விளக்குதற்கும் இயலாது; புரிந்து கொள்ளவும் இயலாது. இந்நிலையில் இன்று நமக்குத் தேவையானது இந்தியப் பெண்ணியமே. இதனை, அருளாளர்களின் கருத்துரைகளை உளங்கொண்டும், சமுதாயச் சான்றோர்களின் அறிவுரைகளை அடியொற்றியும் மீட்டுருவாக்கம் செய்தல் நம் கடன்.