» திசைப் பெயர்ப் புணர்ச்சி

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்பன திசையை உணர்த்தும் பெயர்களாதலால் இவை திசைப் பெயர்கள் ஆகும்

ஒரு திசைப் பெயரோடு மற்றொரு திசைப் பெயரும் (வடக்கு + கிழக்கு = வடகிழக்கு) பிற பெயர்களும் (தெற்கு + நாடு = தென்னாடு) சேருவதைத் திசைப்பெயர்ப் புணர்ச்சி என வழங்குகிறோம்.

திசைப் பெயர்ப் புணர்ச்சிக்கான விதிமுறைகளை இப்பகுதியில் காண்போம்.

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
வடக்கு + மேற்கு = வடமேற்கு
வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்
குடக்கு + திசை = குடதிசை
(மேற்கு)
குணக்கு + திசை = குணதிசை
(கிழக்கு)

இவை நிலைமொழியின் ஈற்றில் உள்ள க் என்னும் மெய்யெழுத்தும், கு என்னும் உயிர்மெய்யெழுத்தும் கெட்டுப் புணர்ந்தன.

தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
தெற்கு + குமரி = தென்குமரி
தெற்கு + பாண்டி = தென்பாண்டி

இவை, நிலைமொழியீற்றில் உள்ள கு என்னும் உயிர்மெய் கெட்டு, றகர மெய் னகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.


மேற்கு + காற்று = மேல்காற்று
மேற்கு + ஊர் = மேலூர்

இத்திசைப் பெயர், திசைப் பெயரல்லாத வேறு பெயர்களோடு சேரும் பொழுது, நிலைமொழியிலுள்ள உயிர்மெய்யெழுத்தான கு கெட்டு, றகர மெய், லகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.

கிழக்கு + கடல் = கீழ்கடல்
கிழக்கு + நாடு = கீழ்நாடு

இத்திசைப் பெயர், பிறவற்றோடு சேரும் பொழுது, நிலை மொழியில் உள்ள ககர ஒற்றும், ஈற்றும் உயிர்மெய்யெழுத்தான குவ்வும், கிழ என்பதில் உள்ள அகரம் கெட்டுக் கீழ் என முதல் எழுத்து நீண்டும் புணர்ந்தன.

மேற்காட்டியவாறு, திசைப் பெயர்கள் புணரும் முறைகளைக் கூறும் நூற்பா பின்வருமாறு :


"திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாகத் திரிதலும் ஆம் பிற"- (நன்னூல் நூற்பா - 186)

Advertisement