» மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி

நன்மை, தீமை, மென்மை, மேன்மை, வெண்மை, செம்மை போல்வன, மை என்னும் விகுதியைக் கொண்டு முடிந்து பண்பை உணர்த்தும் பெயர்கள். ஆதலால் இவற்றை மையீற்றுப் பண்புப் பெயர்கள் என்பர்

இதனை அறிய, கீழ்க்காணும் நூற்பாவை அறிந்து கொள்க.

"செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர்
இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே" - (நன்னூல் நூற்பா - 135)

மேற்காட்டிய மையீற்றுப் பண்புப் பெயர்கள் நிலைமொழியாக நின்று, வருமொழியோடு புணரும் போது அடையும் மாற்றங்களைக் கீழ்வருமாறு அறிந்து கொள்க

௧)

நல்லன் = நன்மை + அன்
வெண்பட்டு = வெண்மை + பட்டு
வெண்குடை = வெண்மை + குடை
செம்மலர் = செம்மை + மலர்

இவை மை விகுதி மட்டும் கெட்டுப் புணர்ந்தன

௨)

பெரியன் = பெருமை + அன்
சிறியன் = சிறுமை + அன்

பண்புப் பகுதிகளின் மை விகுதி கெடுவதோடு, இடையில் உள்ள உகரம் (ரு, று) இகரமாகத் (ரி, றி) திரிந்துள்ளன

௩)

மூதூர் = முதுமை + ஊர்
பாசி = பசுமை + இ

முதுமை என்பதன் ஈறு (மை) போய், ஆதி (முதல்) நீண்டு மூதூர் என்று ஆயிற்று.
பசுமை என்பதில் ஈறு போய் ஆதி நீண்டு பாசி என ஆயிற்று

௪)

பைங்கொடி = பசுமை + கொடி
பைந்தார் = பசுமை + தார்

இவற்றுள் பசுமை என்பதன் ஈறு போய் முதல் நின்ற அகரம் (ப) ஐகாரமாய்த் திரிந்து (பை) வருமொழியின் முதல் எழுத்து இனவெழுத்தாய் (ங், ந்) மெய் மிகுந்து புணர்ந்துள்ளன

௫)

சிற்றூர் = சிறுமை + ஊர்
வெற்றிலை = வெறுமை + இலை

இவற்றின் ஈறு போய் (மை) நடுவில் உள்ள ஒற்று இரட்டித்துப் புணர்ந்துள்ளன

௬)

வெவ்வேல் = வெம்மை + வேல்
வெந்நீர் = வெம்மை + நீர்

இவற்றில், வெம்மை என்பதன் ஈறு (மை) போய், முன் ஒற்றாகிய மகர வொற்று வகர ஒற்றாகவும், ‘ந’கர ஒற்றாகவும் (வ், ந்) திரிந்து முடிந்தன

௭)

செங்கோல் = செம்மை + கோல்
செந்தமிழ் = செம்மை + தமிழ்

இவற்றில், செம்மை என்பதன் ஈறு (மை) போய், வருமொழி முதல் எழுத்துக்கு இனவெழுத்துகளான (ங், ந்) என்பன மிக்குப் புணர்ந்துள்ளன

மேற்காட்டிய, மையீற்றுப் பண்புப் பெயர்கள் புணர்ச்சியில் அடையும் மாற்றங்களைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகின்றது.

"ஈறுபோதல் ; இடை உகரம் இய்யாதல் ;
ஆதி நீடல் ; அடியகரம் ஐஆதல் ;
தன்னொற்று இரட்டல் ; முன்னின்ற மெய் திரிதல் ;
இனம்மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே" -(நன்னூல் நூற்பா - 136)

மேற்காட்டிய நூற்பாவின் அடிப்படையில் கீழ்க்காணும் முறையில், மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சியை மீண்டும் நினைவு கூர்க.

விதி எடுத்துக்காட்டு

1. ஈறு போதல் - வெண்மை + குடை = வெண்குடை
2. இடை உகரம் இய்யாதல் - பெருமை + அன் = பெரியன்
3. ஆதி நீடல் - பெருமை + ஊர் = பேரூர்
4. அடியகரம் ஐ ஆதல் - பசுமை + பொழில்= பைம்பொழில்
5. தன்னொற்று இரட்டல் - சிறுமை + ஊர் = சிற்றூர்
6. முன்னின்ற மெய் திரிதல் - வெம்மை + நீர் = வெந்நீர்
7. இனம் மிகல் - செம்மை + தமிழ் = செந்தமிழ்

உடலும் உயிரும்:
தமிழ் + ஆசிரியர் = தமிழாசிரியர்
கடவுள் + அருள் = கடவுளருள்
பொருள் + அனைத்தும் = பொருளனைத்தும்

நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவை தாமே ஒன்று சேர்ந்து விடும்.

இதற்குரிய விதி,
"உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" -(நன்னூல் நூற்பா - 204)

Advertisement