» எழுத்து

யாப்பிலக்கணத்தில் செய்யுள் அல்லது பாக்களுக்கு அடிப்படையாக அமையும் உறுப்பு எழுத்து ஆகும். இங்கே எழுத்து என்பது மொழியை எழுதுவதற்குப் பயன்படும் குறியீடுகளையன்றி அவற்றினால் குறிக்கப்படும் ஒலிகளையே குறித்து நிற்கின்றது. செய்யுள்களைப் பொறுத்தவரை மொழியின் ஒலிப் பண்புகள் சிறப்புப் பெறுகின்றன. இதனால் இந்த ஒலிப் பண்புகளுக்கு ஆதாரமாக அமையும் எழுத்துக்களை, அவற்றை ஒலிப்பதற்குத் தேவையான கால அளவுகளைக் கருத்தில் கொண்டு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.

எழுத்துவகை
உயிரெழுத்துக்கள் -
1 குறில்கள் அ, இ, உ, எ, ஒ
2 நெடில்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

மெய்யெழுத்துக்கள் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

உயிர்மெய் எழுத்துக்கள் -
1 குறில்கள் உயிர்க்குறில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்
2 நெடில்கள் உயிர்நெடில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்

எழுத்துக்களின் கால அளவுகள்

குறில் எழுத்துக்களின் ஒலி அளவு ஒரு மாத்திரை அளவினதாகக் கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையில் நெடில் எழுத்துக்களின் கால அளவு இரண்டு மாத்திரைகளாகவும், மெய்யெழுத்துக்களின் கால அளவு அரை மாத்திரைகளாகவும் உள்ளன. உயிர்மெய்க் குறில்களினதும், உயிர்மெய் நெடில்களினதும் கால அளவுகளும், முறையே ஒரு மாத்திரையாகவும், இரண்டு மாத்திரைகளாகவும் உள்ளன