» ஒன்பான் சுவை

ஐம்பெரும் காப்பியங்களுள் முதற் காப்பியமாகத் திகழ்வது சிந்தாமணி. விருத்தமெனும் ஒன்பாவிற்கு உயர் கம்பன் என்றாலும், தேவரின் விருத்தத்தில் கம்பனும் ஓர் அகப்பை முகந்து கொள்கிறான். கற்பவர்கள் உளமகிழப் புதுப்புது வண்ணங்களை கையாள்வது சிந்தாமணியின் தனிச்சிறப்பு.
ஒரு காப்பியத்தில் ஒன்பான் சுவையும் அமைந்திருத்தல் வேண்டும் என்பர் தண்டியாசிரியர். தொல்காப்பியர் மெய்ப்பாடு என்ற சொல்லாலும், தண்டியலங்கார ஆசிரியர் சுவை என்ற சொல்லாலும் இதனை வழங்குவர்.
நகையே யழுகை யிளிவரால் மருட்கை
யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென்
றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப (தொல். பொருள்.மெய். நூ.251)
என்பது தொல்காப்பியம்.
நகை இகழ்ச்சியிற் பிறப்பது அழுகை அவலத்தில் பிறப்பது இளிவரல் இழிப்பில் பிறப்பது பெருமிதம் வீரத்தில் பிறப்பது வெகுளி வெறுக்கத் தக்கனவற்றால் பிறப்பது; உவகை சிருங்காரத்தில் பிறப்பது.
மெய்ப்பாட்டின் தன்மைகளும், சிறப்புகளும் நாடக நூலுக்கே பெரிதும் வேண்டப்படுவதாயினும், இலக்கியங்களும் சுவைபட அமைதல் வேண்டும் என்னும் கருத்தின்படியே இங்கு குறித்துள்ளார்.
சிந்தாமணியில் பல இடங்களில் தேவர் இச்சுவைகளைத் தூவியிருக்கிறார். அச்சுவைகளை காண்பதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்.

Advertisement