» குறுந்தொகையில் எண்வகை மெய்ப்பாடுகள்

பண்டைத் தமிழ் மக்களது அன்பும் அறிவும் நிறைந்த இன்ப வாழ்வின் இயல்பினைப் புலப்படுத்துவன பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும், தமிழரின் அக, புற வாழ்வினை வகைப்படுத்தி விளக்கிக் கூறும் இனிய நூல்களாகும். ஒத்த அன்புடைய தலைவன், தலைவியின் அன்பினை எட்டே வரிக்குள் எடுத்துக் கூறுவது. தொல்காப்பியர் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியலில் எண்வகை மெய்ப்பாடுகளையும் அவற்றின் வகைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். எண்வகை மெய்ப்பாடுகள் மற்றும் 32 பொருண்மைகள் குறுந்தொகையில் சில பாடல்களில் பயின்று வந்துள்ளதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்காப்பியர் கூறும் எண் வகை மெய்ப்பாடுகளாவன:
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப” (தொல். மெய்ப். 3)
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் வெகுளி உவகை என்பன எண் வகை மெய்ப்பாடுகளாகும். எண்வகை, மெய்ப்பாடுகளின் வகைகளான 32 பொருண்மை பற்றியும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
நகை (மடன்) :
நகை இகழ்ச்சியிற் பிறப்பது, எள்ளல், இளமை, பேதமை, மடன் என்ற நான்கும் நகைப் பொருளாகும். இதனை நூற்பாவின் வாயிலாக அறியலாம்.
“எள்ளல் இளமை பேதைமை மடன்என்று உள்ளப்பட்ட நகை நான்கு என்ப” (தொல். மெய்ப். 4)
முறுவலோடு வரும் மகிழ்ச்சியில் நகை பிறக்கும். எள்ளல், இளமை பொதுப்படையாகத் தன்னிடத்தும் பிறரிடத்தும் நிகழும், நகையின் வகையான மடன் என்னும் மெய்ப்பாடு கீழ்வரும் பாடலில் வெளிப்படுவதைக் காணலாம்.
“மன்றஅரா அத்த பேஎம்முதிர் கடவுள்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கொடியர் அல்லர்எம் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே” (குறுந். 87)
தலைவியின் மன வருத்தத்தினால் நுதலில் பசப்பு, தோள் நெகிழ்பு ஏற்பட்டன. அறியாமை உடைய மக்கள் தலைவியின் நோய்க்குத் தலைவனே காரணம் என்று கூறினர். மக்கள் அறியாமையுடைய மடன் நெஞ்சை உடையவர்கள் எனக் கூறும் நிலையில் மடன் என்ற மெய்ப்பாடு இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.
அழுகை (அசை):
அழுகை, இளிவு, இழவு, அசை, வறுமை என்னும் நான்கு வகைப் பொருண்மையான் பிறக்கும். இதனைத் தொல்காப்பியர்,
“இளிவே இழவே அசையே வறுமையென
விளிவுஇல் கொள்ளை அழுகை நான்கே” (தொல். மெய். 5)
என்கிறார். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்நிலையிற் தாழ்தல், நல்குரவு என்ற பொருண்மையும் தோன்றும். கீழ்வரும் அடிகளில் அசை என்ற மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
“இவளே நின்சொற் கொண்ட என்சொல்தேறி
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்
மடல்தாழ் பெண்ணை எம்சிறு நல்ஊரே” (குறுந். 81)
தோழி தன் நிலையில் இருந்து தாழ்ந்து தலைவனைப் பற்றிப் பலவாறாக நல்ல சொற்களைக் கூறினமையினால், தலைவி நலமிழந்து, விரும்பி ஏற்றுக் கொண்டாள். இப்பாடல் கருத்தில் தோழி தன் நிலையில் தாழ்தல் என்ற மெய்ப்பாடு காணப்படுகிறது
இளிவரல் (வருத்தம்):
மூப்பு, பிணி, வருத்தம், மென்மை முதலிய நான்கும் இளிவரல் மெய்ப்பாட்டின் வழித் தோன்றும்.
“முப்பே பிணியே வருத்தம், மென்மையோடு யாப்புற வந்த இளிவரல் நான்கே” (தொல். மெய்ப். 6)
இழிப்பு தன் மாட்டும் பிறர் மாட்டும் உளதாகிய வருத்தத்தினால் பிறக்கும் தலைவன் பிரிவால் தலைவி வருத்தம் அடைவதைப் பாடல் வழி அறியலாம்.
“அதுகொல் தோழி காம நோயே
. . . . . . . . . . . . . . . . . . .
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடுஒல் லாவே” (குறுந். 5)
தலைவன் பிரிவால் காமநோய் உற்று, தலைவியின் தாமரைமலர் போன்ற மெல்லிய கண்கள் இரவு, பகல் உறங்காமல் வருந்தின. இந்த வருத்தம் தன்மாட்டுப் பிறந்த வருத்தம் என்ற மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.
மருட்கை (பெருமை):
மருட்கை வியப்பால் தோன்றுவது. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்ற நால்வகைப் பொருண்மையான் பிறக்கும்
“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே.” (தொல். மெய். 7)
பெருமை தான் கண்ட பெருமையின் வியப்பு, பிறர் கண்ட பெருமையின் வியப்பு என்ற இருவகையும் குறுந்தொகையில் பயின்று வருவதனைக் காணலாம்.
“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர்அள வின்றே சாரல்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே (குறுந். 3)
தலைவனுடன் தலைவி கொண்ட நட்பானது நிலத்தின் அகலம் போலவும், வானின் உயரம் போலவும், கடலின் ஆழம் போலவும் பெரிது என்றமையின் தான் கண்ட பெருமை பற்றிய வியப்பு, தலைவன் நட்புப் பெருகியது கொண்டதால் பிறர் கொண்ட பெருமை பற்றிய வியப்பு என இரண்டு வகையான பொருண்மையின் வாயிலாகப் பெருமை என்ற மெய்ப்பாடு வெளிப்படுவதை அறிய முடிகிறது.
அச்சம்:
பிறராலும், பிற பொருளாலும் தோன்றும். நான்கு வகைப் பொருண்மையான் அச்சம் பிறக்கும்.
“அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொல், மெய்ப். 8)
பிறரால் அச்சம் பிறக்கும் என்ற வழிப் பின்வரும் பாடலில் அச்சம் மெய்ப்பாடு வெளிப்படுவதைக் காணலாம்.
“கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல” (குறுந். 8)
தலைவன் பரத்தையாரிடத்துப் பெரிய மொழிகளைக் கூறிப் பின்னர் மனைவியிடத்துத் தம் கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றுகிற பாவையைப் போலத் தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் இயல்பினன் என்ற இக்கருத்தின் வாயிலாக அச்சம் என்ற மெய்ப்பாடு வெளிப்படுகிறது.
பெருமிதம் (இசைமை):
பெருமிதம் கல்வி, தறுகண், இசைமை, கொடை என்ற நான்கு வகைப் பொருண்மையான் பிறக்கும்.
“கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே.” (தொல். மெய்ப். 9)
இன்பமும் பொருளும் மிகுதியாக உண்டாயினும் பழியொடு வருவதை செய்யாமை என்ற இசைமை மெய்ப்பாடு கீழ்வரும் பாடலில் அமைவதை அறியலாம்.
“காலையும் பகலும் கையறு மாலையும்
மாஎன மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே” (குறுந். 32)
தலைவன் தலைவியை விட்டுச் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்தாலும் தலைவியை ஊரார் பழிக்காத வண்ணம் தலைவன் மடல் ஏறாது வாழ்ந்தான். தலைவி பிரிவை ஏற்றுப் பழியொடு வருவதைச் செய்யாது வாழ்ந்தான். இப்பாடல் வாயிலாக இசைமை மெய்ப்பாடு வெளிப்படுகிறது.
வெகுளி:
வெகுளி வெறுப்பினால் பிறப்பது. உறுப்பறை, குடிக்கோள், அலை, கொலை என்ற நால்வகைப் பொருண்மையான் தோன்றும்.
“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே” (தொல். மெய்ப். 10)
தலைவன் வரையாமை நீடித்தவழித் தலைவி சினந்து உரைக்கிறான்.
“முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
அலமரல் அசைவளி அலைப்பஎன்
உயவுநோய் அறியாது துஞ்சம் ஊர்க்கே” (குறுந். 28)
இது தலைவியின் துன்பத்தை அறியாது தலைவன் வரைவினை நீடித்தமையினால் தலைவி தலைவனைச் சினந்து உரைத்தது. குறுந்தொகைப் பாடலில் தலைவி சினந்து கூறும் களவு குறைவு.
உவகை (புலன்):
உவகை மகிழ்ச்சியில் பிறப்பது. செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நால்வகைப் பொருண்மையான் உவகை தோன்றும்.
“செல்வம் புலனே புணர்வு விளையாட்டென அல்லல் நீத்த உவகை நான்கே” (தொல். மெய்ப். 11)
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலன்களால் நுகர்தல் எனும் மெய்ப்பாடு கீழ்வரும் பாடலடிகளில் அமைதல் காணலாம்.
“ஒடுங்குஈர் ஓதி ஒள்நுதற் குறுமகள்
. . . . . . . . . . . . . . . . . . . . .
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே” (குறுந். 70)
தலைவன் தலைவியுடன் இன்புற்று, அவளது மென்மையை அறிந்து, இளமையைப் புணர்ந்து, நறுமணத்தை நுகர்ந்து, குளிர்ச்சியை உண்டு அவளது அழகினை உயிர்த்து, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனத் தலைவன் தலைவியை ஐம்புலன்களால் உய்த்து உணர்ந்து வெளிப்படுவதினால் புலன் என்ற மெய்ப்பாடு தோன்றுவதை அறியமுடிகின்றது.

Advertisement