» குறிஞ்சி

ஆசிரியர் : மாறன் பொறையனார்.

இடம் - மலையும் மலை சார்ந்த இடமும்
ஒழுக்கம் - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

௰௧)

பொன்னிணர் வேங்கை சவினிய பூம்பொழிலுள்
நன்மலை நாடன் நலம்புனைய -மென்முலையாய்
போயின சின்னாள் புனத்து மறையினால்
ஏயினார் இன்றி இனிது

௰௨)

மாலவரை வெற்ப! வணங்கு குரல்ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம்எம் - தூஅருவி
பூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப் பொன்விளையும்
பாக்கம் இதுஎம் இடம்

௰௩)

கானக நாடன் கலவான்என் தோளென்று
மானமர் கண்ணாய்! மயங்கல்நீ - நானம்
கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப்
புலம்பும் அகன்றுநில் லா

௰௪)

புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல்
தினைகாத் திரும்தேம்யாம் ஆக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு

௰௫)

வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து
மாந்தளிர் மேனி வியர்ப்பமற்(று) - ஆங்(கு) எனைத்தும்
பாய்ந்தருவி ஆடினே மாகப் பணிமொழிக்குச்
சேந்தனவாம் சேயரிக்கண் தாம்

௰௬)

கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட் பட்டு
மடிசெவி வேழம் இரீஇ - அடியோசை
அஞ்சி ஒதுங்கும் அதருள்ளி ஆரிருள்
துஞ்சா சுடர்த்தொடி கண்

௰௭)

மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட !
எஞ்சாது நீவருதி யென்றெண்ணி - அஞ்சித்
திருஒடுங்கும் மென்சாயல் தேங்கோதை மாதர்
உருஒடுங்கும் உள்ளுருகி நின்று

௰௮)

எறிந்தெமர் தாம்உழுத ஈர்ங்குரல் ஏனல்
மறந்தும் கிளியனமும் வாரா - கறங்கருவி
மாமலை நாட! மடமொழி தன்கேண்மை
நீமறவல் நெஞ்சத்துக் கொண்டு

௰௯)

நெடுமலை நன்னாட! நீள்வேல் துணையாக
கடுவிசை வாலருவி நீந்தி - நடுஇருள்
இன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள்
என்னாவாள் என்னும்என் நெஞ்சு

௨௰)

வெறிகமழ் வெற்பன்என் மெய்ந்நீர்மை கொண்ட(து)
அறியான்மற்(று) அன்னோ! அணங்(கு) அணங்கிற்(று) என்று
மறிஈர்த்(து) உதிரம்தூய் வேலன் தரீஇ
வெறியோ(டு) அலம்வரும் யாய்

Advertisement