Advertisement

» நாற்பது

ஆசிரியர் : மதுரைக் கண்ணங்கூத்தனார்.
௧)

பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பொழல் தாழ@
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து
@ தீம்பொழல் வீழ ஃ பொழுது

௨)

கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் கொடுங்குழாய்@
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து.
@ கொடுங்குழை

௩)

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்
தயிர்மணற் றண்புறவி னாலி - புரள
உருமிடி வான மிழிய வெழுமே@
நெருந லொருத்தி திறத்து.
@ இழித்தெழுங் தோங்கும்

௪)

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது
ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடுங் கடுக்கை கவின்பெறப்@ பூத்தன
பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி
வாடம பசலை மருந்து.
@ கவின்கொள்

௫)

இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ் சிதறி யவைபோலக் கோபந்
தவழுந் தகைய புறவு

௬)

தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்@
சென்றாரை நீடன்மி னென்று.
@நெறியிடை

௭)

நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந்
தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய்
பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல
எச்சாரு மின்னு மழை

௮)

மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்
பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வால்கூறும்
கண்ணிய லஞ்சனங் தோய்ந்தபோற் காயாவும்
நுண்ணுரும் பூழ்த்த புறவு

௯)

உருவினை கண்மலர்போற் பூத்தன கார்க்கோற்
றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை
முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
இன்சொற் பலவு முரைத்து

௰)

வானேறு வானத் துரற வயமுரண்
ஆனேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்பக்
கான்யாற் றொலியிற் கடுமான்றே ரென்றோழி
மேனி தளிர்ப்ப வரும்

௰௧)

புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்
வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல்
பூங்குலை யீன்ற புறவு

௰௨)

மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்
ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம்@
நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு மேரும் வலம்.
@ திண்ணிதால்

௰௩)

ஏந்தெழி லல்குலா யேமார்ந்த@ காதலர்
கூந்தல வனப்பிற் பெயறாழ - வேந்தர்
களிறெறி வாளரவம் போலக்கண் வெளவி
ஒளிறுபு மின்னு மழை.
@ ஏமாந்த

௰௪)

செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல வினிய நகும்

௰௫)

திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி
இன்குழ லூதும் பொழுது

௰௬)

கருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் - பெருந்தோள்
செயலை@ யிளந்தளி ரன்னநின் மேனிப்
பசலை பழங்கூண் கொள்.
@ அசோகினிளந்தளிர்

௰௭)

அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்
பறைக்குர லேறோடு பெளவம் பருகி
உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை
கொண்டன்று பேதை நுதல்

௰௮)

கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே
நல்லிசை யேறொடு வான நடுநிற்பச்
செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார்
மேனிபோற் புல்லென்ற காடு

௰௯)

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது
நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற்
றொடிபொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு

௨௰)

வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன
ஆறும் பதமினிய வாயின - |ஏறோ
டருமணி நாக மனுங்கச் செருமன்னர்
சேனைபோற் செல்லு மழை

௨௰௧)

பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே
சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற்
செல்வ மழைந்தடங்கட் சின்மொழிப் பேதைவாய்
முள்ளெயி றேய்ப்ப வடிந்து

௨௰௨)

இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து
புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார்
இளநலம் போலக் கவினி வளமுடையார்
ஆக்கம்போற் பூத்தன காடு

௨௰௩)

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந்
தண்டுளி யாலி புரளப் புயல்கான்று
கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ
ஒண்டொடி யூடுநிலை

௨௰௪)

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது
எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே
கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும்
பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம்
மெல்லவுந்@ தோன்றும்% பெயல்
@ எல்லியும் % செயல்

௨௰௫)

பருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
கருங்கால் வரகின் பொரிப்போ லரும்புவிழ்ந்
தீர்ந்தண் புறவிற் றெறுழிவீ மலர்ந்தன
சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று
கூர்ந்த பசலை யவட்கு

௨௰௬)

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி@
தூதொடு வந்த மழை.
@ தோன்றிசின் மென்மொழி

௨௰௭)

ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூற
வற்புறுத்தது
முருகியம்போல் வான முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி
உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப்@
பள்ளியுட் பாயும் பசப்பு.
@ பாராட்டில்

௨௰௮)

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது
இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்@
பொன்செய் குழையிற் றுணர் தூங்கத் தண்பதஞ்
செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர்
கவ்வை யழுங்கச் செலற்கு.
@ குமிழிணைப்பூ & குமிழிணர்ப்பூ

௨௰௯)

பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத்
தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகைகொண்ட
லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ்
செவ்வி யுடைய கரம்

௩௰)

வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந்
திருநிலந் தீம்பெய றாழ - விரைநாற@
ஊதை யுளரு நறுந்தண்கா பேதை
பெருமட நம்மாட் டுரைத்து.
@ திரைநாற

௩௰௧)

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது
கார்ச்சே ணிகந்த கரைமருங்கி னீர்ச்சேர்ந்
தெருமை யெழிலே றெறிபவர் சூடிச்
செருமிகு மள்ளரிற் செம்மாக்குஞ் செவ்வி
திருநுதற் கியாஞ்செய் குறி

௩௰௨)

கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற்
பாடஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு

௩௰௩)

கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி
குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும்@
இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை
மடமொழி யெவ்வங் கெட.
@ கொள்ளப் பிறக்கும்

௩௰௪)

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித்
தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப்
பெருவிறல் வானம் பெருவரை சேருங்
கருவணி காலங் குறித்தார் திருவணித்த
ஒண்ணுதல் மாதர் திறத்து

௩௰௫)

சென்றநங்@ காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர
வென்றி முரசி னிரங்கி யெழில்வானம்
நின்று மிரங்கு மிவட்கு

௩௰௬)

வினைமுற்றி மீளுந் தலைமகள் பாகற்குச் சொல்லியது
சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப
ஈர்ந்தண் தளவந் தகைந்தன - சீர்த்தக்க
செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர்
நல்விருந் தாக நமக்கு

௩௰௭)

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது
கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி
இருங்க லிறுவரை யேறி யியுர்க்கும்
பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன்
அருந்தொழில் வாய்த்த நமர்

௩௰௮)

தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை
ஆற்றுவித்தது
புகர்முகம் பூழிப்@ புரள வுயர்நிலைய%
வெஞ்சின் வேழம் பிடியோ டிசைந்தாடுந்&
தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ
ஒண்டொடி யூடு நிலை.
@ பூமி புரள % உயர்நிலை & இணைதாழ

௩௰௯)

அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த
கருங்குர@ னொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கெளவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு.
@ கருங்கதிர்

௪௰)

பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித்
தோழி தலைமகளை ஆற்றுவித்தது
வந்தன செய்குறி வாரா ரவரென்று
நொந்த வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி
இந்தின் கருவண்ணங்@ கொண்டன் றெழில்வானம்
நந்துமென் பேதை நுதல்.
@ களிவண்ணம் கொண்டது