» எவரையும் ஏளனம் நீ செய்யாதே

மனிதர் வெறுக்கும் சேற்றிலே
மலர்ந்து நிற்கும் தாமரை;
புனிதமான கடவுளை
பூசை செய்ய உதவுதே!

அழுக்கடைந்த சிப்பியில்
அழகு முத்தைக் காணலாம்;
கழுத்தில் நல்ல மாலையாய்
கட்டி மகிழ உதவுதே!

கன்னங்கரிய குயிலிடம்
காது குளிரும் கீதமோ;
இன்பம் இன்பம் என்றுதாம்
இன்னும் கேட்க செய்யுதே!

விசத்தில் மிக்க பாம்பிடம்
விலையுயர்ந்த இரத்தினம்;
அடடா அந்த இரத்தினம்
மனிதருக்கும் கிட்டுமோ?

ஊசி போன்ற முள்ளிலே
உயர்ந்த ரோசா மலருதே;
வீசி நல்ல மணத்திலே
விரும்பி அணிய செய்யுதே!

மோசமான இடத்திலும்
மிகுந்த நல்ல பொருளுண்டு;
யோசிக்காமல் எவரையும்
ஏளனம் நீ செய்யாதே!