Advertisement

» அசைந்த திரை! அஞ்சன விழிகள்!

ஆசிரியர் : சாண்டில்யன்.

பாலூர்ப் பெருந்துறையின் பிருமாண்டமான அந்தச் சுங்க மண்டபத்தில், பல நாட்டு வணிகரும் மற்றோரும் வாதிட்டதால் விளைந்த கூச்சலையும் மீறிக் காவலர் காதில் விழும்படியாகக் கலிங்கத்து மன்னனை நிந்தித்துக் கருணாகர பல்லவன் கூவிவிட்டதையும், அந்த நிந்தனை காதில் விழுந்ததும் வாள்களின் மேல் கைகளை வைத்த வண்ணம் காவலர் இருவர் அவனை அணுகத் தொடங்கி விட்டதையும் கண்ட சுங்க அதிகாரி அடியோடு நிலை குலைந்து திகைத்துப் போய்விட்டானென்றாலும், அதற்கு காரணமான இளைய பல்லவன் மட்டும், தன்னை எதிர் நோக்கி வரும் ஆபத்தைப்பற்றிச் சிறிதும் சிந்தியாமலும், கோபம தலைக்கேறி நின்றதால் விளைவைப் பற்றி அறவே கவலைப்படாமலும், உறையிலிருந்த தன் வாளை வெகு வேகமாக உருவினான். சாதாரணமாக நிதானத்தை இழக்கதவனும் திடபுத்தியுள்ளவனுமான கருணாகர பல்லவன் அன்று நிதானத்தை அறவே இழந்து உணர்ச்சிகளின் வசப்பட்டு வாளை உருவியதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. சுங்க அதிகாரி கூறிய விவரங்கள் அப்பொழுதும் அவன் புத்தியில் வளம் வந்து வந்து இளமையின் வேகத்தால் ஏற்பட்ட அவன் உணர்ச்சிகளை மேலும் மேலும் கொந்தளிக்கவே செய்தன. அந்தக் கொந்தளிப்பின் விளைவு அவன் வீரவதனத்தில் இரத்தக் குழம்பைப் பாய்ச்சிச் செக்கச் செவேலென அடித்திருந்ததாலும், அவன் அணிந்திருந்த அங்கி பழுப்பு நிறம் வாய்ந்திருந்ததாலும், சுங்கச் சாவடியின் பல இடங்களில் சுடர்விட்டுப் பழுப்புக் கட்டைகளுடனும் சிவப்பு ஜ்வாலைகளுடனும் நின்ற தீப்பந்தங்களைப் போலவே கருணாகர பல்லவனும் அந்தப் பெரும் மண்டபத்தில் நின்றான். பிற்காலத்தில் கலிங்கத்தின் பெரும் பகுதிகளை கொளுத்திவிட்ட அந்த இளைய பல்லவனுக்கு மட்டும் வாய்ப்பு இருந்திருந்தால், அந்தப் பெரும்பணி சித்திரா பௌர்ணமியின் அந்த இரவிலேயே நடந்திருக்கும். அத்தனை கோபத்தைக் கிளறி உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்துவிட்ட செய்திகளைக் கருணாகர பல்லவனின் செவிகளில் பாய்ச்சியிருந்தான் சுங்க அதிகாரி. இளையபல்லவனின் இயற்கைக் குணத்தை மட்டும் சுங்க அதிகாரி முன்கூட்டி உணர்ந்திருந்தால், தன்னந்தனியே வந்திருக்கும் ஓர் இளைஞன் ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களில் அத்துமீறி இறங்க மாட்டான் என்ற அசட்டு நம்பிக்கை மட்டும் அவனுக்கு இருந்திராவிட்டால், கலிங்கத்தின் ஊழியம் புரிந்தாலும் தமிழனாக பிறக்கும் பாக்கியத்தை செய்திராவிட்டால், அவன் வாயைத் திறந்தே இருக்கமாட்டான். ஆனால் பல்லவ முத்திரையுடன் கூடிய மோதிரத்தை இளைய பல்லவன் கரத்தில் பார்த்தவுடன் தமிழக அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனை நாசமாக விடக்கூடாது, எப்படியும் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே அவன் இளைய பல்லவனைத் தனியாக அழைத்துச் சென்று, பாலூரில் உள்ள நிலையை மெள்ள மெள்ள விவரித்தான். அவன் தன்னை முதன் முதலில் யாரென விசாரித்தபோது சற்றும் வியபெய்தாமல் கேள்விகளுக்குப் பதில் சொன்ன இளைய பல்லவன், சுங்க அதிகாரி தன்னைத் தனிமையில் வரும்படி சைகை காட்டி அழைத்துச் சென்றதும் சற்று வியப்பே எய்தினான். தனி இடத்தை அடைந்த்ததும், தன்னை ஊருக்குள் செல்ல வேண்டாமென்று அவன் தடுக்கவே அந்த வியப்பு பன்மடங்கு அதிகமாகியதால், அகல விரிந்த கண்களைச் சுங்க அதிகாரியின்மீது நிலைக்கவிட்டான் கருணாகர பல்லவன். இளைய பல்லவன் முகத்திலும் கண்களிலும் விரிந்த வியப்பின் சாயையைக் கவனிக்கத் தவறாத சுங்க அதிகாரி, சற்று வெறுப்புடன் இதழ்களை மடித்து, “இளையபல்லவர் வியப்படைய வேண்டிய நேரமல்ல இது” என்று சற்றுக் கண்டிப்புத் தொனித்த குரலில் மெல்லக் கூறினான்.
இளைய பல்லவனின் இமைகள் சற்றே உயர்ந்தன. கூர் விழிகள் சுங்க அதிகாரியை நன்றாக ஊடுருவிப் பார்த்தன. பிறகு அவன் இதழ்களிலிருந்து உதிர்ந்த சொற்களில் ஏளனமும் தொனித்தன. “வியப்பை விதைத்தவர் தாங்கள். விதைதபின் விளைவை எப்படி எப்படி தடுக்க முடியம்?” என்று ஏதோ தத்துவ வினாவை விடுப்பவன் போல் கேட்டான் கருணாகர பல்லவன்.
பல்லவனின் அந்தப் பதில் மிகவும் விசித்திரமாயிருந்ததால் சுங்க அதிகாரியின் முகத்திலும் வியப்புக்குறி லேசாகப் படரவே, அவனும் திருப்பிக் கேட்டான், “என்ன! வியப்புக்கு வித்திட்டவன் நானா?” என்று.
“சந்தேகமென்ன! தாங்கள்தானே இங்கு தனிமையில் வரும்படி என்னை அழைத்தீர்கள்?” என்று வினவினான் கருணாகர பல்லவன்.
“ஆமாம். அதில் வியப்புக்கு இடமேங்கே இருக்கிறது?” என்று வினவினான் சுங்க அதிகாரி.
“பூம்புகாரிலிருந்து மரக்கலத்தில் வருகின்றேன்; அதுவும் அரசாங்க அலுவலாகப் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறேன். சுங்கசாவடியில் சோதனைக்கு இடமில்லாமல் செல்ல என் முத்திரை மோதிரத்தையும் காட்டுகின்றேன். உடனே தாங்கள் என்னை செல்ல அனுமதித்திருக்க வேண்டும். அதுதான் நியாயமாக நடக்கக் கூடியது. ஆனால் அனுமதிக்கவில்லை. தனிமையில் பேச அழைக்கின்றீர்கள் மற்றச் சுங்க அதிகாரிகளுக்கு எட்டாக் கையாக இருக்கும் இந்த இடத்துக்கு அழைத்து வருகின்றீர்கள். அது மட்டும்மல்ல, ஊருக்குள் செல்ல விரும்பும் என்னைத் தடையும் செய்கின்றீர்கள். இத்தனைக்கும் வியப்படையாமல் எந்த மனிதனால் இருக்க முடியும்” என்று கேட்டான் கருணாகர பல்லவன், சற்றே இகழ்ச்சியுடன் இளநகை கூட்டி.

சுங்க அதிகாரி தன் இதழ்களையும் சிறிது ஒருபுறம் இழுத்துத் தனக்கும் இகழ்ச்சி முறுவல் கூட்ட முடியும் என்பதை நிரூபித்தான். பேச்சிலும் தான் இளைய பள்ளவனுக்குச் சோடையில்லை என்பதைக் காட்டத் தொடங்கி, "நீங்கள் சொல்லுவதிலும் பொருளிருக்கிறது. வியப்புக்கும் இடமிருக்கத்தான் செய்கின்றது" என்று கூறி 'வியப்புக்கும்' என்ற சொல்லில் கடைசி 'உம்மை'ச் சற்று அழுத்தியும் உச்சரித்தான்.

"வியப்புக்கும் என்றால் வேறு உணர்ச்சிக்கும் இடமிருக்கிறது என்கிறீரா?" என்று வினாவினான் இளைய பல்லவன்.

"ஆம் தங்கள் நிலையில் நானிருந்தால் வியப்புக்கு இடமளிக்க மாட்டேன்."

"வேறு எதற்கு இடமளிப்பீர்!"

"எச்சரிக்கைக்கு."

"எதைப் பற்றி எச்சரிக்கை?"

"தங்கள் உயிரைப் பற்றி!"

இதைக் கேட்டதும் இளைய பல்லவன் அதிர்ச்சியடைந்து விடுவான் என்று சுங்க அதிகாரி எதிர்பார்த்திருந்ததால் அவன் ஏமாந்தே போனான். கருணாகரனின் விழிகளில் மேலும் வியப்பின் சாயையே படர்ந்தது. அந்த வியப்பு குரலிலும் தொனிக்கக் கேட்டான், "அரசாங்க அலுவலாக வந்திருக்கின்றேன். இதோ இந்த பையில் சோழ மன்னனின் ஆக்ஞா பத்திரம் இருக்கிறது. நான் அரசாங்கத் தூதன். என்னைக் காப்பாற்றுவது கலிங்கத்து மன்னனின் கடமை. அப்படியிருக்க என் உயிருக்கு என்ன ஆபத்து நேரிட முடியும்?" என்று.

"முதலில் உயிருக்கு ஆபத்து நேரிடாது" என்று பணிவுடன் ஒப்புக்கொண்ட சுங்க அதிகாரியின் குரலில் ஏளனம் ஒலித்தது.

"பின்னால் ஏற்படுமா?" இளைய பல்லவன் சற்று நிதானத்தைக் கைவிட்டுக் கேட்டான், இந்தக் கேள்வியை.

"ஆமாம். முதலில் சிறையில்தான் தள்ளுவார்கள். பிறகு சமயம் பார்த்து..." என்று வாசகத்தை முடிக்காமல் விட்ட சுங்க அதிகாரி, கழுத்தில் தன் கையை வைத்துச் சரேலென்று குறுக்கே இழுத்து முடிவு என்னவென்பதை அடையாளத்தால் காட்டினான்.

இளைய பல்லவன் முகத்தில் வியப்புடன் மெள்ள மெள்ளக் கோபமும் கலந்துகொள்ளவே, "இளைய பல்லவனான என்னையுமா சிறையில் தள்ளுவார்கள்?" என்று சீற்றத்துடனேயே கேட்டான்.

"தங்களைத்தான் முக்கியமாகத் தள்ளுவார்கள்!" என்று பதில் சொன்னான் சுங்க அதிகாரி.

"வீர ராஜேந்திர சோழதேவரின் ஆக்ஞா பத்திரத்தை வைத்திருக்கும் என்னையா?" - இம்முறை கேள்வியில் கோபம் பூர்ணமாக ஒலித்தது.

"அந்த ஆக்ஞா பாத்திரம்தான் தங்களுக்கு எமன்?"

"என்ன உளறுகிறீர்? கலிங்கத்துக்கு அமைதியை அளிக்கும் சாஸனம் அது."

"ஆனால் அந்த சாஸனம் கலிங்கத்தின் துறைமுகங்களைச் சோழர்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டு வரும் நோக்கமுடையது."

இதைக் கேட்டதும் கருணாகர பல்லவன் திக்பிரமை பிடித்து நின்றான். மிகவும் ரகசியமாகத் தன்னிடம் வீர ராஜேந்திர சோழதேவர் அளித்த ஆக்ஞா பத்திரத்தில் அடங்கிய விவரங்கள், கலிங்கத்தின் ஒரு மூலையில் உள்ள பாலூர் துறைமுகத்தின் சாதாரண ஒரு சுங்க அதிகாரிக்குத் தெரிந்திருப்பதை அறிந்ததும், மீண்டும் சொல்லவொண்ணா வியப்பின் வசப்பட்டுக் கையைக் கூட அசைக்காமல் நிலைத்து நின்றுவிட்ட இளைய பல்லவனை நோக்கிய சுங்க அதிகாரி, "மீண்டும் வியப்பையே அடைகின்றீர்கள் இளையபல்லவரே