» இனி ஓடாது

ஆசிரியர் : கவிஞர் வைரமுத்து.
௯)

படகின் எந்திரம் பழுது. இனி ஓடாது.
சிறு பழுதல்ல. பெரும் பழுது.
இறுகிவிட்டது எந்திரம். வெடித்துவிட்டன
எண்ணெய்க் குழாய்கள்.
0முதல் 7 வரை
எண்கொண்ட எண்ணெய்மானியில்
அந்த எண்ணெய் முள் 5 வரை ஆடும்.
அந்த முள் செத்து பூஜயத்தில் விழுந்து
விட்டது. இது படகுக்கு மாரடைப்பு. இனி
ஒன்றும் செய்ய முடியாது.

அதுவரையில் அந்த விசைப்படகில்
விரிந்திருந்த சந்தோஷத்தின் சிறகு
தொட்டாற்சிணுங்கி இலையைப் போல்
மொத்தமாய் முடிக்கொண்டது.

மென்ற உணவை விழுங்கியும்
விழுங்காமலும் கலைவண்ணன் கேட்டான்.
பழுதுபார்க்க முடியுமா? முடியாதா?

பாண்டி ஓடிக்கொண்டே சொன்னான்.
இல்லை. அது நம் கையைவிட்டுப் போய்
விட்டது. போன மாதமே இந்தப் படகை
எடுக்க வேண்டாமென்று எச்சரித்தார்கள்.
நாங்கள் கேட்கவில்லை. படகு பழையது.

ஓடாதா? படகு இனிமேல் ஓடாதா?

தவணை முறையில் தாக்கிய அதிர்ச்சியில் -
தட்டோ டு தட்டுத் தடுமாறித் தமிழ்ரோஜா
முர்ச்சையானாள்.

தமிழ். தமிழ். என்று
கத்திய கலைவண்ணன் குரலில்
அந்த ராத்திரிக்கடல் உறக்கம்
கலைந்தது. ஆனால்
தமிழ்ரோஜாவின் முர்ச்சை
தெளியவில்லை.

அவளை அவன் தன் மடி
கிடத்தித் தாதியானான்.

தீப்பிடித்த வீட்டில்
திரைச்சீலையை யார்
கவனிப்பது?

அவர்களைக் காக்க
மீனவர்களுக்கு
அவகாசமில்லை.

இடு. இடு. நங்கூரமிடு.
இழு. இழு. வலையை இழு.
ஒரு வஞ்சகக் கஞ்சனின் கையில்
காசு நகர்ந்தாலும்
நகரலாம். ஆனால் நம் படகு
நகரும் என்று நம்பாதே.

உதவிப் படகு வராமல்
ஒன்றுமே நடக்காது. அபாய
அறிவிப்புக் கொடு.
விளக்குகளை அணைத்தணைத்து
வெளிச்சம் காட்டு.

இங்கே சில இதயங்கள்
விட்டுவிட்டுத் துடிக்கின்றன
என்பதை விட்டு விட்டு எரியும்
விளக்காவது விளக்கட்டும்.
படபடவென்று பாண்டி
தந்தித்தமிழ் பேசினான்.

உதட்டுக்கும் முத்தத்துக்கும்
இடைவெளியே இல்லாதது
மாதிரி கட்டளைக்கும்
காரியத்துக்கும் இடைவெளியே
இல்லாமல் அங்கே செயல்கள்
நடந்தன.

தண்ணீர் முடிச்சாய் நங்கூரம்
விழுந்தது.

கடலில் நீந்திவந்த வலை
படகேறியது.

ஆபத்தின் அறிகுறியாய்
விளக்குகள் அணைந்தணைந்து
எரிந்தன.

ஆனால் அந்த சமிக்ஞைக்கு
நட்சத்திரங்களை
அணைத்தணைத்து வானம்தான்
பதில் சொன்னதே தவிர -
கடல் பேசவில்லை.
படபடத்த மீனவர்கள்
பரபரத்தார்கள்.

தமிழ். தமிழ். -
கலைவண்ணன் முர்ச்சை
தெளிவிக்கும் முயற்சி
தொடர்ந்தான்.

ஏ வெயிலில் சூம்பிய
வெள்ளரிப் பிஞ்சே. ஒரே ஓர்
அதிர்ச்சியிலேயே முச்சுவிடும்
கல்லாய் முர்ச்சையுற்றுப்
போனவளே.

கலங்காத கடல்
கலங்கிநிற்பதுபோல பதறாத
என் உள்ளம் பதறி நிற்கிறதே.
கண்திறந்து பார்.

என்ன இது? உன் சிவந்த
திருமேனி சில்லிட்டு வருகிறதே.
கூடாதே. சில்லிடக்கூடாதே.

அவள் கால்களை அள்ளி மடியில்
போட்டுப் பரபரவென்று
பாதம் தேய்த்தான்.

முயல்காதுகளைப் போல
மெல்லிய
அந்தப் பாதங்களை
முரட்டுத்தனமாய்த்
தேய்த்தான். பாதங்கள்
சூடுகண்டதும் உள்ளங்கைகளுக்கு
ஓடினான்.
அந்தக் குவிந்த தாமரைகளைக்
கொஞ்சம் மலர்த்தி
மெல்லென்று தேய்த்துத்
தேய்த்து மின்சாரம்
தயாரித்தான்.

முர்ச்சையுற்றுக் கிடந்த
மரங்களில் வசந்தகாலம்
வந்ததுமே கொழுந்து
எழுந்துவருமே - அப்படி அவள்
இமைகள் கொஞ்சம் எழுந்தன.
உடனே விழுந்தன.

தமிழ். தமிழ்.

காதலியின் காதுமடலில் குனிந்து
குனிந்து கூப்பிட்டான்.

ஓடிக்கொண்டேயிருந்த பாண்டி
ஒருகணம் நின்றான்.

கலையின் துயர் கண்டும் தமிழின்
நிலைகண்டும் பரபரப்பிலும்
பரிதாபித்தான்.

எங்களால்தானே உங்களுக்கு
இத்தனை துன்பம்? மன்னித்து
விடுங்கள்.

யார் மீதும் தவறில்லை.
இது சந்தர்ப்பத்தின் சதி.
நீங்கள் பதற்றப்படாதீர்கள்.
பதற்றத்தில் மனிதன் பாதிபலம்
இழக்கிறான். சிதறும்
உணர்ச்சியைச் சேகரித்து
யோசியுங்கள். நம் மீட்சிக்கு
வழியுண்டா இல்லையா?

உண்டு. முன்றே வழி...

என்னென்ன?

ஒன்று.
கடந்து செல்லும் கப்பல்
நம்மைக் கரை சேர்க்கலாம்.

இரண்டு.
படகு ஏதேனும் வந்து
நம்மைப் பாதுகாக்கலாம்.

முன்று.
கட்டுமரம் வந்து
நம்மை இட்டுச் செல்லலாம்.

இந்த முன்றுமே
இல்லையென்றால்..?

காற்றடித்துக் காற்றடித்து
நாம் கரைசேர வேண்டும்.
இப்போது அது முடியாது.

ஏன் முடியாது?

இது கிழக்கிலிருந்து மேற்கே
காற்றுவீசும் காலமல்ல.
மேற்கிலிருந்து கிழக்கே
காற்றுவீசும் காலம்.

நல்லது நடக்கும்.
நம்பிக்கையோடிருப்போம்.

பாண்டி சிரித்தான். அதில்
ஈரப்பசை இல்லை.

பாவம். அது சிரிப்பின்
மீசையை ஒட்டவைத்துக்
கொண்ட சோகம்.

ஆனாலும் தைரியம் பேசினான்.
மீன் தப்பினாலென்ன? வலை
இருக்கிறது. எந்திரம்
போனாலென்ன? படகு
இருக்கிறது. நீங்கள்
தங்கையைக் கவனியுங்கள்.
நாங்கள் தடங்கல்களைக்
கவனிக்கிறோம்.

பாண்டி கடலில் விழுந்த
காசாய் இருளில்
தொலைந்தான்.

விழுந்தவள் விழுந்தவள்தான்.
விழிக்கவில்லை. ஐம்பது கிலோ
தங்கம் அசையவில்லை.

அந்தச் சுத்தத் தங்கத்தை
அவன் சுடவைத்துக்
கொண்டேயிருந்தான்.

தொட்டால் ஒட்டும் கெட்டி
இரவு.
மேலே பொத்தல் வானம்.
கீழே கத்தும் கடல்.

செத்துப் போன படகு.
சிறகில்லாத மனிதர்கள்.

நேற்று வந்ததும் அதே நிலா.
இன்று வந்ததும் அதே நிலா.

நேற்று வந்த நிலாவில் கறை
என்பது அதன் கன்னத்து
மச்சமாய் இருந்தது. இன்று
வந்த நிலாவில் அது கண்ணீரின்
மிச்சமாய்த் தெரிந்தது.

இயற்கை அப்படியேதான்
இருக்கிறது. அர்த்தம்
கொடுப்பவன் மனிதன்.

துள்ளி விளையாடிய ஜெல்லி
மீன்களும் உள்ளே உறங்கப்
போய்விட்டன.

அலைகள்கூட உறக்கத்தில்
புரண்டு புரண்டு படுத்துக்
கொண்டிருந்தன.

நட்சத்திரங்களைக் காவலுக்கு
வைத்துவிட்டு நிலாகூட
உறங்கிவிட்டது.

வாடைக் காற்றுக்குத்
தூக்கத்தில் நடக்கிற வியாதி
போலும். தட்டுத் தடுமாறி
வீசிக்கொண்டிருந்தது.

அந்தக் கடல்வீதியில் மீனவர்
நால்வரும் கலைவண்ணனும்
மட்டும் கண்ணுறங்கவில்லை.
விம்மிவிம்மித் தன் முகத்தில்
தானே அறைந்துகொண்டு,
அவன் தோளில் முட்டிமுட்டி
அவள் அழுதாள்.

சுமப்பவனுக்குத்தான் தெரியும்
சாலையின் தூரம்.
விழிப்பவனுக்குத்தான் தெரியும்
இரவின் நீளம்.

கலைவண்ணன் கண்கள் போலவே
கிழக்கு வானமும் சிவந்தபோது
- அந்தச் சின்னமணித்தாமரை
சிறுவிழி திறந்தது.

தலையை அசைத்தது. சங்கீதம்
முனகியது.

இரவில் அணைந்தணைந்து எரிந்த
விளக்குகளைப் போலவே அவள்
விழிகளை முடிமுடித் திறந்தாள்.

அவளுக்கு ஒன்றும்
விளங்கவில்லை. விழிப்படலத்தில்
விழுந்த காட்சிகள் முளைக்குச்
சென்று சேரவில்லை.

இப்போது நான்
எங்கிருக்கிறேன்?

என் மடியிலிருக்கிறாய். ஓர்
ஏழையின் உள்ளங்கையிலிருக்கும்
தங்க நாணயத்தைப் போலவும்
- தூக்கணாங்குருவிக் கூட்டின்
ஆழத்தில் கிடக்கும் அதன்
குஞ்சைப் போலவும் நீ
பாதுகாப்பாயிருக்கிறாய்.

அவள் ஞாபகக் கண்ணிகளை
அறுந்த இடத்திலிருந்து முடிச்சுப்
போட்டாள். விளங்கிவிட்டது.

பள்ளி கொண்டவள் துள்ளி
எழுந்தாள். பயந்து
கத்தினாள்.
படகு இனி ஓடுமா?
ஓடாதா?

பதறாமல் கேள். இந்தப்
படகு இனி ஓடாது. இதயம்
உடையாதே. எதார்த்தம்
கேள். இந்தப் படகு
இறந்துவிட்டது. இப்போது இது
பிணம். இந்தப் பிணத்தில்
மொய்த்திருக்கும் ஈக்கள்
நாம். ஆனால், என்
காதலியே. ஐப்பசி
மாதம்போல் அழுது
வடியாதே. நம் பிறவிப்
பெருங்கடல் கடந்து முடிக்க
இதுவொன்றே படகென்று
எண்ணாதே.
எல்லாக் கடலுக்கும்
கரையுண்டு. எந்தத்
துன்பத்துக்கும் முடிவுண்டு.
பொறு. மீட்சிவரும்.

நிறுத்துங்கள்.
இப்போதாவது உண்மை
சொல்லுங்கள்.

எப்போதும் உண்மைதான்
சொல்லுகிறேன்.

இல்லை. என்னை நீங்கள்
அழைத்து வந்தது சமுத்திரத்தை
அறிமுகப்படுத்தவா? இல்லை
சாவை அறிமுகப்படுத்தவா?

அதற்குமேல் பேச்சுவராமல்
சப்தம் கேட்டு ஓடிவந்த சலீம்
சமையல்கட்டுக்குச் சென்று
இரண்டு கோப்பைகள்
கருந்தேநீர் கொண்டு
வந்தான்.

கலைவண்ணன் அதைவாங்கித்
தோளில் புதைந்தவளின்
தலைதடவி, தேநீர் குடி
என்று செல்லவார்த்தை
சொன்னான்.

கண்ணீர்விட்டுக் கண்ணீர்விட்டே
உடம்பில் தண்ணீர்வற்றிப்
போனவளுக்கு அது
தேவைப்பட்டது.
விசும்பிக்கொண்டே பருகினாள்.

இரவெல்லாம் பழுதுபார்க்கும்
முயற்சியில் களைத்துப்போன
மீனவர்கள் அவர்களைச் சுற்றிப்
பரவினார்கள்.

இங்கிருந்து கரை எவ்வளவு
தூரம் பரதன்?

இடைமறித்தாள் தமிழ்.
இங்கிருந்து மரணம் எவ்வளவு
தூரம் என்று கேளுங்கள்.

கடலுக்குள் 45 கிலோ
மீட்டர் தூரம்
வந்திருப்போம். -
யோசித்துச் சொன்னான்
பரதன்.

ஆபத்தை உணர்த்தும்
அறிகுறியாய் இரவில் விளக்கை
அணைத்தணைத்து எரித்தீர்கள்.
பகலில்..?

அதோ பாருங்கள்.
பாண்டி கைகாட்டினான்.

கலைவண்ணன் அண்ணாந்து
பார்த்தான்.

இசக்கியின் இடுப்பு லுங்கியை
மேற்கூரையின் உச்சிக்கம்பம்
கட்டியிருந்தது.

இடம் பொறுத்துப் பொருள்
வேறு. இடுப்பில் கட்டினால்
லுங்கி, கம்பத்தில் கட்டினால்
கொடி.

அதுதான் இப்போது அபாய
அறிவிப்பு.

சிவந்த கிழக்கின்
உதயரேகைகள் கடல்நீரில்
கவிதை எழுதின.

யார் முகத்திலும்
சந்தோஷமில்லை. எல்லார்
முகத்திலும் இறுக்கம்.
ஓ. படகின் மரணத்துக்கு
மெளனாஞ்சலியா?

சலனமற்ற சித்திரங்களாய் -
சப்தமற்ற வாத்தியங்களாய்
அந்த
ஆறு மனித ஜீவன்களும்
சொல்லறுந்து செயலிழந்து துக்கப்பட்ட
பொழுதிலே - வாழ்வின் சுமையறியாது,
மரணத்தின் பயமுமறியாது அங்கே துள்ளிக்
குதித்தாடிய ஜீவன் ஒன்றுண்டு.

அந்த ஏழாவது ஜீவன் - சுண்டெலி.

அது வால் தூக்குவதையும் வளைந்தோடு
வதையும் கிரீச் கிரீச்சென்னும் ஒரு
வார்த்தையை வைத்துக்கொண்டு அது பல
பாஷை பேசுவதையும் தங்களை மறந்து
அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
வேளையில் - அங்கே நிலவிய அமைதி
சகிக்காத தமிழ்ரோஜா ஆவேசம் கொண்டு கத்தினாள்.

என்னை எப்போது கரை சேர்க்கப்போகிறீர்கள்?
சப்தம் கேட்டுப் பயந்த காற்று சற்றே ஒதுங்கி வீசியது.

அவள் தங்கத் தோள்களில் தடம்பதிய அழுத்திய
கலைவண்ணன்-
பொறுமையாய் இரு. பொறுமையாயிருந்தால்
எதையும் சாதிக்கலாம்.

எதைச் சாதிப்பீர்கள்?

பொறுமையாயிருந்தால் தண்ணீரைக் கூடச்
சல்லடையில் அள்ளலாம் - அது பனிக்
கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்

ஓர் இடைவேளைக்குப் பிறகு அவள் அழுகை
தொடர்ந்தது.

அவள் கரம்பற்றி விரல் இடுக்கில் விரல்
கோத்தவன் தன் அமைதிப்பணியை ஆரம்பித்தான்.
சோகம் தெரியாமல் துள்ளிக்குதிக்கிறது. நீயும்
தற்காலிகமாய்ப் பகுத்தறிவை மறந்துவிடு.
சோகத்தைச் சுண்டி எறிந்து ஒரு சுண்டெலியாகி
விடு சுந்தரி..

படகின் விளிம்பில் வால்தூக்கி நின்ற
சுண்டெலி அவளைப் பார்த்து வக்கணை காட்டியது.

அவளுக்கோ - பசித்தது. வாய்விட்டுக் கேட்க
மனமில்லை.
பொத்திவைத்த அழுகை பொத்துக் கொண்டது.