» கண்விழித்துப் பாரடி

ஆசிரியர் : கவிஞர் வைரமுத்து.
௫)

கண்விழித்துப் பாரடி என்
காதல்தமிழே.
இமைகொண்டு கண்ணுக்கும்
கரம்கொண்டு முகத்துக்கும்
இரட்டைக்கதவுகள் இட்டுக்
கொண்டவளே.

இப்போது வங்காள
விரிகுடாவில் முப்பது
கிலோமீட்டர் வேகத்தில்
முன்னேறிக்
கொண்டிருக்கிறோம்.

மேலே
நீலவானம் - நீளவானம்.
கீழே
நீலக்கடல் - நீளக்கடல்.

தண்ணீரில் அங்கங்கே
வெள்ளைவெள்ளையாய்க் கவிதை
எழுதும் கடற்காற்று.

சரி. சரி. கண்திறந்துபார்.
சமுத்திரம் உனக்குக் கீழே.

பிளாஸடிக் வலைகளின்மேலே
நைந்து குலைந்து
நலிந்துகிடந்தவள் விலக்கவில்லை
விழித்திரைகளை.

தலைசுற்றியது தமிழுக்கு.

அவள் அடிவயிற்றில் மெல்ல
மெல்லப் பெரிதானதொரு
குமட்டல் குமிழி.

புதிய விருந்தாளிகள்
வந்திருக்கும் புளகாங்கிதத்தில்
அலைமீன்கள் ஆனார்கள்
மீனவர்கள்.

வராதவர்கள்
வந்திருப்பதால் விழாத மீன்கள்
விழும்.

நம்பிக்கைமொழி பேசி
நடனமாடினார்கள்.

காதலர் தனிமைக்குப்
பின்பக்கம் தந்துவிட்டு
முன்பக்கச் சுக்கான் அறையில்
மொத்தமானார்கள்.

தன் சொற்பொழிவுக்குக் கடல்
கைதட்டுவதாய்க் கருதிய
களிப்போடு இன்னும் அதிகமாய்
ஓசையிட்டது விசைப்படகு.

காதலியை மடியில்போட்டவன்
கண்களைக் கடலில்
போட்டான்.

கண்ணுக்கெட்டிய மட்டும்
கடலோ கடல்.

இது வியப்பின் விசாலம்.
பூமாதேவியின் திரவச்சேலை.
ஏ தமிழா.
உன் புலமைகண்டு
புல்லரிக்கிறேன்.
இதன் பரப்பை வியந்தாய்.
பரவை என்றாய். ஆழம்
நுழைந்தாய். ஆழி என்றாய்.
ஆற்றுநீர் - ஊற்றுநீர் -
மழைநீர் முன்றால் ஆனதென்று
முந்நீர் என்றாய்.

வியந்துகிடந்தவன்உடைந்துகிடந்தவளை
மடியில் அள்ளி ஒட்டவைத்தான்.

ஏ தமிழ். என்ன இது?
திற, கண்களைத் திற.
கண்களால் கடல்விழுங்கு.
விசைப்படகு விரையும்போது
கடலோடு ஒரு வெள்ளிவீதி
பார்.

அன்பு கொண்டவர்களைக்
காணும்போது துயரம்
மெல்லமெல்ல மறைவதுமாதிரி
- தூரத்துக்கரை மெல்ல
மெல்லத் தொலைவது பார்.

ததும்பும் தண்ணீர்
ஊஞ்சல்மேலே அழகுப்
பறவைகள் ஆடுவதுபார்.

தப்பு செய்துவிட்டுவந்த
கணவர்கள், தாழ்திறவாக்
கதவுகளுக்கு வெளியே
நிற்பதுபோல் -
துறைமுகத்துக்குள்
அனுமதியில்லாத கப்பல்கள்
தூரத்தில் நிற்பது பார்.

அங்கொன்றும்
இங்கொன்றுமாய்க்
கடற்பட்டாம் பூச்சிகளாய்
மிதக்கும் கட்டுமரங்கள்
பார்.

காசுக்கு மனம்மாறும்
வஞ்சகர்களைப் போல
அங்கங்கே நிறம்மாறும்
கடல்பார்.

நீ ஏன் பயப்படுகிறாய்?

தன்னைக் கடைந்து கடைந்து
கடந்துவிட்டானே என்று
கடல்தான் மனிதனைப் பார்த்து
பயப்படுகிறது.

அவளை அவன் மில்லிமீட்டர்
மில்லிமீட்டராய் மலர்த்தப்
பார்த்தான்.

ஆனால், தன் புலன்களைப்
பூட்டிக்கொண்டவள்
திறக்கவேயில்லை.

ஆடும் படகு ஆடஆட அடிவயிறு
அழுத்தியது அவளுக்கு.

நிறந்தெறியாத பூச்சிகள்
நெற்றிப் பொட்டில்
பறந்தன.

உள்ளே வளர்ந்து வளர்ந்து
உடையப்பார்த்தது
குமட்டல்குமிழி.

முகம்தூக்கிப் பார்த்தபோது
அவன்
கையில் பிசுபிசுத்தது அவள்
கண்ணீர்.

அழுகிறாயா?
கடல்நீரை மேலும்
கரிக்கவைக்கிறாயா?
கடலில் 3.6 சதம் உப்பு
முன்னமே இருக்கிறது.
அதுபோதும். எங்கே... உன்
இதழ்நீர் துப்பு. இனிக்கட்டும்
கடல்.

ஏன் இப்படி என்னைச்
சோதிக்கிறீர்கள்?
அவள் எழுத்துக்கூட்டி
விசும்பினாள்.

அவன் சின்முறுவல் பூத்தான்.

தன்மேல் விழும் மண்ணைச்
சோதனை என்று
சொன்னதுண்டா விதை?

உளியின் உரசலைச் சோதனை
என்று சொன்னதுண்டா சிலை?

இது பயிற்சி. முளைக்கவைத்து
முழுமையாக்கும் முயற்சி.

சோதனை என்று சொல்லாதே
பெண்ணே.
சொடுக்கு, விரலுக்குச்
சோதனை அல்ல.

அவள் வயிற்றில் புறப்பட்ட
வாந்தி நெஞ்சில் வந்து
நின்றுவிட்டது.

தன்னிரு கரங்களால் அவள்
தலைதாங்கித் தவித்தாள்.

துவண்ட கொடிகண்டு துடித்தான்
அவனும்.

இது கடல்நோய்.
ஒருவகையில் இது ஒவ்வாமை.
முதன்முதலாய்க் கடல்புகும்
பலருக்கு இது வரவே வரும்.
கலங்காதே.
சின்னச் சின்னச் சிரமங்களுக்கு
உன் உடம்பை உட்படுத்து.

எனக்கிது தேவைதானா?

அவள் கன்னத்தில் வழிந்த
கண்ணீர் வாயில் விழுந்ததில்
வார்த்தை நனைந்தது.

தேவைதானா என்று
கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா?
குரங்கிலிருந்து மனிதன்
குதித்திருக்க முடியுமா?
தூரத்தை நெருக்கியிருக்க
முடியுமா?
நேரத்தைச் சுருக்கியிருக்க
முடியுமா?

தேவைதான் முட்டைக்குள்
இருக்கும் உயிரை
முச்சுவிடவைக்கிறது.

தேவைதான் உலக உருண்டைக்கு
ஒரேபகல் கொண்டுவர
யோசிக்கிறது.

உணர்வுகளின் தேவை காதல்.
உணர்ச்சிகளின் தேவை காமம்.
உலகத்தின் தேவை உழைப்பு.

இந்தத் தேவைகளின் வெவ்வேறு
வடிவங்களே வாழ்க்கை.

பெண்மீது காதலும் வெற்றிமீது
வெறியும் இல்லையென்றால்
இன்னும் இந்த பூமி பிறந்த
மேனியாகவே
இருந்திருக்கும்.

அவன் பேச்சுக்குக்
காதுகொடுத்தது காற்று
மட்டும்தான்.

அவளால் தாங்கமுடியவில்லை.
ஒவ்வாத சூழல்.
உடன்படவில்லை உடம்பு.
ஏதோ ஒரு திசையில் -
ஆனால் மிகமிகப் பக்கத்தில்
மரணம்
மையம்கொண்டிருப்பதாய்ப்பட்டது
அவளுக்கு.

என்னைக் கொல்லாதீர்கள்.
படகைத் திருப்புங்கள்.
படபடப்பாய்
வருகிறதெனக்கு.

அவன் இரு கரங்களாலும் அவள்
முகம் அள்ளினான்.
வசதி இல்லாத இடங்களிலும்
வளைத்து வளைத்து
முத்தமிட்டான்.

இடைவேளையில் பேசினான்.

இது ஓர் அனுபவம்.
படபடப்பு என்பது உயிருக்கு
நேரும் உயர்ந்த அனுபவம்.
படபடப்பு இல்லையென்றால்
பரிணாமம் இல்லை.

முதன் முதலில் நிலாவுக்கு
மனிதனைக் கொண்டு சென்ற
விண்வெளிக்கலம் பூமிக்குத்
தெரியாத நிலாவின்
மறுபக்கத்தில் சுற்றத்தொடங்க
- விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஒலித்தொடர்பு அறுந்துபோக
- முப்பத்து முன்று நிமிடம்
பூமியின் இதயம்
படபடக்கவில்லையா?

மைனஸ 27 டிகிரியில் -
எவரெஸட் உச்சிதொட இன்னும்
நானூறடிதான் இருக்கையில் -
அந்த தூரம்
கடக்கும்வரைக்கும் ஆக்சிஜன்
இருக்குமா என்று ஹிலாரி
ஐயம் கிளப்ப டென்சிங்கின்
இதயம் படபடக்கவில்லையா?

வடதுருவம் தொடும் முயற்சியில்
ஏழுமுறை விழுந்து ஒவ்வொரு
தோல்வியிலும் ஒரு விரல்
இழந்து எட்டாம் முறையும் தன்
முயற்சி தொடர்ந்து, ஸலெட்ஜ
வண்டிகள் சிதறிப்போக,
இழுக்கும் நாய்கள்
இறந்துபோக இதுதானோ தன்
கடைசிப் பயணம் என்று
வெற்றிக்குச் சற்றுதூரத்தில்
விரக்தியில் நின்றபோது
எட்வின்பியரியின் இதயம்
படபடக்கவில்லையா?

இன்னும் பத்துநாட்களில்
கண்ணுக்குக்
கரைதெரியாவிட்டால்
புறப்பட்ட இடத்துக்கே
திரும்பவேண்டும் என்று
மாலுமிகள் போர்க்கொடி
பிடிக்க அந்த ஒன்பதாம்
ராத்திரியில் கொலம்பஸின்
இதயம் படபடக்கவில்லையா?

அவர்களைவிடவா ஆபத்து
உனக்கு?

அவர்கள் உயிரைப்
பணயம்வைத்துப் பயணம்
செய்தவர்கள்.

நீ சுகமாக இருக்கிறாய்.

தாய்க்குரங்கின் பிடியிலிருக்கும்
குட்டியைப்போல்
நீ என் மடியில்
பத்திரமாயிருக்கிறாய்.

பதறிப்பதறிச் சிதறிப்
போகாதே.
எழு தமிழ். எழு.

ஒரு பேரலையின் உசுப்பலில்
விசைப்படகு ஆபத்தான
ஆட்டமொன்றாட - அந்த
அதிர்வலைகள் அவள் உள்ளுக்குள்
பரவிஉசுப்ப - அவளுக்கு
வந்துவிடும் போலிருந்தது
வாந்தி.
அவள் தரைமேல் மீனாய்
வலைமேல் உருண்டாள்.

தாளாமல் துடித்தவளைத்
தாவிஎடுத்து
அவலம் கொள்ளாதே
தமிழ். இது ஓர் அனுபவம்
என்றான்.

வேண்டாம். எனக்கிந்த
அனுபவம் வேண்டாம்.
அவள் சட்டை பிடித்துலுக்கிச்
சத்தமிட்டாள்.

அவனோ ஏசுவின்
மலைப்பிரசங்கம் மாதிரி
அலைப்பிரசங்கம்
ஆரம்பித்தான்.

பாவம். வயதுக்கு வந்த
குழந்தை நீ. அனுபவங்களின்
தொகுப்புதான் வாழ்க்கை.
நம் வாழ்க்கைமுறை
தீர்மானிக்கபட்ட
அனுபவங்களையே நம்மீது
திணித்தது.

யாருக்கோ நேர்ந்த
அனுபவங்களை
ஒப்புக்கொள்ளுமாறு நம்மீது
துப்பியது.

ஆகவே தாத்தாக்களின்
நகல்களாகவே தமிழன்
தயாரிக்கப்பட்டான்.

எனவே பல நூற்றாண்டுகளாக
இந்த இனம் இருந்த
இடத்திலேயே இருந்தது.

சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சி இல்லை.

வாழ்நாளில் 66,000 லிட்டர்
தண்ணீர் குடித்தான்.
ஆயுளில் முன்றில் ஒருபங்கு
தூங்கினான்.
நான்குகோடி முறை
இமைத்தான்.
நாலரை லட்சம் டன்
ரத்தத்தை இதயத்தால்
இறைக்கவைத்தான்.
35 ஆயிரம் கிலோ உணவு -
அதாவது எடையில் இந்திய
யானைகள் ஏழு தின்றான்.
மரித்துப் போனான்.

இதற்குத்தானா மனிதப்பிறவி?

யாருக்கும் இங்கே
குறைந்தபட்ச லட்சியம்கூட
இல்லை.

நமக்கேனும் வேண்டாமா?
இற்றுப்போன பழைய
இரும்புவேலிகளைச் சற்றே
கடக்கவேண்டாமா?

ரத்தம்பார்த்தாலே
மயங்கிவிழும் ஒரு தலைமுறையை
மீட்கவேண்டாமா?

எழுந்து உட்கார்.
துன்பமென்பது மனதின் பிரமை.
மனதை மாற்றுத்திசையில்
ஆற்றுப்படுத்து.
தும்மல் - காதல் - வாந்தி
முன்றும் வந்தால்
அடக்கலாகாது.
அதன்போக்கில் விட்டுவிடு.

அவள் மெல்ல அசைந்தாள்.
கவிழ்ந்துகிடந்தவள் நிமிர்ந்து
எழுந்தாள். கண்திறந்து
கடல்பார்த்தாள்.

நடுக்கடல் கண்ட திடுக்கிடல்
கண்ணில் தெரிந்தது.

முச்சு - நம்பிக்கை
இரண்டையும் மெல்ல மெல்ல
உள்ளிழுத்தாள்.

கடைவிழியில் ஆடிய கண்ணீருக்கு
நங்கூரமிட்டாள்.

ஓங்கியடித்த ஓர் அலை
விசைப்படகின் விளிம்பு தாண்டி
திடதிரவமாய் அவள்மீது
விழுந்தபோது
ஓ வென்றலறினாள்
ஓசையோடு.
நன்றாய் நனைந்துவிட்டாள்.

கலைவண்ணன் தொடாத
பாகமெல்லாம் கடல்தண்ணீர்
தொட்டுவிட்டது.

ஓடிவந்தனர் உள்ளிருந்தோர்

என்ன.... என்னவாயிற்று? பாண்டியும்
இசக்கியும் படபடத்தார்கள்.

ஒன்றுமில்லை. அலை...

உள்ளே ஓடிய சலீம் துவைக்கவேண்டிய
ஒரு துண்டைத் துடைத்துகொள்ள நீட்டினான்

பரவாயில்லை. கடல்நோய் கொண்டவர்கள்
நனைந்தால் நல்லதுதான்.
இசக்கி அனுபவம் சொன்னான்.

தண்ணீர் சொட்டச்சொட்ட தானே
தலைதாங்கிக் தமிழ்ரோஜா அழுதாள்.
அதில் கண்ணீர் எது? தண்ணீர் எது?
கடல்மீன் அழுத கதைதான்.

ஒரு கண்ணில் பாசம் ஒரு கண்ணில்
பரிதாபம் மீனவர்பார்வை நிலைகுலைந்தவள்
மீது நிலைத்தது.

ஆவேசமாய் நிமிர்ந்தவள் - இப்போதே
கரைதிரும்ப வேண்டும் என்றாள் அழுதவிழி
துடைத்தபடி

மீன் விழுந்தாலும் விழாவிட்டாலும்
மாலைக்குள் கரைசேர்ப்போம் என்றான் பாண்டி

அலையில் இந்தப் படகு கவிழ்ந்துவிட்டால்?

கவிழாது. கவிழ்ந்தாலும் எங்கள் உயிர் கொடுத்து
உங்கள் உயிர்காப்போம் தங்கையே.
தடித்த எழுத்துக்களில் பேசினான் இசக்கி.

விடவில்லை அவள்.

டீசல் தீர்ந்துவிட்டால்?

தீராது 2800 லிட்டர் கொள்ளும் கலத்தில்
இரண்டாயிரம் லிட்டர் அடைத்திருக்கிறோம்
நம்பிக்கை சொன்னான் பாண்டி

படகைத் திருப்ப முடியுமா - முடியாதா?
அவள் கரைக்கே கேட்குமாறு கத்தினாள்.

யாரும் பேசவில்லை.

முட்டிக்கொண்ட இரண்டு அலைகள் எட்டிமோத
தஞ்சாவூர் பொம்மையாய்த் தலையாட்டியது படகு.

அவள் வயிற்றுக்குள் வட்டமிட்ட
குமட்டல்குமிழி வளர்ந்து வளர்ந்து -
நெஞ்சு கடந்து - தொண்டைதொட்டு -
வெளியேறியது. அவள் வலையெல்லாம்
நனைய வாந்தியெடுத்தாள்

கலைவண்ணன் தன் கட்டைவிரல் பதித்து
அவள் நெற்றிப்பொட்டை அழுத்தினான்
மீனவர் பதறினர.

சலீம் மட்டும் கலைவண்ணனைக்
கேட்டேவிட்டான்
தங்கை வாந்தியெடுக்கும்படி
அப்படி என்ன செய்தீர்கள்?

Advertisement