» சொல்லின் அர்த்தம்

ஆசிரியர் : கவிஞர் வைரமுத்து.
௰௧)

சொல்லின் அர்த்தம்
தீர்மானிப்பது சொல்லல்ல.
இடம்.

ஒரே ஒரு முத்தம் கொடு .
- இந்தத் தொடருக்குக்
கட்டிலில் பொருள் வேறு.
தொட்டிலில் பொருள் வேறு.
பாடையில் பொருள் வேறு.

குளித்தல் என்பது ஒரு
செயல்தான். அதற்குக்
கரையில் பொருள் வேறு.
நின்றுபோன கலத்தில் பொருள்
வேறு.

குளித்தல் என்பது அங்கே
சுகாதாரம். இங்கே
துரோகம்.

உப்புத்தூளுக்குப் பதிலாய்
வைரக்கற்களை அம்மியில்
வைத்து அரைத்துவிடுகிற ஒரு
குழந்தை மாதிரி - குடிநீர்
என்று தெரியாமல் அதில்
குளித்து முடித்த தமிழ்ரோஜா
இப்போது
அழுது அழுது அழுக்கானாள்.

ஆனால், அதுவும்
நன்மையானது.
உலகமகா யுத்தத்தில் முதல்
குண்டு விழுந்தவுடன்
சுறுசுறுப்படைந்துவிடும் ஒரு
தலைநகரத்தைப் போல
இருப்புக் கணக்கெடுக்கத்
தயாரானது படகு.

எப்படியும் இரண்டொரு நாளில்
கரை சேரலாம். ஆனாலும்
ஆபத்தைத்தான் நாம் அதிகம்
சிந்திக்க வேண்டும்.

மழைக்காலத்தில்
கூடு கட்டிக் கொள்ளலாம்
என்று தூக்கணாங்குருவி
கோடையில்
தூங்கிக்கொண்டிருக்கக்
கூடாது.

சரி... சரி... சரி
பார். அரிசி எவ்வளவு? அள.
காய்கறி எவ்வளவு?
கணக்கெடு. நீ எவ்வளவுண்டு
நிறு. எண்ணெய் - மிளகாய் -
கடுகு எத்தனை நாள் வரும்?
எண்ணிச் சொல்.
உலையில் குமிழி கொதிக்குமே.
அப்படிப் படபடவென்று பேசி
முடித்தான் பாண்டி.

இதோ பாருங்கள் பாண்டி.
முன்று நாள் தேவைக்குத்தான்
உணவுப்பொருள் கொண்டு
வந்தோம். அதற்குள்
திரும்பிவிடுவதாய்த் திட்டம்.
உண்மை சொல்கிறேன்.
உணர்ச்சிவசப்படாமல்
கேளுங்கள். கொண்டு வந்த
அரிசி 12 கிலோ. முன்று
நாளைக்கு. 4 கிலோ
வெந்தது போக, இருப்பு 8
கிலோ. தண்ணீர் 200 லிட்டர்
கொண்டு வந்தோம். அதில்
குடித்ததும் - குளித்ததும்
போக எஞ்சியிருப்பது 80
லிட்டர். ரவை, மைதா
இன்றுமட்டும் வரும். தக்காளி
அழுகாமலிருந்தால் அடுத்த
நாளைக்கும் வரும். இப்போது
படகில் நிறைய இருப்பது டீசல்
மட்டும்தான்.

இல்லை.
நம்பிக்கையும்தான்.
கவலைஅறிக்கை வாசித்த
சலீமைக் கலைவண்ணன்
இடைமறித்தான்.

சில நூற்றாண்டுகளுக்கு
முன்னும் மழை இல்லை. சில
நூற்றாண்டுகளுக்குப் பின்னும்
மழை இருக்கப் போவதில்லை
என்ற வருந்தத்தக்க வானிலை
கொண்ட பாலைவனத்திலும்
காற்றின் ஈரப்பசையை உண்டு
வாழும் தாவரம் உண்டு. சில
நாட்களுக்காவது நாம்
ஜீவிக்க முடியாதா? உணவு
என்பது பழக்கம்.
உணவிருந்தால் மனிதன்
உபரியாய்த் தின்கிறான்.
உபரியாய்க் குடிக்கிறான். ஒரு
படகு தட்டுப்படும் வரை நாம்
உடம்புக்காக உண்ண
வேண்டாம். உயிரின் வேருக்கு
மட்டும் கொஞ்சம் ஈரம்
வார்ப்போம்.
சொல்லுங்கள்... இன்னும் ஆறு
வேளைக்குத்தான் உள்ள இந்த
உணவை அதிக வேளைக்கு
நீட்டிப்பது எப்படி?

கேள்வியின் பயங்கரத்தில்
அங்கே மையம் கொண்டதொரு
மெளனம்.

படகின் தளக், தளக், ஓசை
மட்டும் அந்த மெளனம்
பார்த்துச் சிரித்தது.
பரதன் அந்த மெளனத்தைக்
கனைத்துக் கலைத்தான்.

இனிமேல் ஒரு நாளுக்கு ஒரு
வேளைதான் உணவு. ஒரு
டம்ளர்தான் தண்ணீர்.
சரிதானா?

அதை முதலில் ஒரு தைரியசாலி
வழிமொழியட்டும் என்று
எல்லோரும்
பேசாமலிருந்தார்கள்.

சரி...

ம்...

ஆகட்டும்...

அப்படியே
செய்வோம்... ஆண்களில்
எல்லோரும் அவசரமாய்
வழிமொழிய, தமிழ்ரோஜா
மட்டும் உதடுதிறக்கவில்லை.

பத்துக் கண்களும் அவள் இரண்டு
கண்களை மொய்த்தன.

இறுதியில் அவள் எண்ணத்தை
எழுத்துக் கூட்டினாள்.

குடிப்பதற்குச் சரி...
குளிப்பதற்கு..?

குடிப்பதற்கு ஒரு
டம்ளர்தான் இருக்கிறது. நீ
குளிப்பதற்கு ஒரு கடலே
இருக்கிறது.

கலைவண்ணன் தன்
வார்த்தைகளையும் அவள்
உள்ளங்கைகளையும் ஒரே
நேரத்தில் அழுத்தி
உச்சரித்தான்.

எடுத்த முடிவு அடுத்த
நிமிடத்தில்
அமல்படுத்தப்பட்டது.

அதுவரை அரிசியை அளந்து
சமைத்துக்கொண்டிருந்த சலீம்
எண்ணிச் சமைக்க
ஆரம்பித்தான்.
முன்பெல்லாம் உருளைக்கிழங்கை
அவித்துத்
தோலைஉரித்தெறிகிறவன்,
இப்போது அதிலும்கூடச்
சத்திருக்கும் என்று சமாதானம்
சொல்லிக்கொண்டான்.

யுத்தம் உயிரின் மதிப்பைக்
குறைக்கிறது.
பஞ்சம் உணவின் மதிப்பை
உயர்த்துகிறது.

படகின் பின்விளிம்பில் மீண்டும்
ஓர் அகதியின் போராட்டம்
ஆரம்பமானது.

தமிழ்ரோஜா கண்ணீர்வற்றிய
கண்களில் கோபம் குமுறியது.

இங்கே பஞ்சுமெத்தை
இல்லை. பரவாயில்லை.
தலையணை இல்லை.
தவறில்லை. மீன்
பிசுக்கடிக்காத போர்வை
இல்லை. வருந்தவில்லை. என்
குறைந்தபட்சத் தேவை,
குளிப்பது. அதற்கும் வழியில்லை
என்றால் நான் வாழ்வதா,
சாவதா?

தமிழ். உனக்கின்னும்
விளங்கவில்லை. குளிப்பதைவிட
ஒரு பெரிய பிரச்னை
வரும்போது குளிப்பது
இரண்டாம்பட்சமாகிவிடும்.
இப்போது குளித்தல் என்பது
உயிர்வாழ்தலின் அம்சமல்ல.
குளித்தே ஆகவேண்டுமென்றால்
கடலில் விழு. எழு. உனக்குள்ள
குடிதண்ணீரில் ஒரு டம்ளர்
ஒதுக்கித் துண்டை நனைத்துத்
துடை. கரைசேரும் வரை
டம்ளர்தான் உன் குளியல்
அறை.

முடியவே முடியாது. என்
உடம்பும் மனசும் நான்
சந்திக்காத வாழ்க்கைக்குத்
தயாராகாது.

உயிர்ஆசையிருந்தால் நிறம்
மாறித்தான் தீரவேண்டும்.
இந்த விஷயத்தில் நீ
விலங்குகளிடம் நிறைய
விளங்கிக்கொள்ள வேண்டும்.

விலங்குகளா?

ஆமாம். கடல் விலங்குகள்.
இதோ, விரிந்து பரந்து
செறிந்து நெகிழ்ந்து நிற்கிறதே
இந்த நீலத்தண்ணீர்...
இதற்குக் கீழே பவளம்
மட்டுமல்ல. மனிதனுக்குப்
பாடமும் இருக்கிறது. இந்தச்
சூரியக்கதிர் இருக்கிறதே, இது
350 அடி ஆழம் வரைதான்
தண்ணீர்துளைக்கும். அதற்குக்
கீழே இருள்தான். இருள்தான்.
இந்தக் கடல் தோன்றிய
நாள்தொட்டு இன்றுவரை
அங்கே இரவுதான். ஆனால்,
அங்கே வாழும் பிராணிகள்
இருளில் இறந்து போகவில்லை.
ஸகுவிட்போன்ற
பிராணிகள், தங்கள்
உடம்பிலேயே வெளிச்சம்
போட்டு உலவுகின்றன -
தங்கள் சொந்தச் செலவில்
சுயவெளிச்சம்
போட்டுக்கொள்ளும் சில
மனிதர்களைப்போல.

அப்படியா?

ஆமாம். எல்லாப்
பிராணிகளுக்கும் இரண்டே
லட்சியங்கள்.

என்னென்ன?

இரை தேடுவது.
இரையாகாமல் இருப்பது.
ஆக்டோ பஸ என்ன செய்யும்
தெரியுமா?

தெரியாது.

எதிரி துரத்தினால் அதன்
உடம்பு சில வண்ணத் திரவங்கள்
கக்கும். கடல் நீரை
நிறம்மாற்றி எதிரியின் கண்ணைக்
குருடாக்கும். தண்ணீர்
தெளிவதற்குள்
தப்பித்தோடிவிடும்.

இந்தக் கதையெல்லாம்
எனக்கெதற்கு?

சூழ்நிலையை வெற்றி
கொள்ளும் சூத்திரம் தெரிய
வேண்டும் உனக்கு.
வாழ்க்கையை வாழப்பார்.
அல்லது வாழ்க்கைக்கேற்ப
உன்னை வார்க்கப்பார்.
அழுவதுதான் அவமானமே தவிர
- அவதி தாங்குதல் அவமானம்
அல்ல. வெற்றி என்ற தேருக்கு
எதிர்ப்பு, துன்பம் என்று
இரண்டே சக்கரங்கள். சிரமம்
வாழ்வின் சேமிப்பு. வளையாத
அம்பின் சக்தி என்பதென்ன?
வளைந்த வில்தானே.
சந்தர்ப்பம்தான் சக்தி
தருகிறது.

எல்லாம்
கற்பனாவாதம்.
அவள் கத்திமுடித்துக் காது
பொத்தினாள்.

அவன் நெருங்கி
உட்கார்ந்தான். அவள் ஒதுங்கி
உட்கார்ந்தாள்.

நீங்கள் மனிதகுல
மீட்சிக்காகப் பேசுகிறீர்கள்.
எனக்கோ ஓட்டைப்
படகிலிருந்து உடனே மீட்சி
வேண்டும். இப்போது எனக்குத்
தனிமை வேண்டும்.
விட்டுவிடுங்கள்.
என்னைத் தனிமையில்
விட்டுவிடுங்கள்.
அவள் சத்தமிட்டுப்
பின்னேறினாள்.

உழக்கில் என்ன கிழக்கு
மேற்கு? முட்டையில் என்ன வட
துருவம் - தென் துருவம்?
நாற்பத்தொன்பதடி நீளம்
கொண்ட சின்னப் படகில் என்ன
தன்னந்தனிமை?

அவன் முனகிக்கொண்டே எழுந்து
நடந்து முன்விளிம்பில்
கலந்தான்.

தனிமை. வெறுமை. பெயர்
தெரியாத ஒரு கிரகத்தில்
வழிதெரியாமல்
விழுந்தவர்களைப்போல் ஒரு
பிரமை.

அந்தப் படகின் ஒரே ஓர்
ஆறுதல் தாளிப்பு
வாசனைதான்.

அளந்து வைத்த சாப்பாடு.
ஆளுக்கொரு மீன்.
சாப்பாட்டின் கடைசியில்
மிச்சமானது போல்
எல்லோருக்கும் கொஞ்சம்
கொஞ்சம் குழம்பு.
ஒரே ஒரு தட்டில் மட்டும்
சாப்பாடும் சாம்பாரும்.

எல்லாச் சோற்றையும்
பசிபிசைந்தது.

தமிழும் பிசைந்தாள்.
அவசரத்தில் பிசைந்ததில்
சோற்றின் சூட்டில் அவள்
ரோஜாத்தோல் வெந்தது.
உருட்டிய கவளத்தை
எல்லோரும்
உண்ணப்போனபோது -
நிறுத்துங்கள் என்று
சத்தமிட்டுக் கத்தினான் சலீம்.

அதிர்ச்சியில் யாரும்
அசையவில்லை.

ஒவ்வொருவர் பங்காய்க்
கொஞ்சம் கொஞ்சம் சோறு
கொடுங்கள்.

அவன் இரு கை ஏந்தினான்.

ஏனென்று யாரும்
கேட்கவில்லை.

விசாலமாய் விசாரிக்க
அவர்களின் பசிக்குப் பொறுமை
இல்லை.

எல்லோரும் கொஞ்சம்
கொஞ்சம் கொடுத்தார்கள்.

இரு கைகள் ஏந்தியும் ஒரு
கையும் நிரம்பவில்லை.

வசூலித்த சோறெடுத்து உள்ளே
ஓடினான்.

ஓடிய வேகத்தில் உடனே
திரும்பினான்.

சுண்டெலிக்குச் சோறு
கொடுத்துவிட்டேன்.
எல்லோரும் சாப்பிடலாம்
என்று கூவினான்.
அவர்கள் கோரஸில்
புன்னகைத்தார்கள்.

தமிழ். சாப்பாடு
எப்படி? கலைவண்ணன்
கண்ணடித்தான்.

சாம்பார் - சோறு
இரண்டில் ஏதோ ஒன்றில்
உப்பில்லை. எது என்று
தெரியவில்லை.

அதுவரை அமைதியாயிருந்த
பாண்டி அதிர்ந்தெழுந்தான்.
சாப்பிடுவது பிச்சைச்
சோறு. இதில் உப்புப்
பார்ப்பது உங்கள் தப்பு.

வாயிலிருந்த சோற்றைக்
கலைவண்ணன் தட்டில்
துப்பினான்.
பாண்டி. இதுவரை உங்கள்
வார்த்தை தடித்ததில்லையே.
நாங்கள் தன்மானிகள்.
ஞாபகமிருக்கட்டும். எங்கள்
உடம்பில் ஓடுவது
தமிழ்ரத்தம்.

எங்கள் உடம்பில் ஓடுவது
மட்டும் இங்கிலீஷ ரத்தமா?
தமிழ்ரத்தம்தான்.
உரத்துப்பேசினான் பாண்டி.

கொடுப்பது இலவசம்.
அதிலென்ன நவரசம்?
இசக்கியும் சேர்ந்து
கொண்டான்.

இவர்கள் கால்வைத்த
நேரம் படகு
பழுதாகிவிட்டது. பரதன்
பழிபோட்டான்.

விசைப்படகின் விளிம்பில்
அமர்ந்திருந்த கலைவண்ணன்
எழுந்து நின்றான்.
இப்படியெல்லாம்
அவமானப்படுத்தினால் நான்
கடலில் குதித்துவிடுவேன்.

நீயென்ன குதிப்பது?
நாங்களே
தள்ளிவிடுகிறோம்.

மீனவர் முவரும் எழுந்து
கலைவண்ணன் நெஞ்சில்
கைவைத்து அழுத்தினார்கள்.
அவன் திமிறினான்.

வேண்டாம். வேண்டாம்.

தமிழ்ரோஜா ஆடும் படகில்
ஆடிக்கொண்டே ஓடி வந்தாள்.
அதற்குள் முவரின் மிருகபலமும்
கலைவண்ணனைப் புரட்டிக்
கடலில் தள்ளியது.

உள்ளே விழுந்தவன் முழ்கினான்.
வெளிவந்தான்.
மிதந்தான். மறைந்தான், கைகால்கள்
உதறினான், நீர் குடித்தான், நிலை மறந்தான்.

காப்பாற்றுங்கள் என்று சைகை செய்தான்
யாரும் அவனைக் காப்பாற்ற முனையவில்லை.

அய்யோ. அய்யய்யோ. அவரைக்
காப்பாற்றுங்கள் - தமிழ் ரோஜா கதறினாள்.

எல்லோரும் இறுகி நின்றார்கள், யாரும்
இரங்கவில்லை.

தண்ணீரில் தத்தளித்தவன் முழ்கிவிடுவான்
போலிருந்தது.

அவன் ஏதேதோ உளறினான். தண்ணீர் குடித்துத்
தமிழ்பேசியதில் ஒன்றும் புரியவில்லை.

அவ்வளவுதான். அவன் தன் சுயபலம்
இழந்துவிட்டான் போல் தோன்றியது.

காப்பாற்றுங்கள், தயவுசெய்து காப்பாற்றுங்கள்.

அவர்கள் மசியவில்லை முதுகுதிருப்பிக்
கொண்டார்கள்.

தொப்பென்று சத்தம் கேட்டது., திரும்பிப்
பார்த்தார்கள்.

தமிழ்ரோஜாவைக் காணவில்லை.

குதித்தவள் அவள்தான்.