» மனிதன் நினைக்கிறான்

ஆசிரியர் : கவிஞர் வைரமுத்து.
௰)

மனிதன் நினைக்கிறான் -
இந்தப் பிரபஞ்சமே
தனது பிடியிலென்று.

வானம் இடிந்தாலும் பூமி
பிளந்தாலும் ஊழிவெள்ளம்
உயர்ந்தெழுந்து நட்சத்திரங்ளை
நனைத்தாலும்
தன் புகழ் அழியாதென்று
தருக்கித் திரிகிறான்.

எனது புகழ் - எனது சாதனை
- எனது இலக்கியம் -
எனது பெயர் இவையெல்லாம்
காலம் என்ற பரிமாணத்தின்
கடைசி வரை, காலத்தையே
வென்றுவாழும் என்று
கனாக்காண்கிறான்.

ஆனால், பூமி அவனைப்
பார்த்துப் பொறுமையாய்ப்
புன்னகைக்கிறது.

இந்தப் பூமி பிறந்து இருநூறு
கோடி ஆண்டுகள்
இருக்குமென்பது ஆராயப்
புகுந்தவர்களின்
தோராயக் கணக்கு.

இதில் முதல் உயிர் முளைத்தது
முன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு
முன்புதானாம்.

196 1/2 கோடி ஆண்டுகள்
இந்தப் பூமி வெறுமையில்...
வெறுமையில்... யாருமற்ற
தனிமையில்.

காற்றின் ஓசையும் - கடலின்
ஒலியும் - இடியின்
பாஷையும் தவிர 196 1/2
கோடி ஆண்டுகள் வேறோன்றும்
சப்தமில்லை.

முதல் உயிர் பிறந்தது
முன்றரைக் கோடி ஆண்டுகட்கு
முன்புதான் என்றால்
குரங்கிலிருந்து மனிதன் குதித்தது
35 லட்சம் ஆண்டுகளுக்கு
முன்புதான்.

பூமியின் காலக்கணக்கில் மனிதன்
என்பவன் ஒரு துளி.

இந்த இடைக்காலத்தில் இந்தப்
பூமி என்னும் கிரகத்தில்
எத்தனையோ ஜீவராசிகள்
தோன்றித் தோன்றித்
தொலைந்திருக்கின்றன.

மனிதன் என்பவனும் இந்தப் பூமி
என்னும் கிரகத்தில் வந்துபோன
ஒரு ஜீவராசி என்று நாளை
வரலாறு பேசலாம்.

இதுவரை வந்த ஜீவராசிகளில்
மனிதனே சிறந்தவனெனினும் -
பூமியைப் புறங்காணும் புஜபலம்
மிக்கவனெனினும்
காலச்சூழலில் அவனும்
காணாமல் போகலாம்.

எனவே இதில் நிலை என்றும்
நிரந்தரமென்றும்
சொல்வதெல்லாம்
அறியாமையின்
அடுக்குமொழிகளே தவிர
வேறல்ல.
வாழும் வாழ்க்கை வரை
நிஜம். இருப்பதொன்றே
இன்பம்.

இரை தேடுவதும்
இரையாகாமல் இருப்பதுமே
உயிரின் குணம்.

இன்பமே உயிரின் வேட்கை.

புலன்களின் தேவைகள் தீர்த்து
வைப்பதே வாழ்தலின்
அடையாளம்.

எனக்குப் பசிக்கிறது
என்றாள் தமிழ் ரோஜா.

அப்படிக் கேளடி என்
தங்கமே.
மடியில் கிடந்தவளை
இறக்கிவைத்துவிட்டு, உள்ளே
ஓடிப்போய்
மீனவர்கள் பயன்படுத்தும்
பற்பசை கொண்டுவந்தான்
கலைவண்ணன்.

விரலில் பசைபிதுக்கி ஈறுகளிலும்
பற்களிலும் இழுக்கத்
தெரியாமல் இழுத்து,
கொஞ்சத் தண்ணீரில் அவள்
கொப்பளித்துத் துப்பினாள்.

தட்டேந்தி வந்தான் சலீம்.

அதிலிருந்த பொங்கலுக்கும்
சட்னிக்கும் வித்தியாசம்
பிரித்தறியத்தக்க சாட்சியங்கள்
இல்லாமல் அவள்
தடுமாறினாள்.

அதை உருட்டி உருட்டி
விழுங்கவைத்தது அவளை
மிரட்டிக்கொண்டிருந்த பசி.

என்ன சலீம். கப்பல்,
படகு ஏதேனும் கண்ணுக்குத்
தட்டுப்படுகிறதா?

அவன் சமையலை அவனே
சாப்பிட்டதுபோல் முகம்
கோணிநின்ற சலீம்
உங்களுக்கு நீச்சல்
தெரியுமா?
என்றான்.

ஏன் கேட்கிறாய்?
என்றான் கலைவண்ணன்.

நாற்பத்தைந்து
கிலோமீட்டரை
நான்கு நாட்களில்
நீந்திவிட முடியாதா என்று
பாண்டிக்கும் பரதனுக்கும்
பட்டிமன்றம் நடக்கிறது.

சொல்லிவிட்டு
மறைந்துவிட்டான். அவன்
சொன்ன சொற்கள்
மறையவில்லை.

கப்பலோ படகோ
வரவில்லையென்றால் கரைசேர
முடியுமா கலைவண்ணன்?

ஏதாவதொரு அதிசயம்
நிகழ வேண்டும்.

அதிசயமா?

மேகங்களை
விலக்கிக்கொண்டு சில
தேவதைகள் வரவேண்டும்.
அல்லது திடீரென்று சிறகு
முளைத்து
இந்தப் படகே பறவையாக
வேண்டும். அல்லது
நீலக்கடல் வற்றி நிலமாக
வேண்டும். அல்லது இந்துமகா
சமுத்திரத்தில் இதுவரை
இல்லாத எரிமலை ஒன்று
கண்விழித்து, நிலத்தடி மண்ணை
அள்ளிப் பொழிந்து
மின்னல் வேகத்தில் ஒரு மேடு
உண்டாக்க வேண்டும்.
அல்லது பால்கன் தீவு
மாதிரி...

அது என்ன பால்கன்
தீவு? - அவள்
ஆர்வமானாள்.

ஆஸதிரேலியாவுக்குக்
கிழக்கே இரண்டாயிரம் மைல்
தூரத்திலிருந்த பால்கன் தீவு
திடீரென்று மறைந்து
விட்டது. பதின்முன்று
ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்
பளிச்சென்று மேலெழுந்தது.
அப்படி இங்கே
முழ்கிய தீவு ஏதேனும்
முகம் காட்ட வேண்டும்.

அப்படிக்கூட
நேர்வதுண்டா?

அங்கே நேர்ந்தது,
இங்கே நேரவில்லை. இங்கு
மட்டும்
அப்படி நேர்ந்தால் -
கொடுங்கடல் கொண்ட
குமரிக்கண்டம்
மீண்டும் குதித்து வந்திருக்கும்.
தமிழர்களின் சாகாத
நாகரிகத்துக்குச் சாட்சி
கிடைத்திருக்கும். குணகடலின்
இளவரசி என்று
கொண்டாடப்பட்ட பூம்புகார்
மீண்டும்
பூத்து வந்திருக்கும்.
நேரவில்லையே.
பால்கன் தீவுக்கு நேர்ந்த
மறுபிறப்பு
எங்கள் பழந்தமிழ் பூமிக்கு
நேரவில்லையே.
நேராது. கடலுக்குத்
தமிழ்மேல் ஆசை.

வெயில் ஏறியது. வேறோரு
வாழ்க்கைக்குப் படகு
தயாராகிக் கொண்டிருந்தது.

மீனவர் ஒவ்வொருவரும்
விசைப்படகின் விளிம்புக்கு வந்து
வந்து கப்பலோ படகோ
தெரிகிறதா என்று
கடல்வெளியெங்கும் கண்களை
வீசினார்கள்.

நல்ல செய்தி சொல்லிக்
கரைவதற்கு ஒரு காக்கைகூடக்
கண்ணுக்குத்
தட்டுப்படவில்லையே.

வெயில் ஏற ஏற, உடம்பில்
வேர்வையும் மனதில்
சோர்வும் கசியக் கசிய
அங்கங்கே உட்கார்ந்து
உறைந்தார்கள்.

சோகமில்லாதது சுண்டெலி
மட்டுந்தான்.

ஆறுபேர்க்கும் சேர்த்து அது
சந்தோஷமாயிருந்தது.

சில்லென்று துள்ளிச் சில்மிஷம்
செய்து - வேகமாய்த்
தாவித்தாவி வித்தை காட்டி
தன் பின்னங்கால்களைத்
தளத்தில் பதித்து -
முன்னங்கால்களாலும் வாலாலும்
அபிநயம் புரிந்து வேடிக்கை
காட்டி விளையாடியது.
அஃறிணைகள் சாகும்வரை
மகிழ்ச்சியாகவே
இருக்கின்றன.
மனிதன்தான்
பாதி வாழ்க்கையிலேயே
படுத்துவிடுகிறான்.

கீழே விழும்வரை ஒரு
தென்னங்கீற்று காற்றோடு
பாடும் சங்கீதத்தை நிறுத்திக்
கொள்வதில்லை.

மரணத்தின் முன்நிமிஷம் வரை
பட்டாம் பூச்சித் தன்
சிறகுகளைச் சுருக்கிக்
கொள்வதில்லை.

ஒரு கலப்பையின்கொழு
தன்னை இடறும்வரை
ஒரு மண்புழு தன் தொழிலைக்
குறைத்துக் கொள்வதில்லை.

எந்தப் பகுத்தறிவு,
பிராணிகளைவிட்டு மனிதனைப்
பிரித்துக் காட்டுகிறதோ அதே
பகுத்தறிவுதான்
கனவுகளால் நிராசைகளால்
அவனை வருத்தியும் வைக்கிறது.

எங்கு பார்த்தாலும் நீலம்.
கீழும் மேலும் நீலம்.

பார்வை முடியும் பரப்பில்
வந்து கவியும் வானவட்டம்.

தமிழ் எழு. தோழர்களுக்கு
நாம் துணிவு சொல்வோம்.
வா.
அவளைத் தாங்கி அழைத்துத்
தளம் வலம் வந்தான்.

அவர்களைப் பார்த்ததும்
அச்சடித்த சித்திரங்கள்
அங்கங்கே அசைந்தன.

பாண்டி. பரதன். என்ன
இது? படகே முழ்கிப்
போன மாதிரி ஏன் முகம்
கறுத்து நிற்கிறீர்கள்?
எப்போதும் போலவே
இருங்கள். இப்போது
நம்மிடம் இரண்டு வாகனங்கள்.
ஒன்று படகு.
இன்னொன்று நம்பிக்கை.
படகு கவிழ்ந்தாலும்
கரைசேர முடியும். நம்பிக்கை
கவிழ்ந்தால் கரைசேர
முடியுமா?

மீனவர் உதடுகளில் ஒரு வாடிய
புன்னகை ஓடியது.

நாங்கள் வருந்துவது
எங்களுக்காக அல்ல. சிக்கலில்
உங்களையும்
சிக்கவைத்துவிட்டோ மே.
அதற்குத்தான்.

இது சிக்கல்தான்.
எல்லோரும் சேர்ந்து
சிக்கெடுப்போம்.
ஒவ்வொரு படகிலும்
தேசியக்கொடி பறக்க
வேண்டுமாமே.
கொடி எங்கே?

உள்ளே இருக்கிறது.

உடனே எடுங்கள்.
அபாயக்கொடி மட்டும்
போதாது.
அதற்குப் பக்கத்தில் அதைவிட
உயரமாய்
தேசியக்கொடியும் சேர்ந்து
பறக்கட்டும்.

ஏன்? நாம் இந்து மகா
சமுத்திரத்தில்தானே
இருக்கிறோம். எதற்காகத்
தேசியக்கொடி?
என்றாள் தமிழ்ரோஜா.

இந்துமகா சமுத்திரம்
இந்தியாவுக்கு மட்டும்
சொந்தமல்ல.
எந்த நாட்டுக் கடலும்
கரையிலிருந்து ஐந்து
கிலோமீட்டர்வரைக்கும்தான்
அந்த நாட்டுக்குச் சொந்தம்.
அதன் பிறகு வருவது
பொதுக்கடல்.

எந்தக் கலமானாலும் அந்த
நாட்டுத் தேசியக்
கொடியைத்
தாங்கியிருக்கவேண்டும்.
தேசியக்கொடி இல்லாதது
கொள்ளைக்கலம் என்று
கருதப்படும்.
நாம் சுடப்படலாம்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
அபாயக்கொடிக்குப்
பக்கத்தில் இந்தியாவின்
தேசியக்கொடி பறந்தது.

ஏதோ ஒரு
நம்பிக்கைமொழியைத்
தேசியக்கொடி
அவர்களோடு படபடத்துப்
பேசியது.

பார்ப்போம்,
பாலைவனத்தைக்கூட மேகம்
கடக்கிறதே.
இந்தப் படகை ஒரு
படகு கடக்காதா?

அவர்களின் திருடப்பட்ட
சந்தோஷத்தின் முதல்
தவணை திருப்பித் தரப்பட்டது.

தத்தித்தாவும் அலைகளில்
தள்ளாடிக்
கொண்டேயிருந்தது படகு.

இது என்ன கலத்தின் கீழே
ஒரு தளம்?
- பிள்ளைக்கேள்வி கேட்டாள்
தமிழ்ரோஜா.

அது பனிக்கட்டிப்பெட்டி.
அதுதான் மீன் கிடங்கு.
பார் அங்கே. பிடித்த
மீன்களைப் பதப்படுத்தி
வைக்கப்
பெட்டிப் பெட்டியாய்ப்
பனிக்கட்டிகள்.
பெரிய கிடங்கு இது. இறங்கிப்
பார்ப்போமா?

அவள் மறுத்தாள். அவன்
இழுத்தான்.

வலக்கரத்தால் அவன்
கரத்தையும் இடக்கரத்தால்
தன் முக்கையும்
பிடித்துக்கொண்டே அவள்
இறங்கினாள்.

ஆறடி ஆழம், பதின்முன்றடி
நீளம். பன்னிரண்டடி
அகலம். அது சற்றே
இலக்கணம் மீறிய சதுரம்.

குப்பென்று அடித்த
மீன்வாசத்தில் நெஞ்சடைத்தது.

தொகுதி தொகுதியாய்ப்
பனிக்கட்டிப் பெட்டிகள்.

அங்கங்கே இறைந்து கிடக்கும்
சில்லறைப் பொருட்கள்.

தரையில் செதில்களின் பிசுக்கு.
ஓரத்தில் இரண்டு பீப்பாய்கள்.

உள்ளறையில் பார்வை பரப்பிய
தமிழ்ரோஜா
கலைவண்ணன் கையிலிருந்து
தன்னைக்
கழற்றிக்கொண்டு - நீங்கள் மேலே
போங்கள் நான் வருகிறேன் என்றாள்.

ஒன்றும் புரியாமல் விழித்தவன் சட்டென்று
பிரகாசமாகி ஓ. அதுவா? என்று சிரித்து மேலே
போனான்.

தளத்திற்கு வந்தான் மீண்டும் கடல்பார்த்தான்,
மீண்டும் வான் பார்த்தான்.

தலைக்குமேலே ஒரு பறவைக்கூட்டம்
படபடவென்று சிறகடித்துப் பறந்து தூரத்து
வானத்தில் தொலைந்தது.

ஓ பறவைகளே. நீங்கள் மட்டும் கரைக்குத்
தகவல் சொல்லி ஒரு கலம் அழைத்துவந்தால்
சாகும்வரைக்கும் நான் சைவனாயிருப்பேனே.

சற்றுநேரத்தில் தமிழ்ரோஜா செம்பருத்திப்
பூவாய்ச் சில்லென்று பூத்து வந்தாள்.

மலர்ந்திருந்தது முகம், பொலிந்திருந்தது தேகம்.

திறந்த விழிகளால் வியந்துநின்ற கலைவண்ணன்,
பனியில் குளித்த பாரிஜாதமாய் வந்திருக்கிறாயே...
எப்படி? என்றான்.

குளித்தேன் என்றாள்.

குளித்தாயா? தண்ணீர்..?

இரண்டு பீப்பாய்கள் இருந்தன. ஒரு
பீப்பாய்த் தண்ணீர் போதவில்லை.
இரண்டாவது பீப்பாயிலும் கொஞ்சம்
எடுத்துக் குளித்தேன். அப்போதைக்கிப்போது
அழகாய் இருக்கிறேனா?

அடிப்பாவி.

அதிர்ச்சியடைந்தான் கலைவண்ணன்.

குடிக்க வைத்திருந்த தண்ணீரைக்
குளித்துவிட்டாயே தாயே - சலீம் அழுதான்.

Advertisement