» மன்னித்துவிடு

ஆசிரியர் : கவிஞர் வைரமுத்து.

என்னை மன்னித்துவிடு தமிழ்.
நானே இயக்கிய நாடகத்தில்
நீமட்டும்தான்
நிஜமான பாத்திரம்.

மன்றாடிக் கேட்கிறேன்.
மன்னித்துவிடு.

மொட்டுக்களை
உடைத்துவிட்டதற்காகச்
செடியிடம் தென்றல்
மன்னிப்புக் கேட்பதில்லை.

சிவக்கச் சிவக்கச்
சுட்டுவிட்டதற்காகத்
தங்கத்திடம்
நெருப்பு மன்னிப்புக்
கேட்பதில்லை.

தண்ணீரில் உன்னைக்
குதிக்கவைத்ததற்காக உன்னிடம்
நான் மன்னிப்புக்
கோருகிறேன்.

தென்றல் முட்டியது -
மொட்டுக்களை மலர்த்த.
நெருப்பு சுட்டது - தங்கம்
நகையாக.

நாடகமாடி நாங்கள் தண்ணீரில்
உன்னைக் குதிக்கவைத்தது -
உனக்குள் உறங்கும் வீரத்தை
உசுப்ப.

தைக்கும் பருத்தித் துணியைத்
தண்ணீரில் ஊறப் போடும் ஒரு
தையற்காரனைப் போல் -
உன்னை வேண்டுமென்றே
நனைத்தேன். இப்போது
சொல். எப்படி வந்தது
இந்தச் செப்படி வித்தை?

அலைகண்டு மயங்கிவிழும் நீ
ஆழ்கடலில் குதித்ததெப்படி?

அச்சம் என்பது ஒரு நினைப்பு நிலை.
மறந்தால் அச்சமில்லை.

என்னைக் காப்பாற்றும்
அவசரத்தில் நீ தன்னை மறந்து
தாவிக் குதித்தாயே. அதுதான்
இத்தனை நாளாய் உனக்குள்
உறக்கநிலையில் இருந்த சக்தி.

உன் பங்களாவாசத்தில்
உறங்கிக் கொண்டிருந்த சக்தி.
வங்காளவிரிகுடாவில்
விழித்திருக்கிறது. மீண்டும்
உறங்கவிட்டு விடாதே.

இதோ. சொட்டிக்
கொண்டிருக்கும் உன் ஆடையின்
ஈரம் வடிய வடிய உன்
அச்சமும் வடிந்துவிட வேண்டும்.
வடிந்தே தீரும்.

ஏ தெப்பமாய் நனைந்துபோன
சிற்பமே. கவிழ்ந்த தலை
நிமிர்ந்து பார். கண்ணெடுத்துப்
பார்.

நல்ல நடிகர்கள் நம் மீனவ
நண்பர்கள்.

வாத்தியாரின் நோட்டில்
கிறுக்கிவிட்ட மாணவர்களைப்
போலக் குற்ற உணர்ச்சியில்
அவர்கள் குறுகிநிற்பது பார்.

என்னை மன்னிப்பாயோ...
மாட்டாயோ... அவர்களை
நீ மன்னிக்கத்தான்
வேண்டும்.

அவர்களை ஏன் நான்
மன்னிக்க வேண்டும்?

முழங்காலில் முகம்புதைத்துத்
தண்ணீர் சொட்டக் குனிந்திருந்த
தமிழ், பளிச்சென்று
நிமிர்ந்தொரு பட்டாசு
வெடித்தாள்.

எல்லோரும் தவித்துநிற்க,
அவளே தொடர்ந்தாள்.
அவர்களுக்குரியது
மன்னிப்பல்ல. நன்றி.

நன்றியா? எதற்கு?

என் பயத்தைக் கடல்நீரில்
கழுவினார்களே. அதற்கு.

எனக்குள்ளிருந்த வீரத்தை
எனக்குத் தெரியாமல் விழிக்க
வைத்தார்களே. அதற்கு.

என்னையும் உங்களையும்
காப்பாற்றிக் கலம்
சேர்த்தார்களே. அதற்கு.

கொஞ்சம் கொஞ்சம்
புரிகிறதெனக்கு. பொறுங்கள்.
நான் முழுப்பெண்ணாக முயன்று
பார்க்கிறேன்.

அவள் பேசப் பேச, அத்தனை
முகங்களிலும் ஆச்சரியப்
புன்னகை.

ஓ.

முதல் வெற்றி.

முன்று சூரியன்கள்
தொலைந்துவிட்டன. முன்று
நிலவுகள் விழுந்துவிட்டன.
ஆனால், அவர்களின்
கண்ணுக்கெட்டியமட்டும்
கப்பலோ படகோ
தட்டுப்படவில்லை.

மேலே ஏற்றிய
தேசியக்கொடிகூடப்
பறந்து பறந்து படுத்துவிட்டது.

அபாயக்கொடியான லுங்கி
அவிழ்ந்துகொண்டது.

பீப்பாயிலும் அவர்கள்
உடம்பிலும் தண்ணீர்
குறைந்துகொண்டே வந்தது.

உணவைப் போலவே
உரையாடலும் மெள்ள மெள்ள
சுருங்கிவிட்டது.

பார்வைகளால் மட்டுமே
ஒருவரை ஒருவர் நலம்
கேட்டுக்கொண்ட ஊமை
வாழ்க்கை அங்கே
தொடங்கிவிட்டது.

அசைந்தால் சக்தி
செலவாகுமென்று கலைவண்ணன்
மடியில் சலனமின்றிக் கிடந்தாள்
தமிழ்ரோஜா.

அவள் தங்கத்தோல் மங்கத்
தொடங்கிவிட்டாலும் அவள்
முகத்தில் மட்டும்
தைரியரேகைகள்.

அவள் நெற்றியில் புறப்பட்ட
அவன் சுட்டுவிரல்,
புருவமத்தியிலும் முக்கின்
பள்ளத்தாக்கிலும் முக்கின்
சிகரத்திலும் பயணப்பட்டு -
மேலுதட்டில் குதித்து -
கீழுதட்டில் தாவி - நாடிப்
பள்ளம்விட்டு நகர்ந்து - அவள்
பிஞ்சுக் கழுத்தில் பிரயாணம்
முடித்துச் சற்றே யோசித்துச்
சட்டென்று நின்றது.

அதற்குமேலும்
எதிர்பார்த்தவள், விரலின்
வேலைநிறுத்தம் உணர்ந்து
விழித்துக்கொண்டாள்.

தமிழ். அடியே தமிழ்.
என் உயிரின் திடப்பொருளே.
இந்தப் பிரபஞ்சத்தின் என்
பங்கே. உனக்குத்தான்
என்மேல் எத்தனை ஆசை.

கடல் வீழ்ந்தான் காதலன்
என்று கண்டதும் நீ தன்னை
மறந்தாய். தன் நாமம்
கெட்டாய். தண்ணீர்பயம்
களைந்தாய். நீச்சல்
தெரியாதென்பதை
நினைவிலிருந்து அழித்தாய்.
எப்படியடி குதித்தாய்?

என் இரண்டாம் உயிரே.

காவிரி கொண்டுபோன
ஆட்டனத்தியை மீட்க
ஆதிமந்திகூட வெள்ளத்தில்
விழவில்லை. கரையில் நின்று
அழுதுதான் காவியைக்
கரிக்கவைத்தாள். நீயோ
கடல்குதித்தல்லவா காதலனை
மீட்க நினைத்தாய். எப்போது
என்னுயிர் காக்க நீ தண்ணீரில்
குதித்தாயோ - அப்போதே
நாம் சாவென்ற சம்பவத்தைத்
தாண்டிவிட்டோ ம்.

ஐம்பூதங்கள் தந்த இந்த
உடலை நாளை ஐம்பூதங்களும்
பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், மரணம் என்ற
பெளதிகச் சம்பவத்தால் நாம்
மரிக்கப் போவதில்லை.

சூரியன் சுடரும்வரை அதன்
ஏதாவதொரு கிரணத்தில் நம்
கண்ணொளி கலந்திருக்கும்.
காற்றின் சுழற்சியில் நாம்
விட்டுவிட்டுப் போகும் சுவாசம்
இழைந்திருக்கும்.

அந்த நிலப்பரப்பில் நாம்
பதித்த சுவடுகளைக் காற்றின்
கரங்கள் அழித்துவிட்டாலும்,
நம் உள்ளங்கால்களின்
உஷணத்தை அது பத்திரமாகவே
பாதுகாத்து வைத்திருக்கும்.

காதல் என்ற அருவத்தின்
உருவங்கள் நாம். தடயங்கள்
அழியலாம். தத்துவங்கள்
அழிவதில்லை.

அவன் பேசிக்கொண்டேயிருக்க
- அந்தப் பேச்சுப் பாடகனை
அவள் கேட்டுக்கொண்டேயிருக்க
- வீசிக் கொண்டேயிருக்கும்
காற்றோசை மட்டும் அவனை
ஆம் ஆம் என்று
வழிமொழிந்தது.

இன்னொரு மோசமான இரவும்
முடிந்தது. லுங்கிக்குள் கூட்டுப்
புழுக்களாய் அங்கங்கே
சிதறிக் கிடந்தனர் மீனவர்கள்.

எழுந்திருங்கள். தயவுசெய்து
எல்லோரும் எழுந்திருங்கள்.

என்ன இது, வித்தியாச
விடியல். யார் குரல் இது?

புரண்டுபடுத்துச் சோம்பல்
முறித்தவர்கள் ஒரு கண் திறந்து
பார்த்தார்கள்.

இது என்ன, தேநீர்க்
கோப்பைகளோடு ஒரு
தேவதை. எல்லோரும்
சோர்வுதுடைத்துச்
சுறுசுறுப்பானார்கள்.

அம்மா. நீயாம்மா?
ஆச்சரியம் காட்டினார்கள்.

நானே தயாரித்தேன்.

எல்லோருக்கும் தேநீரை
அவளே நீட்டினாள்.

பாண்டியும் இசக்கியும்
கண்களைக் கசக்கிக் கசக்கிப்
பார்த்தார்கள்.

ம்.. வாங்கிக்
கொள்ளுங்கள். நானும் உங்கள்
வாழ்க்கைக்குத்
தயாராகிவிட்டேன்.

தேநீர் கறுத்திருந்தது. அவள்
சிரிப்பு பால் கலந்தது.

கலைவண்ணன் கைதட்டினான்.

வா. வாழ்க்கைக்குள்
இப்படி வா. இடி-மழை
இரண்டுமே வாழ்க்கை..
மழைக்கு வாய்திறக்கும் பூமி,
இடியை ஏற்க மாட்டேன்
என்றால் எப்படி?

தமிழ். இதுதான் சரி.
இப்போதுதான் நீ
மனிதராசியில் சேருகிறாய்.

கொடு உன் தேநீரை. அது
விஷமாயிருந்தாலும்
குடித்துவிடுகிறேன்.

நான் விழுந்தால் கடல்நீர்
குடிநீராகும் என்றீர்கள். நான்
தயாரித்தால் விஷம்கூட
அமுதமாகாதா?

அமுதத்தின் நிறம்
கறுப்பல்ல.

அவன் குடித்தான். அவள்
சிரித்தாள். சிரிப்பு மட்டுமே
ருசியாயிருந்தது.

அது நான்காம் பகல்.

ஒரு படகும் தெரியவில்லை.
கட்டுமரங்களும்
தட்டுப்படவில்லை.

கப்பலின் அடையாளமாய்
அவர்களின் தலைக்கு மேலே
இருந்த வானத்தில் ஒரு
புகைக்கோடுகூட விழவில்லை.

அவ்வப்போது சிறகடிக்கும் பறவைக்
கூட்டங்கள் மட்டுமே ஏதோ ஒரு
நம்பிக்கையை எழுதிப்போயின.

வானத்தில் திட்டுத்திட்டாய் மேகங்கள்
படகில் திட்டுத்திட்டாய் சோகங்கள்.

நாம் என்ன துரோகம் செய்தோம்? இந்தக்
கடலுக்கு நம்மேல் கருணை இல்லையா?
தமிழ்ரோஜா இளைத்த குரலில் பேசினாள்.

ஐந்து கண்டங்களுக்கே கருணைகாட்டும்
கடல் நம் ஆறு பேருக்குக் கருணைகாட்டாதா?
பொறு தோழி பொறு.

கண்டங்களுக்குக் கருணையா?

ஆமாம். கடலடியில் இரண்டு நீரோட்டங்கள்.
ஒன்று வெப்ப நீரோட்டம், இன்னொன்று
குளிர்நீரோட்டம். கடலின் வெப்ப நீரோட்டம்
தான் ஸவீடன், நார்வே போன்ற நாடுகளைக்
கொஞ்சம் சூடுபடுத்தி வைத்திருக்கிறது.
இல்லையென்றால். கிரீன்லாந்தைப் போல
அந்த நாடுகளும் பனிப்பாலைகளாய்
இருந்திருக்கும்.

கடல் வெறும் கடலல்ல கருணைக்கடல்
அது இன்னொரு கருணையும் புரிகிறது.
பூமியின் தட்பவெப்பத்தை வாங்கிப்
பகிர்ந்தளிக்கும் வங்கி அது.

பூமத்திய ரேகைக்கு அருகில் கிடைக்கும்
வெப்பத்தைத் துருவப் பிரதேசங்களுக்கும் -
துருவப் பிரதேசங்களின் குளிரை பூமத்திய
ரேகைப் பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்கிறது.

இத்தனை வேலை செய்யும் கடலுக்கு
நமக்கு ஒரு படகு மட்டும் அனுப்பத்
தெரியாதா? அவள் சுருதி குறைந்து பேசினாள்.

அதுவரை அமைதிகாத்த படகின் முன்விளிம்பில்,
உச்சக்குரல் ஒன்று ஓங்கி ஒலித்தது.

என் பங்கு மட்டும் ஏன் குறைகிறது?
இது என்ன மிச்சச் சோறா? எச்சில் சோறா?
நீ கொடுக்கும் குழம்பு பத்துப் பருக்கை
நனைக்கவே போதாது. இதைச் சாப்பிடுவதை
விடச் சாப்பிடாமலே இருக்கலாம்.

எட்டிப்பார்த்தார்கள்

இசக்கி.

இருவரும் முன்விளிம்பு நோக்கி
முன்னேறினார்கள்.

சற்றே மெளனம் சாதித்த சலீம் வாய்திறந்தான்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
நாளை முதல் சாப்பிடமுடியாது. இன்னும்
இருப்பது அரைகிலோ அரிசிதான்.
இருபது லிட்டர் தண்ணீர்தான் என்ன
செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.

அது எல்லோரும் எதிர்பார்த்ததுதான்,
எதிர்பார்த்து வந்தாலென்ன -
எதிர்பாராமல் வந்தாலென்ன -
இடி இடிதான்.

என்ன செய்யலாம்?

ஒரு முடிவுக்கு வந்தபிறகு பாண்டி அந்த
மெளனத்தில் கல்லெறிந்தான்.

சொல்கிறேன், கேளுங்கள். அந்த அரைகிலோ
அரிசியைச் சோறாக்கிவிடலாம். ஆனால்,
அந்தச் சோற்றை யாரும் சாப்பிடாமல் நீருற்றி
வைக்கலாம். அந்தக் கஞ்சித் தண்ணீர்தான்
நம் உணவு, ஆளுக்கு அரை டம்ளர்.
சோற்றில் நீர் குறையக் குறைய நீர் மட்டும்
ஊற்றிக் கொண்டேயிருக்காலாம். என்ன
சொல்கிறீர்கள்?

மீண்டும் அங்கே மெளனம் நிலவியது.

அந்த மெளனம் என்பது சம்மதமில்லை,
ஆனால் சம்மதிக்காதிருப்பது அங்கே
சாத்தியமில்லை. கொஞ்சநேரத்தில் அவர்களின்
அரைகிலோ நம்பிக்கை உலையில் கொதிக்கத்
தொடங்கியது.

அன்று நள்ளிரவில் தேய்பிறை நிலவின்
அழும் வெளிச்சத்தில் .. தூக்கம் வராமல்
புரண்ட ஓர் உருவம் மட்டும் மெள்ள எழுந்தது.

உறங்கும் உருவங்களை உறுதி செய்து
கொண்டு பூனையின் பாதங்களால் நடந்தது.

சமையல் அறையில் நுழைந்து கஞ்சிப்பாளையில்
கைவிட்டது.

அவ்வளவுதான்.

திருட்டுநாயே. இன்னோர் உருவம் அதைப்
பாய்ந்துபிடித்துக் கடல்கிழியக் கத்தியது.

Advertisement