» இனியவைகூறல்

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௯௰௧)

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

மு.வ உரை:ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

௯௰௨)

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.

மு.வ உரை:முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

சாலமன் பாப்பையா உரை:முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.

௯௰௩)

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்.

மு.வ உரை:முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை:பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

௯௰௪)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

மு.வ உரை:யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை:எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

௯௰௫)

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.

மு.வ உரை:வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

சாலமன் பாப்பையா உரை:தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

௯௰௬)

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.

மு.வ உரை:பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

சாலமன் பாப்பையா உரை:பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

௯௰௭)

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.

மு.வ உரை:பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

சாலமன் பாப்பையா உரை:பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.

௯௰௮)

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.

மு.வ உரை:பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

சாலமன் பாப்பையா உரை:பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

௯௰௯)

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.

மு.வ உரை:இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

சாலமன் பாப்பையா உரை:பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.

௱)

இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

மு.வ உரை:இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

Advertisement