» புதல்வரைப் பெறுதல்

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௬௰௧)

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற.

மு.வ உரை:பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை:அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

௬௰௨)

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.

மு.வ உரை:பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

சாலமன் பாப்பையா உரை:பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

௬௰௩)

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.

மு.வ உரை:தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

௬௰௪)

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.

மு.வ உரை:தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

௬௰௫)

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

மு.வ உரை:மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.

௬௰௬)

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.

மு.வ உரை:தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

௬௰௭)

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.

மு.வ உரை:தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை:தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

௬௰௮)

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

மு.வ உரை:தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை:தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

௬௰௯)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.

மு.வ உரை:தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை:தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

௭௰)

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.

மு.வ உரை:மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

சாலமன் பாப்பையா உரை:தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

Advertisement