» ஊழ்

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௩௱௭௰௧)

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி.

மு.வ உரை:கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை:பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.

௩௱௭௰௨)

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை.

மு.வ உரை:பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

சாலமன் பாப்பையா உரை:தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

௩௱௭௰௩)

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்.

மு.வ உரை:ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

சாலமன் பாப்பையா உரை:பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).

௩௱௭௰௪)

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.

மு.வ உரை:உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

சாலமன் பாப்பையா உரை:உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.

௩௱௭௰௫)

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.

மு.வ உரை:செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

சாலமன் பாப்பையா உரை:நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.

௩௱௭௰௬)

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.

மு.வ உரை:ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.

சாலமன் பாப்பையா உரை:எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.

௩௱௭௰௭)

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

மு.வ உரை:ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

சாலமன் பாப்பையா உரை:கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

௩௱௭௰௮)

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்.

மு.வ உரை:வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

௩௱௭௰௯)

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்.

மு.வ உரை:நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.

சாலமன் பாப்பையா உரை:நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.

௩௱௮௰)

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.

மு.வ உரை:ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.

Advertisement