» கொல்லாமை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௩௱௨௰௧)

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.

மு.வ உரை:அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

சாலமன் பாப்பையா உரை:அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.

௩௱௨௰௨)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

மு.வ உரை:கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை:இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

௩௱௨௰௩)

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.

மு.வ உரை:இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

சாலமன் பாப்பையா உரை:உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.

௩௱௨௰௪)

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.

மு.வ உரை:நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

சாலமன் பாப்பையா உரை:நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

௩௱௨௰௫)

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை.

மு.வ உரை:வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.

சாலமன் பாப்பையா உரை:வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.

௩௱௨௰௬)

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று.

மு.வ உரை:கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

சாலமன் பாப்பையா உரை:கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.

௩௱௨௰௭)

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை.

மு.வ உரை:தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை:தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

௩௱௨௰௮)

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை.

மு.வ உரை:கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.

௩௱௨௰௯)

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து.

மு.வ உரை:கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

சாலமன் பாப்பையா உரை:கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.

௩௱௩௰)

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

மு.வ உரை:நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.

Advertisement