» நீத்தார் பெருமை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௨௰௧)

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு.

மு.வ உரை:ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

சாலமன் பாப்பையா உரை:தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

௨௰௨)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

மு.வ உரை:பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

சாலமன் பாப்பையா உரை:ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

௨௰௩)

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு.

மு.வ உரை:பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

சாலமன் பாப்பையா உரை:இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

௨௰௪)

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

மு.வ உரை:அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

சாலமன் பாப்பையா உரை:மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

௨௰௫)

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.

மு.வ உரை:ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

௨௰௬)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.

மு.வ உரை:செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

சாலமன் பாப்பையா உரை:பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

௨௰௭)

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு.

மு.வ உரை:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

சாலமன் பாப்பையா உரை:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

௨௰௮)

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.

மு.வ உரை:பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

௨௰௯)

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது.

மு.வ உரை:நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை:நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

௩௰)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.

மு.வ உரை:எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

Advertisement