» நாணுத்துறவுரைத்தல்

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௲௧௱௩௰௧)

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி.

மு.வ உரை:காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

௲௧௱௩௰௨)

நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.

மு.வ உரை:(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

சாலமன் பாப்பையா உரை:காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

௲௧௱௩௰௩)

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்.

மு.வ உரை:நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

சாலமன் பாப்பையா உரை:நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

௲௧௱௩௰௪)

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை.

மு.வ உரை:நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.

சாலமன் பாப்பையா உரை:ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.

௲௧௱௩௰௫)

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர்.

மு.வ உரை:மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

சாலமன் பாப்பையா உரை:மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

௲௧௱௩௰௬)

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண்.

மு.வ உரை:மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

சாலமன் பாப்பையா உரை:அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.

௲௧௱௩௰௭)

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில்.

மு.வ உரை:கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

சாலமன் பாப்பையா உரை:அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

௲௧௱௩௰௮)

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும்.

மு.வ உரை:இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.

சாலமன் பாப்பையா உரை:இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.

௲௧௱௩௰௯)

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு.

மு.வ உரை:அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

௲௧௱௪௰)

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு.

மு.வ உரை:யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை:நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!.

Advertisement