» சூது

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௯௱௩௰௧)

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

மு.வ உரை:வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.

௯௱௩௰௨)

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

மு.வ உரை:ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.

சாலமன் பாப்பையா உரை:ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?.

௯௱௩௰௩)

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்.

மு.வ உரை:ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

சாலமன் பாப்பையா உரை:சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.

௯௱௩௰௪)

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல்.

மு.வ உரை:ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.

௯௱௩௰௫)

கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.

மு.வ உரை:சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

சாலமன் பாப்பையா உரை:சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.

௯௱௩௰௬)

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார்.

மு.வ உரை:சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

சாலமன் பாப்பையா உரை:சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.

௯௱௩௰௭)

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.

மு.வ உரை:சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.

௯௱௩௰௮)

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது.

மு.வ உரை:சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை:சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.

௯௱௩௰௯)

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின்.

மு.வ உரை:சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

சாலமன் பாப்பையா உரை:சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.

௯௱௪௰)

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்.

மு.வ உரை:பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.

Advertisement