» கொடுங்கோன்மை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௫௱௫௰௧)

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.

மு.வ உரை:குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

சாலமன் பாப்பையா உரை:குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

௫௱௫௰௨)

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.

மு.வ உரை:ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

௫௱௫௰௩)

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.

மு.வ உரை:நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

சாலமன் பாப்பையா உரை:நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

௫௱௫௰௪)

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.

மு.வ உரை:(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

சாலமன் பாப்பையா உரை:மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

௫௱௫௰௫)

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.

மு.வ உரை:(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.

சாலமன் பாப்பையா உரை:தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

௫௱௫௰௬)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி.

மு.வ உரை:அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை:ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

௫௱௫௰௭)

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.

மு.வ உரை:மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

சாலமன் பாப்பையா உரை:மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

௫௱௫௰௮)

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.

மு.வ உரை:முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

௫௱௫௰௯)

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.

மு.வ உரை:அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை:ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

௫௱௬௰)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.

மு.வ உரை:நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

சாலமன் பாப்பையா உரை:காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

Advertisement