» தெரிந்துசெயல்வகை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௪௱௬௰௧)

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்.

மு.வ உரை:(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

௪௱௬௰௨)

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்.

மு.வ உரை:ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

௪௱௬௰௩)

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்.

மு.வ உரை:பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

௪௱௬௰௪)

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.

மு.வ உரை:கல்லாதவனுடைய இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

௪௱௬௰௫)

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு.

மு.வ உரை:செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை:முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

௪௱௬௰௬)

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.

மு.வ உரை:ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

௪௱௬௰௭)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

மு.வ உரை:(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா உரை:ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

௪௱௬௰௮)

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்.

மு.வ உரை:தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

௪௱௬௰௯)

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.

மு.வ உரை:அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

௪௱௭௰)

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு.

மு.வ உரை:தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

Advertisement