» பெரியாரைத் துணைக்கோடல்

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௪௱௪௰௧)

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.

மு.வ உரை:அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

௪௱௪௰௨)

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.

மு.வ உரை:எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.

௪௱௪௰௩)

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.

மு.வ உரை:பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.

௪௱௪௰௪)

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.

மு.வ உரை:தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை:அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.

௪௱௪௰௫)

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

மு.வ உரை:தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.

௪௱௪௰௬)

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்.

மு.வ உரை:கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

௪௱௪௰௭)

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.

மு.வ உரை:கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை:தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?.

௪௱௪௰௮)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.

மு.வ உரை:கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

௪௱௪௰௯)

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை.

மு.வ உரை:முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

௪௱௫௰)

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.

மு.வ உரை:நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.

Advertisement