» வெருவந்தசெய்யாமை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௫௱௬௰௧)

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

மு.வ உரை:செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

௫௱௬௰௨)

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்.

மு.வ உரை:ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

௫௱௬௰௩)

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

மு.வ உரை:குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

௫௱௬௰௪)

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்.

மு.வ உரை:நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

௫௱௬௰௫)

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து.

மு.வ உரை:எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

சாலமன் பாப்பையா உரை:தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

௫௱௬௰௬)

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்.

மு.வ உரை:கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

சாலமன் பாப்பையா உரை:சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.

௫௱௬௰௭)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்.

மு.வ உரை:கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

௫௱௬௰௮)

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு.

மு.வ உரை:அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

சாலமன் பாப்பையா உரை:தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

௫௱௬௰௯)

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.

மு.வ உரை:முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

சாலமன் பாப்பையா உரை:நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

௫௱௭௰)

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை.

மு.வ உரை:கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

Advertisement