» குடிசெயல்வகை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௲௨௰௧)

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்.

மு.வ உரை:குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

௲௨௰௨)

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி.

மு.வ உரை:முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.

௲௨௰௩)

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.

மு.வ உரை:என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

சாலமன் பாப்பையா உரை:என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

௲௨௰௪)

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு.

மு.வ உரை:தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

சாலமன் பாப்பையா உரை:தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

௲௨௰௫)

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு.

மு.வ உரை:குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.

௲௨௰௬)

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

மு.வ உரை:ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை:ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.

௲௨௰௭)

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.

மு.வ உரை:போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

சாலமன் பாப்பையா உரை:போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.

௲௨௰௮)

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்.

மு.வ உரை:குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.

௲௨௰௯)

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு.

மு.வ உரை:தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

சாலமன் பாப்பையா உரை:தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?.

௲௩௰)

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி.

மு.வ உரை:துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.

Advertisement