» சான்றாண்மை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௯௱௮௰௧)

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

மு.வ உரை:கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.

௯௱௮௰௨)

குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

மு.வ உரை:சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.

சாலமன் பாப்பையா உரை:சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.

௯௱௮௰௩)

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்.

மு.வ உரை:அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

சாலமன் பாப்பையா உரை:மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

௯௱௮௰௪)

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.

மு.வ உரை:தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

சாலமன் பாப்பையா உரை:பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

௯௱௮௰௫)

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை.

மு.வ உரை:ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

சாலமன் பாப்பையா உரை:ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.

௯௱௮௰௬)

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்.

மு.வ உரை:சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.

௯௱௮௰௭)

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.

மு.வ உரை:துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?.

௯௱௮௰௮)

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்.

மு.வ உரை:சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

சாலமன் பாப்பையா உரை:சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

௯௱௮௰௯)

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்.

மு.வ உரை:சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

சாலமன் பாப்பையா உரை:சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.

௯௱௯௰)

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை.

மு.வ உரை:சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.

சாலமன் பாப்பையா உரை:சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.