» உயிர் மயங்கியல்

ஆசிரியர் : தொல்காப்பியர்.
௧)

அகர இறுதிப் பெயர் நிலை முன்னர்
வேற்றுமை அல் வழி க ச த ப தோன்றின்
தம்தம் ஒத்த ஒற்று இடை மிகுமே

௨)

வினையெஞ்சுகிளவியும் உவமக் கிளவியும்
என என் எச்சமும் சுட்டின் இறுதியும்
ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே

௩)

சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின்
ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும்

௪)

ய வ முன் வரினே வகரம் ஒற்றும்

௫)

உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது

௬)

நீட வருதல் செய்யுளுள் உரித்தே

௭)

சாவ என்னும் செய என் எச்சத்து
இறுதி வகரம் கெடுதலும் உரித்தே

௮)

அன்ன என்னும் உவமக் கிளவியும்
அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்
செய்ம்மன என்னும் தொழில் இறு சொல்லும்
ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்
செய்த என்னும் பெயரெஞ்சுகிளவியும்
செய்யிய என்னும் வினையெஞ்சுகிளவியும்
அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்
பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட
அன்றி அனைத்தும் இயல்பு என மொழிப

௯)

வாழிய என்னும் செய என் கிளவி
இறுதி யகரம் கெடுதலும் உரித்தே

௰)

உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்

௰௧)

பலவற்று இறுதி நீடு மொழி உளவே
செய்யுள் கண்ணிய தொடர்மொழியான

௰௨)

தொடர் அல் இறுதி தம் முன் தாம் வரின்
லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்தே

௰௩)

வல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றும்

௰௪)

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே

௰௫)

மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே

௰௬)

மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை

௰௭)

அத்து அவண் வரினும் வரை நிலை இன்றே

௰௮)

பலவற்று இறுதி உருபு இயல் நிலையும்

௰௯)

ஆகார இறுதி அகர இயற்றே

௨௰)

செய்யா என்னும் வினையெஞ்சுகிளவியும்
அவ் இயல் திரியாது என்மனார் புலவர்

௨௰௧)

உம்மை எஞ்சிய இரு பெயர்த் தொகைமொழி
மெய்ம்மையாக அகரம் மிகுமே

௨௰௨)

ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
யா என் வினாவும் பலவற்று இறுதியும்
ஏவல் குறித்த உரையசை மியாவும்
தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு
அன்றி அனைத்தும் இயல்பு என மொழிப

௨௰௩)

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே

௨௰௪)

குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்
அறியத் தோன்றும் அகரக் கிளவி

௨௰௫)

இரா என் கிளவிக்கு அகரம் இல்லை

௨௰௬)

நிலா என் கிளவி அத்தொடு சிவணும்

௨௰௭)

யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்
ஆ முப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே

௨௰௮)

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை

௨௰௯)

மாமரக் கிளவியும் ஆவும் மாவும்
ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன
அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா
னகரம் ஒற்றும் ஆவும் மாவும்

௩௰)

ஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே

௩௰௧)

ஆன் முன் வரூஉம் ஈகார பகரம்
தான் மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே

௩௰௨)

குறியதன் இறுதிச் சினை கெட உகரம்
அறிய வருதல் செய்யுளுள் உரித்தே

௩௰௩)

இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே

௩௰௪)

இனி அணி என்னும் காலையும் இடனும்
வினையெஞ்சுகிளவியும் சுட்டும் அன்ன

௩௰௫)

இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி
நின்ற இகரம் உகரம் ஆதல்
தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே

௩௰௬)

சுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே

௩௰௭)

பதக்கு முன் வரினே தூணிக் கிளவி
முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே

௩௰௮)

உரி வரு காலை நாழிக் கிளவி
இறுதி இகரம் மெய்யொடும் கெடுமே
டகாரம் ஒற்றும் ஆவயினான

௩௰௯)

பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு
அத்தும் இன்னும் சாரியை ஆகும்

௪௰)

வளி என வரூஉம் பூதக் கிளவியும்
அவ் இயல் நிலையல் செவ்விது என்ப

௪௰௧)

உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே

௪௰௨)

புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை

௪௰௩)

ஏனைப் புளிப் பெயர் மெல்லெழுத்து மிகுமே

௪௰௪)

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை
ஒல்வழி அறிதல் வழக்கத்தான

௪௰௫)

நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு
ஆன் இடை வருதல் ஐயம் இன்றே

௪௰௬)

திங்கள் முன் வரின் இக்கே சாரியை

௪௰௭)

ஈகார இறுதி ஆகார இயற்றே

௪௰௮)

நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும்
மீ என மரீஇய இடம் வரை கிளவியும்
ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்

௪௰௯)

இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம்
உடன் நிலை மொழியும் உள என மொழிப

௫௰)

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே

௫௰௧)

நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும்
ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்

௫௰௨)

உகர இறுதி அகர இயற்றே

௫௰௩)

சுட்டின் முன்னரும் அத் தொழிற்று ஆகும்

௫௰௪)

ஏனவை வரினே மேல் நிலை இயல்பே

௫௰௫)

சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே

௫௰௬)

அன்று வரு காலை ஆ ஆகுதலும்
ஐ வரு காலை மெய் வரைந்து கெடுதலும்
செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப

௫௰௭)

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே

௫௰௮)

எருவும் செருவும் அம்மொடு சிவணி
திரிபு இடன் உடைய தெரியும் காலை
அம்மின் மகரம் செருவயின் கெடுமே
தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை

௫௰௯)

ழகர உகரம் நீடு இடன் உடைத்தே
உகரம் வருதல் ஆவயினான

௬௰)

ஒடுமரக் கிளவி உதி மர இயற்றே

௬௰௧)

சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்
ஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை

௬௰௨)

ஊகார இறுதி ஆகார இயற்றே

௬௰௩)

வினையெஞ்சுகிளவிக்கும் முன்னிலை மொழிக்கும்
நினையும் காலை அவ் வகை வரையார்

௬௰௪)

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே

௬௰௫)

குற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும்
நிற்றல் வேண்டும் உகரக் கிளவி

௬௰௬)

பூ என் ஒரு பெயர் ஆயியல்பு இன்றே
ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே

௬௰௭)

ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும்

௬௰௮)

அக்கு என் சாரியை பெறுதலும் உரித்தே
தக்க வழி அறிதல் வழக்கத்தான

௬௰௯)

ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும்
இன் இடை வரினும் மானம் இல்லை

௭௰)

எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா
முன்னிலை மொழிய என்மனார் புலவர்
தேற்றமும் சிறப்பும் அல் வழியான

௭௰௧)

தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்
மேற் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா

௭௰௨)

ஏகார இறுதி ஊகார இயற்றே

௭௰௩)

மாறு கொள் எச்சமும் வினாவும் எண்ணும்
கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்

௭௰௪)

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே

௭௰௫)

ஏ என் இறுதிக்கு எகரம் வருமே

௭௰௬)

சே என் மரப்பெயர் ஒடுமர இயற்றே

௭௰௭)

பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும்

௭௰௮)

ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே

௭௰௯)

சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்

௮௰)

விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்
ஆ முப் பெயரும் சேமர இயல

௮௰௧)

பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்
நினையும் காலை அம்மொடு சிவணும்
ஐ என் இறுதி அரை வரைந்து கெடுமே
மெய் அவண் ஒழிய என்மனார் புலவர்

௮௰௨)

பனையின் முன்னர் அட்டு வரு காலை
நிலை இன்று ஆகும் ஐ என் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயினான

௮௰௩)

கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப
கடி நிலை இன்றே வல்லெழுத்து மிகுதி

௮௰௪)

திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன

௮௰௫)

மழை என் கிளவி வளி இயல் நிலையும்

௮௰௬)

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
ஐ என் இறுதி அவா முன் வரினே
மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர்
டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும்

௮௰௭)

ஓகார இறுதி ஏகார இயற்றே

௮௰௮)

மாறு கொள் எச்சமும் வினாவும் ஐயமும்
கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்

௮௰௯)

ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே

௯௰)

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே
ஒகரம் வருதல் ஆவயினான

௯௰௧)

இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும்

௯௰௨)

உருபு இயல் நிலையும் மொழியுமார் உளவே
ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்

௯௰௩)

ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர்
அல்வழியானும் வேற்றுமைக்கண்ணும்
வல்லெழுத்து மிகுதல் வரை நிலை இன்றே
அவ் இரு ஈற்றும் உகரம் வருதல்
செவ்விது என்ப சிறந்திசினோரே