» விளி மரபு

ஆசிரியர் : தொல்காப்பியர்.
௧)

விளி எனப்படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய என்ப

௨)

அவ்வே,
இவ் என அறிதற்கு மெய் பெறக் கிளப்ப

௩)

அவைதாம்,
இ உ ஐ ஓ என்னும் இறுதி
அப் பால் நான்கே உயர்திணை மருங்கின்
மெய்ப் பொருள் சுட்டிய விளி கொள் பெயரே

௪)

அவற்றுள்,
இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும்

௫)

ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்

௬)

உகரம்தானே குற்றியலுகரம்

௭)

ஏனை உயிரே உயர்திணை மருங்கின்
தாம் விளி கொள்ளா என்மனார் புலவர்

௮)

அளபெடை மிகூஉம் இகர இறு பெயர்
இயற்கைய ஆகும் செயற்கைய என்ப

௯)

முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி
ஆவொடு வருதற்கு உரியவும் உளவே

௰)

அண்மைச் சொல்லே இயற்கை ஆகும்

௰௧)

ன ர ல ள என்னும் அந் நான்கு என்ப
புள்ளி இறுதி விளி கொள் பெயரே

௰௨)

ஏனைப் புள்ளி ஈறு விளி கொள்ளா

௰௩)

அன் என் இறுதி ஆ ஆகும்மே

௰௪)

அண்மைச் சொல்லிற்கு அகரமும் ஆகும்

௰௫)

ஆன் என் இறுதி இயற்கை ஆகும்

௰௬)

தொழிலின் கூறும் ஆன் என் இறுதி
ஆய் ஆகும்மே விளிவயினான

௰௭)

பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே

௰௮)

அளபெடைப் பெயரே அளபெடை இயல

௰௯)

முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே

௨௰)

தான் என் பெயரும் சுட்டுமுதற் பெயரும்
யான் என் பெயரும் வினாவின் பெயரும்
அன்றி அனைத்தும் விளி கோள் இலவே

௨௰௧)

ஆரும் அருவும் ஈரொடு சிவணும்

௨௰௨)

தொழிற்பெயர் ஆயின் ஏகாரம் வருதலும்
வழுக்கு இன்று என்மனார் வயங்கியோரே

௨௰௩)

பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே

௨௰௪)

அளபெடைப் பெயரே அளபெடை இயல

௨௰௫)

சுட்டுமுதற் பெயரே முன் கிளந்தன்ன

௨௰௬)

நும்மின் திரிபெயர் வினாவின் பெயர் என்று
அம் முறை இரண்டும் அவற்று இயல்பு இயலும்

௨௰௭)

எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே
நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும்

௨௰௮)

அயல் நெடிது ஆயின் இயற்கை ஆகும்

௨௰௯)

வினையினும் பண்பினும்
நினையத் தோன்றும் ஆள் என் இறுதி
ஆய் ஆகும்மே விளிவயினான

௩௰)

முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல

௩௰௧)

சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்
முன் கிளந்தன்ன என்மனார் புலவர்

௩௰௨)

அளபெடைப் பெயரே அளபெடை இயல

௩௰௩)

கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர்
விளம்பிய நெறிய விளிக்கும் காலை

௩௰௪)

புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
விளி நிலை பெறூஉம் காலம் தோன்றின்
தெளி நிலை உடைய ஏகாரம் வரலே

௩௰௫)

உள எனப்பட்ட எல்லாப் பெயரும்
அளபு இறந்தனவே விளிக்கும் காலை
சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான

௩௰௬)

அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்
அம் முறைப்பெயரொடு சிவணாது ஆயினும்
விளியொடு கொள்ப தெளியுமோரே

௩௰௭)

த ந நு எ என அவை முதல் ஆகித்
தன்மை குறித்த ன ர ள என் இறுதியும்
அன்ன பிறவும் பெயர் நிலை வரினே
இன்மை வேண்டும் விளியொடு கொளலே