» அகத்திணையியல்

ஆசிரியர் : தொல்காப்பியர்.
௧)

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழு திணை என்ப

௨)

அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய
படு திரை வையம் பாத்திய பண்பே

௩)

முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலும் காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடும் காலை

௪)

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே

௫)

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

௬)

காரும் மாலையும் முல்லை

௭)

குறிஞ்சி,
கூதிர் யாமம் என்மனார் புலவர்

௮)

பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப

௯)

வைகறை விடியல் மருதம்

௰)

எற்பாடு,
நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்

௰௧)

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே

௰௨)

பின்பனிதானும் உரித்து என மொழிப

௰௩)

இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
உரியது ஆகும் என்மனார் புலவர்

௰௪)

திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே
நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப
புலன் நன்கு உணர்ந்த புலமையோரே

௰௫)

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே

௰௬)

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே

௰௭)

கொண்டு தலைக்கழிதலும் பிரிந்து அவண் இரங்கலும்
உண்டு என மொழிப ஓர் இடத்தான

௰௮)

கலந்த பொழுதும் காட்சியும் அன்ன

௰௯)

முதல் எனப்படுவது ஆயிரு வகைத்தே

௨௰)

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ் வகை பிறவும் கரு என மொழிப

௨௰௧)

எந் நில மருங்கின் பூவும் புள்ளும்
அந் நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்

௨௰௨)

பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய
திணைதொறும் மரீஇய திணை நிலைப் பெயரே

௨௰௩)

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே

௨௰௪)

ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை
ஆனா வகைய திணை நிலைப் பெயரே

௨௰௫)

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இல புறத்து என்மனார் புலவர்

௨௰௬)

ஏவல் மரபின் ஏனோரும் உரியர்
ஆகிய நிலைமை அவரும் அன்னர்

௨௰௭)

ஓதல் பகையே தூது இவை பிரிவே

௨௰௮)

அவற்றுள்,
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன

௨௰௯)

தானே சேறலும் தன்னொடு சிவணிய
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே

௩௰)

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையான்
பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்
இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவே

௩௰௧)

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே

௩௰௨)

மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப

௩௰௩)

உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான

௩௰௪)

வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே

௩௰௫)

பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே

௩௰௬)

உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான

௩௰௭)

முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை

௩௰௮)

எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான

௩௰௯)

தன்னும் அவனும் அவளும் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம்
நன்மை தீமை அச்சம் சார்தல் என்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி
தோழி தேஎத்தும் கண்டோ ர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ் வழி உரிய

௪௰)

ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்
தாமே செல்லும் தாயரும் உளரே

௪௰௧)

அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே

௪௰௨)

தலைவரும் விழும நிலை எடுத்து உரைப்பினும்
போக்கற்கண்ணும் விடுத்தற்கண்ணும்
நீக்கலின் வந்த தம் உறு விழுமமும்
வாய்மையும் பொய்ம்மையும் கண்டோ ற் சுட்டித்
தாய் நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை
அழிந்தது களை என மொழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு
என்று இவை எல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றும் தோழி மேன

௪௰௩)

பொழுதும் ஆறும் உட்கு வரத் தோன்றி
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்
ஊரது சார்பும் செல்லும் தேயமும்
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்
புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு
அழிந்து எதிர் கூறி விடுப்பினும் ஆங்கத்
தாய் நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்
சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும்
கண்டோ ர் மொழிதல் கண்டது என்ப

௪௰௪)

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்
ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும்
இடைச் சுர மருங்கின் அவள் தமர் எய்திக்
கடைக் கொண்டு பெயர்தலின் கலங்கு அஞர் எய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட
அப் பால் பட்ட ஒரு திறத்தானும்
நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்
வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு
ஊதியம் கருதிய ஒரு திறத்தானும்
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்
தூது இடையிட்ட வகையினானும்
ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்
மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும்
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்
பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்
காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்
பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி
இரத்தலும் தெளித்தலும் என இரு வகையொடு
உரைத் திற நாட்டம் கிழவோன் மேன

௪௰௫)

எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே

௪௰௬)

நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்

௪௰௭)

நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே

௪௰௮)

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப

௪௰௯)

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாது ஆகும் திணை உணர் வகையே

௫௰)

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்
கொள்ளும் என்ப குறி அறிந்தோரே

௫௰௧)

உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிக என
உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்

௫௰௨)

ஏனை உவமம் தான் உணர் வகைத்தே

௫௰௩)

காமம் சாலா இளமையோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே

௫௰௪)

ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே

௫௰௫)

முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப

௫௰௬)

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரியது ஆகும் என்மனார் புலவர்

௫௰௭)

மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்

௫௰௮)

புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே

Advertisement