» உவமயியல்

ஆசிரியர் : தொல்காப்பியர்.
௧)

வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகை பெற வந்த உவமத் தோற்றம்

௨)

விரவியும் வரூஉம் மரபின என்ப

௩)

உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை

௪)

சிறப்பே நலனே காதல் வலியொடு
அந் நால் பண்பும் நிலைக்களம் என்ப

௫)

கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும்

௬)

முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய

௭)

சுட்டிக் கூறா உவமம் ஆயின்
பொருள் எதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே

௮)

உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்

௯)

பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருள் அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும்

௰)

பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்
குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய

௰௧)

அவைதாம்,
அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப
என்ன மான என்றவை எனாஅ
ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க
என்ற வியப்ப என்றவை எனாஅ
எள்ள விழைய விறப்ப நிகர்ப்ப
கள்ள கடுப்ப ஆங்கவை எனாஅ
காய்ப்ப மதிப்ப தகைய மருள
மாற்ற மறுப்ப ஆங்கவை எனாஅ
புல்ல பொருவ பொற்ப போல
வெல்ல வீழ ஆங்கவை எனாஅ
நாட நளிய நடுங்க நந்த
ஓட புரைய என்றவை எனாஅ
ஆறு ஆறு அவையும் அன்ன பிறவும்
கூறும் காலைப் பல் குறிப்பினவே

௰௨)

அன்ன ஆங்க மான விறப்ப
என்ன உறழ தகைய நோக்கொடு
கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்

௰௩)

அன்ன என் கிளவி பிறவொடும் சிவணும்

௰௪)

எள்ள விழைய புல்ல பொருவ
கள்ள மதிப்ப வெல்ல வீழ
என்று ஆங்கு எட்டே பயனிலை உவமம்

௰௫)

கடுப்ப ஏய்ப்ப மருள புரைய
ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப என்று
அப் பால் எட்டே மெய்ப்பால் உவமம்

௰௬)

போல மறுப்ப ஒப்ப காய்த்த
நேர வியப்ப நளிய நந்த என்று
ஒத்து வரு கிளவி உருவின் உவமம்

௰௭)

தம்தம் மரபின் தோன்றுமன் பொருளே

௰௮)

நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே

௰௯)

பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்

வழி மருங்கு அறியத் தோன்றும் என்ப

௨௰)

உவமப் பொருளின் உற்றது உணரும்
தெளி மருங்கு உளவே திறத்து இயலான

௨௰௧)

உவமப் பொருளை உணரும் காலை மரீஇய மரபின் வழக்கொடு வருமே

௨௰௨)

இரட்டைக்கிளவி இரட்டை வழித்தே

௨௰௩)

பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி
முன்னை மரபின் கூறும் காலை
துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே

௨௰௪)

உவமப் போலி ஐந்து என மொழிப

௨௰௫)

தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின்
வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்
பிறப்பினும் வரூஉம் திறத்த என்ப

௨௰௬)

கிழவி சொல்லின் அவள் அறி கிளவி

௨௰௭)

தோழிக்கு ஆயின் நிலம் பெயர்ந்து உரையாது

௨௰௮)

கிழவோற்கு ஆயின் உரனொடு கிளக்கும்

௨௰௯)

ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே

௩௰)

இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும்
உவம மருங்கின் தோன்றும் என்ப

௩௰௧)

கிழவோட்கு உவமம் ஈர் இடத்து உரித்தே

௩௰௨)

கிழவோற்கு ஆயின் இடம் வரைவு இன்றே

௩௰௩)

தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்
கூறுதற்கு உரியர் கொள் வழியான

௩௰௪)

வேறுபட வந்த உவமத் தோற்றம்
கூறிய மருங்கின் கொள் வழிக் கொளாஅல்

௩௰௫)

ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே

௩௰௬)

உவமத் தன்மையும் உரித்து என மொழிப
பயனிலை புரிந்த வழக்கத்தான

௩௰௭)

தடுமாறு உவமம் கடி வரை இன்றே

௩௰௮)

அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே
நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை சுண்ணம்
வரன் முறை வந்த மூன்று அலங்கடையே