» செய்யுளியல்

ஆசிரியர் : தொல்காப்பியர்.
௧)

மாத்திரை எழுத்து இயல் அசை வகை எனாஅ
யாத்த சீரே அடி யாப்பு எனாஅ
மரபே தூக்கே தொடை வகை எனாஅ
நோக்கே பாவே அளவு இயல் எனாஅ
திணையே கைகோள் கூற்று வகை எனாஅ
கேட்போர் களனே கால வகை எனாஅ
பயனே மெய்ப்பாடு எச்ச வகை எனாஅ
முன்னம் பொருளே துறை வகை எனாஅ
மாட்டே வண்ணமொடு யாப்பு இயல் வகையின்
ஆறு தலை இட்ட அந் நால் ஐந்தும்
அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப்
பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ
நல் இசைப் புலவர் செய்யுள் உறுப்பு என
வல்லிதின் கூறி வகுத்து உரைத்தனரே

௨)

அவற்றுள்,
மாத்திரை வகையும் எழுத்து இயல் வகையும்
மேல் கிளந்தனவே என்மனார் புலவர்

௩)

குறிலே நெடிலே குறில் இணை குறில் நெடில்
ஒற்றொடு வருதலொடு மெய்ப் பட நாடி
நேரும் நிரையும் என்றிசின் பெயரே

௪)

இரு வகை உகரமொடு இயைந்தவை வரினே
நேர்பும் நிரைபும் ஆகும் என்ப
குறில் இணை உகரம் அல் வழியான

௫)

இயலசை முதல் இரண்டு ஏனவை உரியசை

௬)

தனிக் குறில் முதலசை மொழி சிதைந்து ஆகாது

௭)

ஒற்று எழுத்து இயற்றே குற்றியலிகரம்

௮)

முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ
நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும்

௯)

குற்றியலுகரமும் முற்றியலுகரமும்
ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே

௰)

அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே

௰௧)

ஈர் அசை கொண்டும் மூ அசை புணர்த்தும்
சீர் இயைந்து இற்றது சீர் எனப்படுமே

௰௨)

இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை
உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர்

௰௩)

முன் நிரை உறினும் அன்ன ஆகும்

௰௪)

நேர் அவண் நிற்பின் இயற்சீர்ப் பால

௰௫)

இயலசை ஈற்று முன் உரியசை வரினே
நிரையசை இயல ஆகும் என்ப

௰௬)

அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே

௰௭)

ஒற்று அளபெடுப்பினும் அற்று என மொழிப

௰௮)

இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின்
உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப

௰௯)

வஞ்சிச் சீர் என வகை பெற்றனவே
வெண் சீர் அல்லா மூ அசை என்ப

௨௰)

தன் பா அல் வழி தான் அடைவு இன்றே

௨௰௧)

வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய

௨௰௨)

வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர்
இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே

௨௰௩)

கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ

௨௰௪)

கலித்தளை அடிவயின் நேர் ஈற்று இயற்சீர்
நிலைக்கு உரித்து அன்றே தெரியுமோர்க்கே

௨௰௫)

வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா

௨௰௬)

இசைநிலை நிறைய நிற்குவது ஆயின்
அசைநிலை வரையார் சீர் நிலை பெறவே

௨௰௭)

இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே
தளை வகை சிதையாத் தன்மையான

௨௰௮)

வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே

௨௰௯)

இன் சீர் இயைய வருகுவது ஆயின்
வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே

௩௰)

அந் நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர்
ஒன்றுதல் உடைய ஓர் ஒரு வழியே

௩௰௧)

நாற் சீர் கொண்டது அடி எனப்படுமே

௩௰௨)

அடி உள்ளனவே தளையொடு தொடையே

௩௰௩)

அடி இறந்து வருதல் இல் என மொழிப

௩௰௪)

அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே

௩௰௫)

நால் எழுத்து ஆதி ஆக ஆறு எழுத்து
ஏறிய நிலத்தே குறளடி என்ப

௩௰௬)

ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே
ஈர் எழுத்து ஏற்றம் அவ் வழியான

௩௰௭)

பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே
ஒத்த நால் எழுத்து ஏற்றலங்கடையே

௩௰௮)

மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப

௩௰௯)

மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப

௪௰)

சீர் நிலைதானே ஐந்து எழுத்து இறவாது
நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும்

௪௰௧)

எழுத்து அளவு எஞ்சினும் சீர் நிலைதானே
குன்றலும் மிகுதலுsம் இல் என மொழிப

௪௰௨)

உயிர் இல் எழுத்தும் எண்ணப்படாஅ
உயிர்த் திறம் இயக்கம் இன்மையான

௪௰௩)

வஞ்சி அடியே இரு சீர்த்து ஆகும்

௪௰௪)

தன் சீர் எழுத்தின் சின்மை மூன்றே

௪௰௫)

முச் சீரானும் வரும் இடன் உடைத்தே

௪௰௬)

அசை கூன் ஆகும் அவ்வயினான

௪௰௭)

சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே

௪௰௮)

ஐ வகை அடியும் விரிக்கும் காலை
மெய் வகை அமைந்த பதினேழ் நிலத்தும்
எழுபது வகையின் வழு இல ஆகி
அறுநூற்று இருபத்தைந்து ஆகும்மே

௪௰௯)

ஆங்கனம் விரிப்பின் அளவு இறந்தனவே
பாங்குற உணர்ந்தோர் பன்னும் காலை

௫௰)

ஐ வகை அடியும் ஆசிரியக்கு உரிய

௫௰௧)

விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே

௫௰௨)

தன் சீர் வகையினும் தளை நிலை வகையினும்
இன் சீர் வகையின் ஐந்து அடிக்கும் உரிய
தன் சீர் உள்வழித் தளை வகை வேண்டா

௫௰௩)

சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின்
ஆசிரியத் தளை என்று அறியல் வேண்டும்

௫௰௪)

குறளடி முதலா அளவடி காறும்
உறழ் நிலை இலவே வஞ்சிக்கு என்ப

௫௰௫)

அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய
தளை வகை ஒன்றாத் தன்மையான

௫௰௬)

அளவடி மிகுதி உளப்படத் தோன்றி
இரு நெடிலடியும் கலியிற்கு உரிய

௫௰௭)

நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும்
வரை நிலை இன்றே அவ் அடிக்கு என்ப

௫௰௮)

விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே

௫௰௯)

இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்
நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே

௬௰)

வெண்தளை விரவியும் ஆசிரியம் விரவியும்
ஐஞ் சீர் அடியும் உள என மொழிப

௬௰௧)

அறு சீர் அடியே ஆசிரியத் தளையொடு
நெறி பெற்று வரூஉம் நேரடி முன்னே

௬௰௨)

எழு சீர் அடியே முடுகியல் நடக்கும்

௬௰௩)

முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும்

௬௰௪)

ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும்
மூ வகை அடியும் முன்னுதல் இலவே

௬௰௫)

ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின்
தோற்றம் முச் சீர்த்து ஆகும் என்ப

௬௰௬)

இடையும் வரையார் தொடை உணர்வோரே

௬௰௭)

முச் சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும்

௬௰௮)

வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே

௬௰௯)

வெண்பாட்டு ஈற்று அடி முச் சீர்த்து ஆகும்
அசை சீர்த்து ஆகும் அவ் வழியான

௭௰)

நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும்
சீர் ஏற்று இறூஉம் இயற்கைய என்ப

௭௰௧)

நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும்
வரைவு இன்று என்ப வாய் மொழிப் புலவர்

௭௰௨)

எழு சீர் இறுதி ஆசிரியம் கலியே

௭௰௩)

வெண்பா இயலினும் பண்புற முடியும்

௭௰௪)

எழுத்து முதலா ஈண்டிய அடியின்
குறித்த பொருளை முடிய நாட்டல்
யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர்

௭௰௫)

பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்

௭௰௬)

மரபேதானும்,
நாற் சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று

௭௰௭)

அகவல் என்பது ஆசிரியம்மே

௭௰௮)

அதாஅன்று என்ப வெண்பா யாப்பே

௭௰௯)

துள்ளல் ஓசை கலி என மொழிப

௮௰)

தூங்கல் ஓசை வஞ்சி ஆகும்

௮௰௧)

மருட்பா ஏனை இரு சார் அல்லது
தான் இது என்னும் தனிநிலை இன்றே

௮௰௨)

அவ் இயல் அல்லது பாட்டு ஆங்குக் கிளவார்

௮௰௩)

தூக்கு இயல் வகையே ஆங்கு என மொழிப

௮௰௪)

மோனை எதுகை முரணே இயைபு என
நால் நெறி மரபின தொடை வகை என்ப

௮௰௫)

அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும்

௮௰௬)

பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும்
அமைத்தனர் தெரியின் அவையுமார் உளவே

௮௰௭)

நிரல் நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும்
மொழிந்தவற்று இயலான் முற்றும் என்ப

௮௰௮)

அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை

௮௰௯)

அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும்

௯௰)

ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய

௯௰௧)

மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே

௯௰௨)

இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே

௯௰௩)

அளபு எழின் அவையே அளபெடைத் தொடையே

௯௰௪)

ஒரு சீர் இடையிட்டு எதுகை ஆயின்
பொழிப்பு என மொழிதல் புலவர் ஆறே

௯௰௫)

இரு சீர் இடையிடின் ஒரூஉ என மொழிப

௯௰௬)

சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்
சொல் இயற் புலவர் அது செந்தொடை என்ப

௯௰௭)

மெய் பெறு மரபின் தொடை வகைதாமே
ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ற்றொடு
தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று
ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே

௯௰௮)

தெரிந்தனர் விரிப்பின் வரம்பு இல ஆகும்

௯௰௯)

தொடை வகை நிலையே ஆங்கு என மொழிப

௱)

மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே

௱௧)

ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என
நால் இயற்று என்ப பா வகை விரியே

௱௨)

அந் நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய
மும் முதல் பொருட்கும் உரிய என்ப

௱௩)

பா விரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்
ஆசிரியப்பா வெண்பா என்று ஆங்கு
ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப

௱௪)

ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை
வெண்பா நடைத்தே கலி என மொழிப

௱௫)

வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே

௱௬)

வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப
பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ

௱௭)

வாயுறை வாழ்த்தே அவையடக்கியலே
செவியறிவுறூஉ என அவையும் அன்ன

௱௮)

வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும் போல வெஞ் சொல்
தாங்குதல் இன்றி வழி நனி பயக்கும் என்று
ஓம்படைக் கிளவியின் வாயுறுத்தற்றே

௱௯)

அவையடக்கியலே அரில் தபத் தெரியின்
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று
எல்லா மாந்தர்க்கும் வழி மொழிந்தன்றே

௱௧௰)

செவியுறைதானே,
பொங்குதல் இன்றி புரையோர் நாப்பண்
அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே

௱௧௰௧)

ஒத்தாழிசையும் மண்டில யாப்பும்
குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப

௱௧௰௨)

குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும்

௱௧௰௩)

மண்டிலம் குட்டம் என்று இவை இரண்டும்
செந்தூக்கு இயல என்மனார் புலவர்

௱௧௰௪)

நெடுவெண்பாட்டே குறுவெண்பாட்டே
கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுளொடு
ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின

௱௧௰௫)

கைக்கிளைதானே வெண்பா ஆகி
ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே

௱௧௰௬)

பரிபாடல்லே தொகை நிலை வகையின்
இது பா என்னும் இயல் நெறி இன்றி
பொதுவாய் நிற்றற்கும் உரித்து என மொழிப

௱௧௰௭)

கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு
செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக
காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும்

௱௧௰௮)

சொற்சீர் அடியும் முடுகியல் அடியும்
அப் பா நிலைமைக்கு உரிய ஆகும்

௱௧௰௯)

கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும்
முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்
மொழி அசை ஆகியும் வழி அசை புணர்ந்தும்
சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே

௱௨௰)

அங்கதம்தானே அரில் தபத் தெரியின்
செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே

௱௨௰௧)

செம்பொருள் ஆயின வசை எனப்படுமே

௱௨௰௨)

மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும்

௱௨௰௩)

செய்யுள்தாமே இரண்டு என மொழிப

௱௨௰௪)

துகளொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின்
செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர்

௱௨௰௫)

வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின்
அங்கதச் செய்யுள் என்மனார் புலவர்

௱௨௰௬)

ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டே
கொச்சகம் உறழொடு கலி நால் வகைத்தே

௱௨௰௭)

அவற்றுள்,
ஒத்தாழிசைக்கலி இரு வகைத்து ஆகும்

௱௨௰௮)

இடைநிலைப்பாட்டே தரவு போக்கு அடை என
நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப

௱௨௰௯)

தரவேதானும் நால் அடி இழிபு ஆய்
ஆறு இரண்டு உயர்வும் பிறவும் பெறுமே

௱௩௰)

இடைநிலைப்பாட்டே,
தரவு அகப்பட்ட மரபினது என்ப

௱௩௰௧)

அடை நிலைக் கிளவி தாழிசைப் பின்னர்
நடை நவின்று ஒழுகும் ஆங்கு என் கிளவி

௱௩௰௨)

போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே
தரவு இயல் ஒத்தும் அதன் அகப்படுமே
புரை தீர் இறுதி நிலை உரைத்தன்றே

௱௩௰௩)

ஏனை ஒன்றே,
தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே

௱௩௰௪)

அதுவே,
வண்ணகம் ஒருபோகு என இரு வகைத்தே

௱௩௰௫)

வண்ணகம்தானே,
தரவே தாழிசை எண்ணே வாரம் என்று
அந் நால் வகையின் தோன்றும் என்ப

௱௩௰௬)

தரவேதானும்,
நான்கும் ஆறும் எட்டும் என்ற
நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும்

௱௩௰௭)

ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே
தரவின் சுருங்கித் தோன்றும் என்ப

௱௩௰௮)

அடக்கு இயல் வாரம் தரவொடு ஒக்கும்

௱௩௰௯)

முதல் தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே

௱௪௰)

எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே
சின்னம் அல்லாக் காலையான

௱௪௰௧)

ஒருபோகு இயற்கையும் இரு வகைத்து ஆகும்

௱௪௰௨)

கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று
ஒப்ப நாடி உணர்தல் வேண்டும்

௱௪௰௩)

தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும்
தாழிசை இன்றித் தரவு உடைத்து ஆகியும்
எண் இடை இட்டுச் சின்னம் குன்றியும்
அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும்
யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது
கொச்சக ஒருபோகு ஆகும் என்ப

௱௪௰௪)

ஒருபான் சிறுமை இரட்டி அதன் உயர்பே

௱௪௰௫)

அம்போதரங்கம் அறுபதிற்று அடித்தே
செம்பால் வாரம் சிறுமைக்கு எல்லை

௱௪௰௬)

எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண்
அடக்கியல் வாரமொடு அந் நிலைக்கு உரித்தே

௱௪௰௭)

ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான்
திரிபு இன்றி வருவது கலிவெண்பாட்டே

௱௪௰௮)

தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும்
ஐஞ் சீர் அடுக்கியும் ஆறு மெய் பெற்றும்
வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்
பாநிலை வகையே கொச்சகக் கலி என
நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே

௱௪௰௯)

கூற்றும் மாற்றமும் இடை இடை மிடைந்தும்
போக்கு இன்றாகல் உறழ்கலிக்கு இயல்பே

௱௫௰)

ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை
ஆயிரம் ஆகும் இழிபு மூன்று அடியே

௱௫௰௧)

நெடுவெண்பாட்டே முந் நால் அடித்தே
குறுவெண்பாட்டின் அளவு எழு சீரே

௱௫௰௨)

அங்கதப் பாட்டு அளவு அவற்றொடு ஒக்கும்

௱௫௰௩)

கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள்
செவியறி வாயுறை புறநிலை என்று இவை
தொகு நிலை மரபின் அடி இல என்ப

௱௫௰௪)

புறநிலை வாயுறை செவியறிவுறூஉ எனத்
திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின்
வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும்
பண்புற முடியும் பாவின என்ப

௱௫௰௫)

பரிபாடல்லே,
நால் ஈர் ஐம்பது உயர்பு அடி ஆக
ஐ ஐந்து ஆகும் இழிபு அடிக்கு எல்லை

௱௫௰௬)

அளவியல் வகையே அனை வகைப்படுமே

௱௫௰௭)

எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்
அடி வரை இல்லன ஆறு என மொழிப

௱௫௰௮)

அவைதாம்,
நூலினான உரையினான
நொடியொடு புணர்ந்த பிசியினான
ஏது நுதலிய முதுமொழியான
மறை மொழி கிளந்த மந்திரத்தான
கூற்று இடை வைத்த குறிப்பினான

௱௫௰௯)

அவற்றுள்,
நூல் எனப்படுவது நுவலும் காலை
முதலும் முடிவும் மாறுகோள் இன்றி
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே

௱௬௰)

அதுவேதானும் ஒரு நால் வகைத்தே

௱௬௰௧)

ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்
இன மொழி கிளந்த ஓத்தினானும்
பொது மொழி கிளந்த படலத்தானும்
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று
ஆங்கு அனை மரபின் இயலும் என்ப

௱௬௰௨)

அவற்றுள்,
சூத்திரம்தானே
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே

௱௬௰௩)

நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓர் இனப் பொருளை ஒரு வழி வைப்பது
ஓத்து என மொழிப உயர் மொழிப் புலவர்

௱௬௰௪)

ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்

௱௬௰௫)

மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின்
தோன்று மொழிப் புலவர் அது பிண்டம் என்ப

௱௬௰௬)

பாட்டு இடை வைத்த குறிப்பினானும்
பா இன்று எழுந்த கிளவியானும்
பொருள் மரபு இல்லாப் பொய்ம்மொழியானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்று
உரை வகை நடையே நான்கு என மொழிப

௱௬௰௭)

அதுவேதானும் இரு வகைத்து ஆகும்

௱௬௰௮)

ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே
ஒன்றே யார்க்கும் வரை நிலை இன்றே

௱௬௰௯)

ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்
தோன்றுவது கிளந்த துணிவினானும்
என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே

௱௭௰)

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப

௱௭௰௧)

நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும்
மறைமொழிதானே மந்திரம் என்ப

௱௭௰௨)

எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகி
பொருட்புறத்ததுவே குறிப்பு மொழியே

௱௭௰௩)

பாட்டிடைக் கலந்த பொருள ஆகி
பாட்டின் இயல பண்ணத்திய்யே

௱௭௰௪)

அதுவேதானும் பிசியொடு மானும்

௱௭௰௫)

அடி நிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும்
அடி இகந்து வரினும் கடி வரை இன்றே

௱௭௰௬)

கிளர் இயல் வகையின் கிளந்தன தெரியின்
அளவியல் வகையே அனை வகைப்படுமே

௱௭௰௭)

கைக்கிளை முதலா ஏழ் பெருந் திணையும்
முன் கிளந்தனவே முறையினான

௱௭௰௮)

காமப் புணர்ச்சியும் இடம் தலைப்படலும்
பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும் என்று
ஆங்க நால் வகையினும் அடைந்த சார்பொடு
மறை என மொழிதல் மறையோர் ஆறே

௱௭௰௯)

மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும்
இவை முதலாகிய இயல் நெறி திரியாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பு எனப்படுமே

௱௮௰)

மெய் பெறும் அவையே கைகோள் வகையே

௱௮௰௧)

பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
அளவு இயல் மரபின் அறு வகையோரும்
களவின் கிளவிக்கு உரியர் என்ப

௱௮௰௨)

பாணன் கூத்தன் விறலி பரத்தை
ஆணம் சான்ற அறிவர் கண்டோ ர்
பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇ
தொல் நெறி மரபின் கற்பிற்கு உரியர்

௱௮௰௩)

ஊரும் அயலும் சேரியோரும்
நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும்
கொண்டெடுத்து மொழியப்படுதல் அல்லது
கூற்று அவண் இன்மை யாப்புறத் தோன்றும்

௱௮௰௪)

கிழவன்தன்னொடும் கிழத்திதன்னொடும்
நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது

௱௮௰௫)

ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு
கண்டோ ர் மொழிதல் கண்டது என்ப

௱௮௰௬)

இடைச் சுரமருங்கின் கிழவன் கிழத்தியொடு
வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன்

௱௮௰௭)

ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு
மொழிந்தாங்கு உரியர் முன்னத்தின் எடுத்தே

௱௮௰௮)

மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும்
நினையும் காலை கேட்குநர் அவரே

௱௮௰௯)

பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே

௱௯௰)

பரத்தை வாயில் என இரு வீற்றும்
கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயன் இலவே

௱௯௰௧)

வாயில் உசாவே தம்முள் உரிய

௱௯௰௨)

ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
அவை அல பிறவும் நுதலிய நெறியான்
சொல்லுந போலவும் கேட்குந போலவும்
சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்

௱௯௰௩)

ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர் இயல் முடியும்
கரும நிகழ்ச்சி இடம் என மொழிப

௱௯௰௪)

இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்

௱௯௰௫)

இது நனி பயக்கும் இதன் மாறு என்னும்
தொகு நிலைக் கிளவி பயன் எனப்படுமே

௱௯௰௬)

உய்த்துணர்வு இன்றி தலைவரு பொருண்மையின்
மெய்ப் பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும்

௱௯௰௭)

எண் வகை இயல் நெறி பிழையாதாகி
முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே

௱௯௰௮)

சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை
புல்லிய கிளவி எச்சம் ஆகும்

௱௯௰௯)

இவ் இடத்து இம் மொழி இவர் இவர்க்கு உரிய என்று
அவ் இடத்து அவர் அவர்க்கு உரைப்பது முன்னம்

௨௱)

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
ஒழுக்கமும் என்று இவை இழுக்கு நெறி இன்றி
இது ஆகு இத் திணைக்கு உரிப் பொருள் என்னாது
பொதுவாய் நிற்றல் பொருள் வகை என்ப

௨௱௧)

அவ் அம் மக்களும் விலங்கும் அன்றிப்
பிற அவண் வரினும் திறவதின் நாடி
தம்தம் இயலின் மரபொடு முடியின்
அத் திறம்தானே துறை எனப்படுமே

௨௱௨)

அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
இயன்று பொருள் முடிய தந்தனர் உணர்த்தல்
மாட்டு என மொழிப பாட்டியல் வழக்கின்

௨௱௩)

மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி
உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே

௨௱௪)

வண்ணம்தாமே நால் ஐந்து என்ப

௨௱௫)

அவைதாம்,
பாஅ வண்ணம் தாஅ வண்ணம்
வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்
இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்
நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்
சித்திர வண்ணம் நலிபு வண்ணம்
அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்
ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்
எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்
தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்
உருட்டு வண்ணம் முடுகு வண்ணம் என்று
ஆங்கு என மொழிப அறிந்திசினோரே

௨௱௬)

அவற்றுள்,
பாஅ வண்ணம்
சொற்சீர்த்து ஆகி நூற்பால் பயிலும்

௨௱௭)

தாஅ வண்ணம்
இடையிட்டு வந்த எதுகைத்து ஆகும்

௨௱௮)

வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே

௨௱௯)

மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே

௨௱௧௰)

இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே

௨௱௧௰௧)

அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்

௨௱௧௰௨)

நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்

௨௱௧௰௩)

குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்

௨௱௧௰௪)

சித்திர வண்ணம்
நெடியவும் குறியவும் நேர்ந்து உடன் வருமே

௨௱௧௰௫)

நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்

௨௱௧௰௬)

அகப்பாட்டு வண்ணம்
முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே

௨௱௧௰௭)

புறப்பாட்டு வண்ணம்
முடிந்தது போன்று முடியாதாகும்

௨௱௧௰௮)

ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும்

௨௱௧௰௯)

ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்

௨௱௨௰)

எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்

௨௱௨௰௧)

அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும்

௨௱௨௰௨)

தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்

௨௱௨௰௩)

ஏந்தல் வண்ணம்
சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும்

௨௱௨௰௪)

உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்

௨௱௨௰௫)

முடுகு வண்ணம்
அடி இறந்து ஓடி அதன் ஓரற்றே

௨௱௨௰௬)

வண்ணம்தாமே இவை என மொழிப

௨௱௨௰௭)

வனப்பு இயல்தானே வகுக்கும் காலை
சில் மென் மொழியான் தாய பனுவலின்
அம்மைதானே அடி நிமிர்வு இன்றே

௨௱௨௰௮)

செய்யுள் மொழியான் சீர் புனைந்து யாப்பின்
அவ் வகைதானே அழகு எனப்படுமே

௨௱௨௰௯)

தொன்மைதானே
உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே

௨௱௩௰)

இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்
தோல் என மொழிப தொல் மொழிப் புலவர்

௨௱௩௰௧)

விருந்தேதானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே

௨௱௩௰௨)

ஞகாரை முதலா ளகாரை ஈற்றுப்
புள்ளி இறுதி இயைபு எனப்படுமே

௨௱௩௰௩)

சேரி மொழியான் செவ்விதின் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே

௨௱௩௰௪)

ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது
குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து
ஓங்கிய மொழியான் ஆங்கு அவண் மொழியின்
இழைபின் இலக்கணம் இயைந்ததாகும்

௨௱௩௰௫)

செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
வருவ உள எனினும் வந்தவற்று இயலான்
திரிபு இன்றி முடித்தல் தெள்ளியோர் கடனே

Advertisement