» பேதைமை

௩௱௩௰௧)

கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர்ப் படிந்தாடி யற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு

௩௱௩௰௨)

பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு

௩௱௩௰௩)

குலந்தவம் கல்வி குடிநம்முப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்

௩௱௩௰௪)

கன்னனி நல்ல கடையாய மாக்களின்
சொன்னனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலேன்
றுற்றவர்க்குத் தாமுதவ லான்

௩௱௩௰௫)

பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து

௩௱௩௰௬)

தங்கள் மரபில்லார் பின்சென்று தாமவரை
எங்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப
கற்கிள்ளிக் கையிழந் தற்று

௩௱௩௰௭)

ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும் - யாதும்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்

௩௱௩௰௮)

நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் - எல்லாம்
இனியார்தோள் சேரார் இசைபட வாழார்
முனியார்கொல் தாம்வாழும் நாள்

௩௱௩௰௯)

விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு

௩௱௪௰)

கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்