» எச்ச மரபு

௬௰)

வேற்றுமை யும்மை வினைபண் புவமையுந்
தோற்றிய வன்மொழியுந் தொக்கவிடத் - தேற்ற
இருசொல்லும் ஒன்றாம் இலக்கணத்தாற் பல்சொல்
ஒருசொல்லாய் சேரலு முண்டு

௬௰௧)

உருபுவமை யும்மை விரியி னடைவே
யுருபுவமை யும்மைத் தொகையாம் - ஒருகாலந்
தோன்றின் வினைத்தொகையாம் பண்புமிரு பேரொட்டுந்
தோன்றுமேற் பண்புத்தொகை

௬௰௨)

ஏனைத் தொகைச்சொற்கள் ஐந்தின் இறுதிக்கண்
ஆன பெயர்தோன்றின் அன்மொழியாம் - மானனையாய்
செய்யுமெனும் பேரெச்சத் தீற்றின்மிசைச் சில்லுகர
மெய்யொடும்போம் ஒற்றொடும்போம் வேறு

௬௰௩)

முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இருமொழியும்
அன்மொழியு மென்றிவற்றில் ஆம்பொருள்கண் - முன்மொழிதான்
கால மிடத்தாற் கருத்தோடுஞ் சேர்த்தறிதன்
மேலையோர் கண்ட விதி

௬௰௪)

உலவி லுயிர்திணைமே லும்மைத் தொகைதான்
பலர்சொன் னடைத்தாய்ப் பயிலுஞ் - சிலைநுதலாய்
முற்றும்மை யெச்சப் படுதலுமுண் டாமிடைச்சொன்
நிற்றலுமுண் டிறு திரிந்து

௬௰௫)

இன்னரென முன்னத்தாற் சொல்லுத லென்றசென்ற
வென்னு மவையன்றி யிட்டுரைத்த - தன்வினையாற்
செய்யப் படும்பொருளைச் செய்ததெனச் சொல்லுதலும்
எய்தப் படும்வழக்கிற்கு கீங்கு

௬௰௬)

மெலித்தல்குறுக்கல் விரித்தல் தொகுத்தல்
வலித்தலே நீட்டல் வரினும் - ஒலிக்கும்
வரிவளாய் தொல்குறைச்சொல் வந்திடினும் உண்மை
தெரிதலாங் கற்றோர் செயல்

௬௰௭)

அடிமொழி சுண்ண நிரனிறை விற்பூட்
டடிமறி யாற்று வரவுந் - துடியடையாய்
தாப்பிசை தாவின் மொழிமாற் றளைமறி
பாப்புப் பொருளொடொன் பான்

௬௰௮)

சொல்லாற் றெரிதல் குறிப்பினாற் றோன்றுதலென்
றெல்லாப் பொருளு மிரண்டாகும் - மெல்லியலாய்
தொன்மொழியுன் மந்திரமுஞ் சொற்பொருள் தோன்றுதலின்
இன்மையு முண்மையுமா மீங்கு

௬௰௯)

முந்துரைத்த காலங்கண் முன்று மயங்கிடினும்
வந்தொருமை பன்மை மயங்கினும் - பைந்தொடியாய்
சான்றோர் வழக்கினையுஞ் செய்யுளுஞ் சார்ந்தியலின்
ஆன்ற மரபா மது

௭௰)

புல்லா வெழுத்தின் கிளவிப் பொருள்படினும்
இல்லா இலக்கணத்த தென்றொழிக - நல்லாய்
மொழிந்த மொழிப்பகுதிக் கண்ணே மொழியா
தொழிந்தனவுஞ் சார்த்தி யுரை

Advertisement