» பெயர் மரபு

௨௰௯)

பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
இயற்சொன் முதனான்கு மெய்தும் - பெயர்ச்சொல்
உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் ஒண்விரவுப்
பெயரு மெனவுரைப்ப ரீங்கு

௩௰)

சுட்டே வினாவொப்பே பண்பே தொகுனளர
வொட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண்ணிலப்பேர் - இட்டிடையாய்
கூடியற்பெர் காலங் குலந்தொழிலின் போமகடூஉ
ஆடூஉ உயர்திணைப்பே ராம்

௩௰௧)

பகரு முறைசினைப் பல்லோர்நம் மூர்ந்த
இகரஐ கார இறுதி - இகரமிறுஞ்
சாதிப்பெண் பேர்மாந்தர் மக்களுந் தன்மையுடன்
ஆதி யுயர்திணைப்பே ராம்

௩௰௨)

ஆதியினிற் சுட்டாம் உகரஐ காரப்பேர்
ஓதியவெண் ணின்பேர் உவமைப்பேர் - தீதிலாச்
சாதிப்பேர் சார்ந்த வினாவுறுப்பின் பேர்தலத்தோர்
ஓதிய அஃறிணைக்கா முற்று

௩௰௩)

இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று
மயக்கிலா மூன்றனையும் வைத்துக் - கயற்கண்ணாய்
பெண்ணாணே பன்மை யெருமையொடு பேர்த்துறழ
நண்ணும் விரவுப்பேர் நன்கு

௩௰௪)

தந்தைதாய் என்பனவுஞ் சார்ந்த முறைமையால்
வந்த மகன்மகளோ டாங்கவையு - முந்திய
தாந்தானும் நீநீயிர் என்பனவுந் தாழ்குழலாய்
ஆய்ந்த விரவுப்பே ராம்

௩௰௫)

பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுவோடா
நீராகு நீயிர் எவனென்ப - தோருங்கால்
என்னென்னை யென்றாகும் யாமுதற்பே ராமுதலாம்
அன்ன பொழுதுபோ தாம்

௩௰௬)

பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பாறோன்றா
வாங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் - ஓங்கிய
கள்ளொடு வந்தால் இருதிணைக்கும் பன்மைப்பால்
ஒள்ளிழையாய் தோன்றலு முண்டு

௩௰௭)

ஆய்ந்த வுயர்திணைபேர் ஆவோவாஞ் செய்யுளிடை
ஏய்ந்தநிகழ் காலத் தியல்வினையால் - வாய்ந்த
உயர்திணைப் பாலொருமை தோன்றும்விர வுப்பேர்
இயலும் வழக்கி னிடத்து

Advertisement