» வினை மரபு

௩௰௮)

இறப்பு நிகழ்வெதிர்வாங் காலங்க ளேற்றுங்
குறிப்பும் உருபேற்றல் கூடாத் - திறத்தவுமாய்
முற்றெச்சம் என்றிரண்டாய் மூவகைத்தாய் மூன்றிடத்து
நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து

௩௰௯)

அம்மாமெம் மேமுங் கடதறமேல் ஆங்கணைந்த
உம்மும் உளப்பாட்டுத் தன்மையாந் - தம்மொடு
புல்லுங் குடுதுறவும் என்னேனும் பொற்றொடியாய்
அல்லுந் தனித்தன்மை யாம்

௪௰)

ஆங்குரைத்த அன்னானும் அள்ளாலும் அர்ஆர்ப
பாங்குடைய முப்பாற் படர்கையாந் - தேங்குழலாய்
யாரேனுஞ்சொன் முப்பாற்கு மெய்தும் ஒருவரென்ப
தோரு மிருபாற் குறித்து

௪௰௧)

சொன்னஅ ஆவத் துடுறுவும் அஃறிணையின்
பன்மை பெருமைப் படர்க்கையாம் - பின்னை
யெவென்ன வினாவவ் விருபாற் பொருட்குஞ்
சிவணுதலாந் தொன்னூல் தெளிவு

௪௰௨)

மின்னும்இர் ஈரும் விளம்பும் இருதிணையின்
முன்னிலை பன்மைக்காம் மொய்குழலாய் - சொன்ன
ஒருமைக்கண் முன்னிலையாம் இஐஆய் உண்சேர்
பொருவென் பனவும் புகல்

௪௰௩)

செய்து செயச்செய்யாச் செய்யிய செய்தெனச்
செய்பு செயின்செயற் கென்பனவும்- மொய்குழலாய்
பின்முன்பான் பாக்கும் பிறவும் வினையெச்சச்
சொன்முன் வகுத்தோர் துணிவு

௪௰௪)

ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல
வேறில்லை யுண்டு வியங்கோளுந் தேறும்
இடமூன்றோ டெய்தி யிருதிணையைம் பாலும்
உடனொன்றிச் சேறலு முண்டு

௪௰௫)

சாற்றும் பெயர்வினை யெச்சங்கள் தாமடுக்கித்
தேற்றல் எதிர்மறுத்துச் சொன்னாலும் - ஏற்றபொருள்
குன்றாச் சிலசொல் லிடைவந்து கூடியுடன்
இன்றாதன் மெய்ந்நூ னெறி

௪௰௬)

நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன்
கடியன் மதத்தன் கரியன் - தொடியனென
ஒண்ணுதலாய் மற்றையவும் எண்ணியுயிர் திணையின்
நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு

௪௰௭)

கரிதரிது தீது கடிது நெடிது
பெரிதுடைத்து வெய்து பிறிது - பரிதென்ப
ஆயிழாய் பன்மையினுஞ் செல்ல அஃறிணையின்
மேய வினைகுறிப்பா மிக்கு

௪௰௮)

சென்று முதலோடு சேருஞ் சினைவினையும்
அன்றியா வோவாகி யாயோயாய் - நின்றனவும்
மொய்குழலாய் முன்னிலைமுன் ஈஏயும் எண்டொகையும்
மெய்தும் கடப்பாட் டின

௪௰௯)

இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல்
வசையிலா மூன்று வரம்பாம் - அசைநிலை
ஆய்ந்த வொருசொல் லடுக்கிரண்டாந் தாம்பிரியா
வேந்திரட்டைச் சொற்க ளிரட்டு

Advertisement