» வேற்றுமை மரபு

௰௫)

காண்டகுபே ரையொடுகு இன்னது கண்விளியென்
றீண்டுரைப்பின் வேற்றுமை யெட்டாகு - மூண்டவைதாந்
தோற்றும் பெயர்முன்னர் ஏழுந் தொடர்ந்தியலும்
ஏற்ற பொருள்செய் யிடத்து

௰௬)

பெயரெழுவாய் வேற்றுமையாம் பின்பதுதா னாறு
பயனிலையும் ஏற்கப் படுதல் - கயல்விழியாய்
ஈற்றின் உறுபாறும் ஏற்றன்முக் காலமுந்
தோற்றாமை நிற்ற றுணிபு

௰௭)

ஐயென் னுருபிரண் டாவ ததுவினையும்
எய்துங் குறிப்பும் இயலவருந் - தையலாய்
ஆனொடு மூன்றா வதுதான் வினைமுதலும்
ஏனைக் கருவியுமாம் ஈங்கு

௰௮)

ஓதுங் குகர உருபுநான் காவதஃது
யாதிடத்தும் ஈபொருளை யேற்குமாங் - கோதிலாது
இன்னுருபைந் தாவ திதனினித் தன்மைத்தி
தென்னு மொருநான் கிடத்து

௰௯)

அதுவென்ப தாறாம் உருபாம் இதனது
இதுவென் கிழமையிரண் டெய்தும் - விதிமுறையாற்
கண்ணென்பது ஏழாம் உருபாகும் காலநில
நண்ணும் வினையிடத்து நன்கு

Advertisement