» அகவல்

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

அரசன் அமைச்சர்பால் அறிவிக்கின்றான்;
'அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்
தமிழிலக் கியங்கள் தமிழிலக்கணங்கள்
அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்;
ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்;
அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள்
கவிதை புனையக் கற்றாளில்லை.
மலரும், பாடும் வண்டும், தளிரும்,
மலையும், கடலும், வாவியும், ஓடையும்,
விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும்,
மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும்
தமிழின் அமுதத் தன்மையும், நன்மையும்,
காலைஅம் பரிதியும், மாலை மதியமும்
கண்ணையும் மனத்தையும் கவர்வன; அதனால்
என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்
புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்குச்
செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்!
ஏற்றஒர் ஆசான் எங்குள்ளான்?
தோற்றியவாறு சொல்க அமைச்சரே!'

Advertisement