» எண்சீர் விருத்தம்-1

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

தலைமை அமைச்சன் புகல்வான்: 'எனதுமன்னா,
சகலகலை வல்லவன்; இவ்வுலகோர் போற்றும்
புலவன்; உயர்கவிஞன்; அவன்பேர் உதாரன்!
புதல்விக்குத் தக்க உபாத்தியாயன் அன்னோன்.
இலையிந்த நாட்டினிலே அவனை ஒப்பார்!
எனினும், அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன்.
குலமகளை அன்னவன்பால் கற்க விட்டால்
குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்!

ஆனாலும் நானிதற்கோர் மார்க்கம் சொல்வேன்:
அமுதவல்லி உதாரனிடம் கற்கும் போது
தேனிதழாள் தனைஅவனும், அவனைப் பெண்ணும்
தெரிந்துகொள்ள முடியாமல் திரை விடுக்க!
பானல்விழி மங்கையிடம் 'உதாரனுக்குப்
பார்வையில்லை குருட'னென்று சொல்லி வைக்க!
ஞானமுறும் உதாரனிடம் 'அமுதவல்லி
நலிகுஷ்ட ரோகி' என எச்சரிக்க!

தார்வேந்தன் இதுகேட்டான்; வியந்தான்! 'ஆம் ஆம்
தந்திரத்தால் ஆகாத தொன்று மில்லை;
பேர்வாய்ந்த உதாரனைப்போய் அழைப்பீர்' என்றான்.
பேச்சுவல்ல அமைச்சர் பலர்சென் றழைத்தார்.
தேர்வாய்ந்த புவிராஜன் போலே யந்தச்
செந்தமிழ்த்தீங் கவிராஜன் உதாரன் வந்தான்.
பார்வேந்தன் நிகழ்த்தினான்; உதாரன் கேட்டுப்
'பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம்' என்றான்

Advertisement