» எண்சீர் விருத்தம்-2

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

அமுதவல்லி காத்திருந்த மேடை யண்டை
அழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே,
இமையாது நோக்கினான் முழு நிலாவை!
இருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்!
சுமைசுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம்
தூண்டிவிட ஆ ஆ ஆ என்றான்; வாணி
அமைத்திட்டாள் நற்கவிதை! மழைபோற் பெய்தான்!
அத்தனையும் கேட்டிருந்தாள் அமுதவல்லி:

'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில்முழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!

அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்!
அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்!
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்!
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந்தானோ!

உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு
நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை
நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!

உன்னைஎன திருவிழியாற் காணுகின்றேன்;
ஒளிபெறுகின் றேன்; இருளை ஒதுக்கு கின்றேன்;
இன்னலெலாம் தவிர்க்கின்றேன்; களிகொள் கின்றேன்
எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்!
அன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவு முற்றி
ஆகாயம் அளவுமொரு காதல் கொண்டேன்!
இன்பமெனும் பால்நுரையே! குளிர்விளக்கே!
எனை இழந்தேன், உன்னெழிலில் கலந்ததாலே!'