» எண்சீர் விருத்தம்-3

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

'இன்னொன்று கேளாயோ அமுதவல்லி!
என்னிடத்தில் உன்தந்தை' என் மகட்கு
முன்னொன்று தீவினையால் பெருநோய் வந்து
மூண்டதெ'னச் சொல்லிவைத்தான்! அதனா லன்றோ
மின்ஒன்று பெண்ணென்று புவியில் வந்து
விளைந்ததுபோல் விளைந்தஉன தழகுமேனி
இன்றுவரை நான்பார்க்க எண்ண வில்லை'
என்றுரைத்தான், வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்

'காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ?
கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?
பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ?
நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால்
நிறைதொழிலா ளர்களுணர்வு மறைந்து போமோ?
சீரழகே! தீந்தமிழே! உனைஎன் கண்ணைத்
திரையிட்டு மறைத்தார்கள்!' என்று சொன்னான்