» சிந்து கண்ணி

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

மன்னவன் ஆணைப்படி-கன்னி
மாடத்தைச் சேர்ந்ததொரு
பன்னரும் பூஞ்சோலை-நடுப்
பாங்கில் ஓர் பொன்மேடை!
அன்னதோர் மேடையிலே-திரை
ஆர்ந்த மறைவினிலே
மின்னொளி கேட்டிருப்பாள்-கவி
வேந்தன் உரைத்திடுவான்!

யாப்புமுறை உரைப்பான்-அணி
யாவும் உரைத்திடுவான்;
பாப்புனை தற்கான-அநு
பவம்பல புகல்வான்.
தீர்ப்புற அன்னவளும்-ஆசு
சித்திரம் நன்மதுரம்
சேர்ப்புறு வித்தாரம்-எனும்
தீங்கவிதை யனைத்தும்.

கற்றுவர லானாள்-அது
கால பரியந்தம்
சற்றும் அவன்முகத்தை-அவள்
சந்திக்க வில்லை! விழி
அற்றவனைப் பார்த்தால்-ஓர்¢
அபசகுன மென்றே!
உற்றதோர் நோயுடையாள்-என்று
உதாரனும் பார்த்ததில்லை!

இவ்விதம் நாட்கள்பலப்-பல
ஏகிட ஓர் தினத்தில்
வெவ்விழி வேலுடையாள்-அந்த
மேடையிற் காத்திருந்தாள்.
அவ்வமயந் தனிலே-விண்
அத்தனையும் ஒளியால்
கவ்வி உயர்ந்ததுபார்-இருட்
காட்டை அழித்த நிலா!

Advertisement