» பஃறொடை வெண்பா

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

'வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும்
மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க

ஆனந்தத் தென்றல்வந் தாரத் தழுவுவதும்
நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ?

சித்திரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக்
கத்திரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,

சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை
முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும்,

உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்?
தணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்!

குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற்
பிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ?

என்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல்
சென்றுதன் நெஞ்சம் தெரிவித்தாள் சேல்விழியாள்!

'நன்று மடமயிலே? நான்பசியால் வாடுகின்றேன்;
குன்றுபோல் அன்னம் குவித்திருக்கு தென்னெதிரில்!

உண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும்
வண்ணமுடிச் செல்வாக்கும் வந்து மறிக்குதடி!

எண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான்
உண்ணும் மணிக்குளத்தில் ஓடிக் கலக்காமல்

நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்; அன்னவற்றில்
மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம்

நீயன்றோ பெண்ணே! நினைப்பை அகற்றிவிடு!
நாயென்றே எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு!

வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொந்தாதே!
பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே!

கண்ணாடிக் கன்னத்தைக் காட்டிஎன் உள்ளத்தைப்
புண்ணாக்கிப் போடாதே; போபோ மறைந்துவிடு!

காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன்
சாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ!

பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால்
நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக்கு என்செய்வேன்?

கொஞ்சு தமிழ்த்தேன் குடித்துவிட அட்டியில்லை
அஞ்சுவ தஞ்சாமை பேதமையன் றோஅணங்கே?

ஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக்
காணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ?

பட்டாளச் சக்ரவர்த்தி பார்த்தாலும் உன்சிரிப்புக்
கட்டாணி முத்துக்குக் காலில்விழ மாட்டாரோ?

என்றழுதான் விம்மி இளையான், கவியரசன்.
குன்றும் இரங்கும்! கொடும்பாம்பும் நெஞ்சிளகும்!

ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர்
பாழான நெஞ்சும் சிலசமயம் பார்த்துஇரங்கும்!

சித்தும் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு
ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்?

ரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம் ஏனிரங்கும்?
அத்தருணம் அந்த அமுல்லி ஈதுசொல்வாள்:

'வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை
நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்,

காளைஉன் கைகள்எனைக் காவாமல் போகட்டும்,
தாளை அடைந்தஇத் தையல்உள்ளம் மாறாதே!
ஆதரவு காட்டாமல் ஐய! எனைவிடுத்தால்
பாதர¬க்ஷ போலுன்றன் பாதம் தொடர்வதன்றி,

வேறு கதியறியேன்; வேந்தன் சதுர்வருணம்
சீறும்எனில் இந்தஉடல் தீர்ந்தபின்னும் சீறிடுமோ?

ஆரத் தழுவி அடுத்தவினா டிக்குள்உயிர்
தீரவரும் எனிலும் தேன்போல் வரவேற்பேன்!

அன்றியும்என் காதல் அமுதே! நமதுள்ளம்
ஒன்றுபட்ட பின்னர் உயர்வென்ன தாழ்வென்ன?

நாட்டின் இளவரசி நான்ஒருத்தி! ஆதலினால்
கோட்டை அரசன்எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை!

கோல்வேந்தன் என்காதற் கொன்றவனைக் கொல்லவந்தால்,
சேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காத்திடுவேன்!

சாதிஉயர் வென்றும் தனத்தால் உயர்வென்றும்,
போதாக் குறைக்குப் பொதுத்தொழிலாளர்சமுகம்

மெத்த இனிவென்றும், மிகுபெரும்ப லோரைஎல்லாம்
கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்

பாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர்
ஆவி களையேனும் அர்ப்பணம்செய்வோம்! இதனை

நெஞ்சார உன்மேலே நேரிழையாள் கொண்டுள்ள
மிஞ்சுகின்ற காதலின்மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்!

இன்னும் என்ன?' என்றாள் உதாரன் விரைந்தோடி
அன்னத்தைத் தூக்கியே ஆரத்தழுவினான்.

இனப உலகில் இருவர்களும் நாள் கழித்தார்
பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலாம்

மாறுபடக் கண்டு மனம் பதறித் தோழியர்கள்
வேறு ஒழியின்றி வேந்தனிடம் ஓடியே

'மன்னவனே! உன் அருமை மங்கை அமுதவல்லி
தன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ,

காதல்எனும் இனபக் கடலில் குளித்துவிட்ட
மாதிரியாய்த் தோன்றுகிறாள், மற்றிதனை மேன்மைச்

சமூகத்தில் விண்ணப்பம் சாதித்தோம்' என்றார்.
அமைதி யுடைய அரசன் அதன்உண்மை

கண்டறிய வேண்டுமென்று கன்னிகைமா டத்தருகே
அண்டியிருந் தான்இரவில் ஆரும் அறியாமல்!

வந்த உதாரன்எழில் மங்கைக்கு கைலாகு
தந்து, தமிழில் தனிக்காதலைக் கலந்து

பேசினதும், காத்திருந்த பெண்ணரசி வேல்விழியை
வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும்

கண்டான் அரசன்! கடுகடுத்தான்! ஆயிரந்தேள்
மண்டையிலே மாட்டியது போல மனமுளைந்து

மாளிகைக்குச் சென்றான் மறுநாள் விடியலிலே
வாளில் விஷம்பூசி வைத்திருக்கச் சொல்லிவிட்டுச்

சேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர
ஏவினான், அவ்வா றிழுத்துவந்தார் வேந்தனிடம்.

இச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்;
அச்சமயம் எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார்.

ஆர்ந்த கவியின் அரசனுயிர் இன்றோடு
தீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும்.

ஈடற்ற நற்கவிஞன் இந்நிலைமை, அக்கன்னி
மாடத்தில் உள்ளஎழில் மங்கைக்கும் எட்டியதாம்.

அங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான்,
சிங்காதனத்திலே சேர்ந்து:
'கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி
கற்க உன்பால் விடுத்தேன்-அட!
குற்றம் புரிந்தனையா இல்லையா இதை
மட்டும் உரைத்து விடு!
வெற்றி எட்டுதிக்கும் முற்றிலுமே சென்று
மேவிட ஆள்பவன் நான்- அட
இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை
என்னென்றுதான் நினைத்தாய்?

வாள்பிடித் தேபுவி ஆளுமி ராசர்என்
தாள்பிடித்தே கிடப்பார்!- அட
ஆள் பிடித்தால் பிடி ஒன்றிருப்பாய் என்ன
ஆணவமோ உனக்கு?
மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை
வெல்லத் தகுந்தவனோ?-இல்லை!
மாள்வதற்கே இன்று மாள்வதற்கே' என்று
மன்னன் உரைத்திடவே.

மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்
வார்க்கும் மழைநாடா!-குற்றம்
ஆம்என்று நீயுரைத் தால்குற்றமே! குற்றம்
அன்றெனில் அவ்விதமே!
கோமகள் என்னைக் குறையிரந்தாள் அவள்
கொள்ளை வனப்பினிலே-எனைக்
காமனும் தள்ளிடக் காலிடறிற்றுக்
கவிழ்ந்தவண்ணம்வீழ்ந்தேன்!

பழகும் இருட்டினில் நானிருந்தேன் எதிர்
பால்நில வாயிரம்போல்-அவள்
அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்
அடியேன் செய்த தொன்று மில்லை.
பிழைபுரிந்தே னென்று தண்டனை போடுமுன்
பெற்று வளர்த்த உன்றன்
இழைபுரிச் சிற்றிடை அமுதவல்லிக் குள்ள
இன்னல் மறப்பதுண்டோ?'