» வேறு சிந்து கண்ணி

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

இவ்வித மாக உதாரனும்-தன
தின்குரலால் வெண்ணி லாவையே
திவ்விய வர்ணனை பாடவே-செவி
தேக்கிய கன்னங் கருங்குயில்,
'அவ்வறிஞன் கவி வல்லவன்-விழி
அற்றவ னாயின்; நிலாவினை
எவ்விதம் பார்த்தனன், பாடினன்?-இதில்
எத்துக்கள் உண்டெ'ன ஓடியே.

சாதுரியச் சொல் உதாரனை-அவன்
தாமரைக் கண்ணெடும் கண்டனள்!
ஓது மலைக் குலம்போலவே-அவன்
ஓங்கிய தோள்களைக் கண்டனள்!
'ஏதிது போன்றஓ ராண்எழில்-குறை
இன்றித் திருந்திய சித்திரம்?
சோதி நிலாவுக்கும் மாசுண்டாம்-இச்
சுந்தரனோ கறை ஒன்றிலான்!'

என்று வியப்புடன் நின்றனள்;-அந்த
ஏந்திழை தன்னெதிர் நின்றதைத்
தன்னிக ரற்ற உதாரனும்-கண்டு
தன்னை மறந்த வனாகியே
என்ன வியப்பது? வானிலே-இருந்
திட்டதோர் மாமதி மங்கையாய்
என்னெதுரே வந்து வாய்த்ததோ?-புவிக்
கேதிது போலொரு தண்ஒளி!

மின்னற் குலத்தில் விளைந்ததோ?-வான்
வில்லின் குலத்திற் பிறந்ததோ?
கன்னற் றமிழ்க்கவி வாணரின்-உளக்
கற்பனையே உருப் பெற்றதோ?
பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ?-ஒரு
பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ?'
என்று நினைத்த உதாரன்தான்-'நீ
யார்?' என்ற ஓர்உரை போக்கினான்.

'அமுதவல்லி யன்றோ!' என்றாள்-'அந்த
அமைச் சனும்முடி வேந்தனும்
நமைப் பிரித்திடும் எண்ணத்தால்-உனை
நாட்டம் இல்லாதவன் என்றனர்!
சமுச யப்பட நீஇன்று-மதி
தரிசன மதைப் பாடினை!
கமலங் கள்எனும் கண்ணுடன்-உனைக்
காணப் பெற்றதென் கண்' என்றாள்

Advertisement