» கடவுள் எங்கே இருக்கிறார்?

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்” லென்று ஹிரணியன் தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன்சொல்வான்;- தூணி லுள்ளான்
நாரா யணன்துரும்பி லுள்ளான்” என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை,
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை,
அல்லலில்லை அல்லலில்லை அல்ல லில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்ல லுண்டோ?

கேளப்பா,சீடனே! கழுதை யொன்றைக்
“கீழான” பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத்தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.

சுத்தஅறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்
சுத்தமண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டி ரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்து வீரே?

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்;