» குவளைக் கண்ணன் புகழ்

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

யாழ்ப்பாணத் தையனையென் னிடங்கொ ணர்ந்தான்,
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்,பார்மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்;
பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்,
பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்;
தீர்ப்பான சுருதிவழி தன்னிற் சேர்ந்தான்
சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார்.

மகத்தான முனிவரெலாம் கண்ணன் தோழர்;
வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்;
மகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரர்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்,
ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்து
சாமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான்
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்;
“அன்றேயப் போதேவீ டதுவே வீடு”.

பாங்கான குருக்களைநாம் போற்றிக் கொண்டோம்,
பாரினிலே பயந்தெளிந்தோம்; பாச மற்றோம்
நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்;
நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம் அப்பா!
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்,
தாரணியில் பலருள்ளார்,தருக்கி வீழ்வார்;
ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என் றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர்.